Show all

அதிரல் மலர்! சங்ககால மலர்கள் தொன்னூன்றொன்பதின் வரிசையில்

சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து  விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக இரண்டாவதாக அதிரல் மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை.
 
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: அதிரல் மலரின் தாவரம் மரத்தில் படரும் கொடி வகையை சேர்ந்தது ஆகும். இதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் காணப்படுகின்றன. இது ஆற்றுமணலில் படர்ந்து வளரும். இதனைத் தனியாகக் கட்டியும் பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் மகளிர் அணிந்து கொள்வர், ஏன்பது சங்கப் பாடல்கள் இந்த மலர்கள் குறித்து தெரிவிக்கின்ற செய்தியாகும்.

அதிரல் வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும். இதனைப் புனலிக்கொடி என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர். இது இளவேளிற்காலத்தில் மிகுதியாக மலரும். அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும். வெண்மை நிறமாக விளங்கும் அதிரல் மொட்டுக்களின் மீது மெல்லிய வரிகள் காணப்படும். அவை வெருகின் கூரிய எயிறுகளைப் போன்றிருக்கும் என்று அடிகள் உணர்த்துகின்றன.

காட்டுமல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை இது. அழகிய வெள்ளை நிறத்தில் ஆறேழு இதழ்களும், தளிர் பச்சையில் சிறு காம்பும், அடர் பச்சையில் நீள் வட்ட இலைகளும், மலருமாக அழகாக இருக்கும். மணமில்லா மலராக இருந்தாலும், வெண் நிறமும், நீண்ட இதழ்களுமாய், பார்க்க அழகாக இருக்கும்.

ஊதல்காற்றில் அசைவது போலப் பாசறையில் நள்ளிரவில் பாண்டியனின் மெய்க்காவலர் அங்குமிங்கும் சென்றுவந்தார்கள் என்றும், 
நடுகல் பதுக்கையை அதிரல் கொடி மூடிக் கிடந்தது என்று என்றும், 
தலைவன் தலைவியை அதிரல் அங்கண்ணி! என விளிக்கிறான் என்றும்,
அதிரல் வேனில் காலத்தில் பூக்கும் என்றும்,
நள்ளிரவில் மலரும் அதிரல் என்றும்,
அதிரலும் பாதிரியும் மணலில் கொட்டிக்கிடக்கும் என்றும்
வைகை ஆற்று மணலில் அதிரல் மலர் கொட்டிக் கிடக்கும் என்றும்,
அதிரல் வழங்கிய கொடை போலக் கொட்டிக் கிடக்கும் என்றும்
அதிரல் மொட்டுகள் குயிலின் வாயைப்போல் இருக்கும் என்றும்
அதிரல் பூவானது காட்டுப் பூனையின் பல்வரிசை போல முகை விடும் என்றும்
இப்படி அதிரல் மலர் குறித்து ஏராளமான செய்திகளைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.