Show all

தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! தங்கள் நிலைப்பாடு என்ன?

தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! தங்கள் நிலைப்பாடு என்ன? இப்படியொரு வினாவை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் உடனடியாகச் சொன்ன விடை செய்யலாம் என்பதே. நல்லவேளை அவர் உடனடியாக என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. ஆனாலும் விளக்கத் தேடலில் என்னால் ஈடுபடாமல் இருக்க முடியவில்லை. தேடலில் வாய்த்த விடையை, உலகத் தாய்மொழி நாளான இன்று, பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி 

09,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! என்ற தேடலுக்கு முன்பு- அமிழ்து, அமுது மற்றும் அமிர்து இவற்றில் எது சரியான தமிழ்ச்சொல் என்கிற தேடல் தேவையாக அமைந்துள்ளது.

அமிழ்து என்பதே சரியான தமிழ்ச் சொல். இச்சொல் எவ்வாறு பிறந்தது என முதுமுனைவர் இரா.இளங்குமரனார் பின்வருமாறு கூறுகின்றார்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது “அம், அம்” என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது. அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது. எனவே அமிழ்து என்ற சொல் தாய்ப்பால் (உணவு) என்ற பொருள் பெறுகின்றது என்று தெளிவு படுத்துகின்றார்.

மேலும் இரா.இளங்குமரனார் அவர்கள் கூறும்போது, அமிழ்து என்ற சொல் தோன்றியதைப் பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். என்ன? தமிழ், தமிழ் என்று ஓசை வருகின்றதா! அதுதான் ‘தமிழ்’ என்ற சொல் தோன்றிய வரலாறு. அமிழ்து, அமிழ்து, அமிழ்து- தமிழ்,தமிழ், தமிழ்.

அம்மா தன்குழந்தைக்கு தன்குருதியைப் பாலாக்கித் தருவது அமிழ்தம். ‘அம் இழ் தம்’ இதில் ‘இழ்’ என்பதற்குப் பொருந்துதல் என்று பொருள். தனக்கு பொருந்தியதை அம்மா தருவது அமிழ்தம் ஆகும்.

அதுபோலவே, தமிழ் என்பது ‘தம் இழ்’ என தமக்குப் பொருந்திய மொழி என்பதாக தமிழ் மொழி என்று அழைத்தனர் தமிழ் முன்னோர். அதுபோலவே தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நாடு, தமிழ்இயல். தமிழ் வரலாறு என்பன நமது ஐம்பரிமாணங்கள் ஆகும்.

இந்த அமிழ்து என்ற சொல்லே அமுது என மருவியது. இதுவும் தமிழ்ச் சொல்லே. “தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியிருப்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

பாரதிதாசன் பாடியது பிற்காலத்தில் திரைப்படப் பாடலுமாகியது. அமுது என்பதும் உணவு என்ற பொருளே, எனினும் பெருமளவிற்குச் சோறு அல்லது நெல் சார்ந்த உணவு என்ற பொருளில் இடம்பெறும்.

இப்போது எஞ்சியிருப்பது அமிர்து என்ற சொல். இது தமிழ்ச்சொல் அன்று. இது வடமொழிச் சொல். அமிருத்தியு என்கிற வடமொழிச்சொல்லை தமிழாக்க முயன்ற வகைக்கான சொல். திர்ஷ்டம் என்றால் பார்வை, அதிர்ஷ்டம் என்றால் குருட்டாம் போக்கு என்பது போல- மிருத்தியு என்றால் இறப்பு. அ மித்திரியு என்றால் இறப்பற்ற என்ற பொருள். இந்த அமித்திரியு பாற்கடல் கடைந்தபோது வந்தது என்பது பார்ப்பனியத் தொல்கதை. இதனை உண்டால் சாவே இல்லையாம். அமித்திரியு என்பதைத் தேவாமித்திரியு என்றார்கள். 

அந்தத் தொல்கதையைத் தமிழர்களிடம் பரப்புகையில், அதை தமிழில் தேவாமிர்தம் என்று மொழிபெயர்க்கப் போய், உண்மையான நம்முடைய அமிழ்து காணமல் போனது.

எனவே தமிழில் அமிர்தம் என்று எழுத முனையாதீர்கள். அமிழ்து என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லையும், பாற்கடல் கடைந்தபோது வந்த அறிவிற்கொவ்வா வடமொழிச் சொல்லான அம்மிருத்யுவையும் ஒன்றென்பது போல ஆகிவிடும். 

சரி. தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! என்கிற முயற்சித் தேடலுக்கு வருவோம். 
தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் அம்மா தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் அம்மா எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை.
அவைகளே எனக்கு ஆதாரம்.
என் அம்மா என் உடல் வளர்க்க தன் குருதியைப் பாலாக்கித் தந்ததை தமிழ் முன்னோர் அமிழ்து என்று அழைத்திருக்கின்றார்கள் என்றால்,
என் அம்மா என் உயிர் வளர்க்க தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்த அந்த தமிழ்மொழியையும் அமிழ்து மொழி என்றே பெயர் மாற்றி அழைக்கும் போது, அது தாய்த்தமிழ் என்பதாகி, தமிழுக்கும் தாயுக்கும் கூடுதல் பெருமை சேர்ப்பதாகவே அமையும் அல்லவா! 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.