அலோபதியில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாதுஉப்புக்கள், உயிரூட்டிகள் (வைட்டமின்கள்) என்று வகைபடுத்தப் படுகின்றன. அதுபோல தமிழ்மருத்துவத்தில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்ற அறுசுவைகள் என்று வகைபடுத்தப் படுகின்றன. அந்த அறுசுவைகளில் துவர்ப்பு குறித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். 08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்மருத்துவத்தில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்ற அறுசுவைகள் என்று வகைபடுத்தப் படுகின்றன. அந்த அறுசுவைகளில் துவர்ப்பு குறித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். என் மகனுக்கு சிறு அகவையில், அவன் கீழே விழுந்து ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகாது. அல்லோபதி களிம்புகள், மாத்திரைகள் எதுவும் அவ்வளவு பலன் தராது. இதனால் அவன் கீழே விழுந்து விடக்கூடாது என்றும், விழுந்தாலும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அச்சம் இருந்து கொண்டேயிருக்கும் எங்களுக்கு. குழந்தைகள் கீழே விழுந்து புண்கள் ஏற்பட்டுவிட்டால், மருத்துவம் பார்ப்பதோடு புண்கள் குணமாகும் வரை நீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும், அப்படியே நீரால் கழுவினாலும் பஞ்சு ஒத்தியெடுத்து நன்றகத் துடைத்து எடுத்துவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் புண்கள் சீழ் பிடித்து விடும் என்பதை அனைவரும் அறிவோம் அல்லவா? எங்கள் வீட்டை ஒரு அறை கூடுதலாக கட்டி விரிவுபடுத்தும் கட்டுமானப் பணிக்கு, நன்றாகத் தெரிந்த நண்பர் ஒருவரை ஒப்பந்தப் படுத்தியிருந்தோம். அன்று அவர் சாப்பாட்டு ஓய்வில் எங்கள் வீட்டில் இருந்து ஒரு குவளை நீர் வாங்கி அருந்திவிட்டு, அவர் காலில் துணிக்கட்டு போட்டிருந்த காயத்திற்கு மீதமான நீரை ஊற்றி துணிக்கட்டை ஈரப்படுத்தினார். நான் பதறிப் போய்விட்டேன்! என்ன நண்பரே புண்ணின் மீது தண்ணீர் ஊற்றுகின்றீர்? புண் சீழ் பிடித்து பெரிதாகி விடாதா? என்று கேட்டேன். அவர் சிரித்தார். ஒன்றும் ஆகாது! புதுப்புண் என்றால் மஞ்சள் தூள் வைத்து தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறாத பழைய புண் என்றால் கருவேலம் பட்டையை நசுக்கிக் கட்டி அவ்வப்போது ஈரப்படுத்த வேண்டும் என்று சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அப்போது என் மகன் காலில் ஆறாத சிறு காயம் இருந்து கொண்டு இருந்தது. என் மகனை அவரிடம் அழைத்துக் காட்டி, இந்தப் புண்ணுக்கு நீங்கள் சொல்லும் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டேன். நாங்கள் மேட்டாங்காட்டில்தான் வீடு கட்டியிருந்தோம். வீட்டை சுற்றி பாலை மரங்கள், அரப்பு தயாரிக்கப் பயன்படும் ஊஞ்சை மரங்கள், கருவேல மரங்கள் எல்லாம் இயல்பாக வளர்ந்து செழித்து நிற்கும். அவர் உடனே பக்கத்தில் இருந்த ஒரு கருவேல மரத்தின் பட்டையைக் கொஞ்சம் வெட்டி எடுத்து வந்து நசுக்கி கட்டி நீர் ஊற்றி ஈரப்படுத்தினார். இரண்டு நாட்களில் என்மகனின் புண் குணமானது எனக்கு மிகுந்த வியப்பையே தந்தது. சிறு அகவையில், என் மகனின் விளையாட்டு, மரமேற்றம் போன்றவற்றில் ஏற்பட்ட விழுப்புண்களுக்கு இந்த மருத்துவம் நல்ல பலனளித்தது. இந்தக் கருவேலம் பட்டை துவர்ப்பு சுவையில் தமிழ்மருத்துவத்தில் வகைபடுத்தப்படுகிறது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது தமிழ்மருத்துவம் சார்ந்த சொலவடை அல்லவா? ஆலில் துவர்ப்பு சுவை குறைவாக இருக்கும், வேலில் துவர்ப்பு சுவை மிகுதியாக இருக்கும். நாம் பெரும்பாலும் அல்லோபதி மருத்துவம் சார்ந்து பற்தூரிகைகள் கொண்டு பல்துலக்குகிறோம். இதில் மிக மென்மையான தூரிகைகளே பல் ஈறுகளை காயப்படுத்தாமல் இருக்கும். பற்களை வெண்மைப் படுத்துவது மட்டுமே பெரும்பாலும் நமது நோக்கமாக இருக்கிறது. பல்ஈறுகளை பழுதுபடாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே உண்மையான பல் பாதுகாப்பாக அமைய முடியும். பல்பாதுகாப்புக்கு வேலங்குச்சுயும், வேலம்பட்டைப் பொடியும் மிகச்சிறந்த தேர்வாகும். வேலத்தில் உள்ள துவர்ப்பு பல்ஈறுகளைப் பாதுகாக்கவும், வாயில் கடித்துக் கொள்ளுதல் போன்ற, எந்த வகைப்புண்களும் ஏற்பட்டாலும் உடனடியாக குணமளிக்கும். நாம் பயன்படுத்தும் பற்பசைகள் வயிற்றுக்;குள் செல்லாமல் பாதுகாக்க வேண்டும். ஏனென்றல் பற்பசையின் வேதிப்பொருட்கள் வயிற்றுப் புண்ணுக்கு காரணம் ஆகலாம். ஆனால் வேலங்குச்சியின் சாறோ, வேலம்பட்டையின் துகளோ வயிற்றுக்குள் சென்றால் தப்பில்லை. அது வயிற்றுப் புண்கள் இருந்தாலும் குணமாக்கும் வேலையைச் செய்யும். தமிழ்மருத்துவம்- இனிப்பு சதை வளர்ச்சிக்கானது என்றும், புளிப்பு கொழுப்புக்கானது என்றும், கசப்பு நரம்பை உறுதிப்படுத்தவென்றும், காரம் உமிழ்நீர் சுரப்பு மற்றும் செரிமானத்திற்கானது என்றும், உவர்ப்பு எழும்பு உறுதி மற்றும் உடல் வெப்பக் கட்டுப்பாட்டிற்கானது என்றும் தெரிவிக்கிறது. துவர்ப்பின் குணமாக குறுதித்தூய்மை தெரிவிக்கப் படுகிறது. ஓ! அதனால்தான் கருவேலம் பட்டை- புண்ணில் சீழ் பிடிக்காமல் பாதுகாப்பதற்கும், ஈரப்படுத்துதல்- பட்டைச்சாறு புண்ணில் பரவுவதற்கும் பயன்படுகிறதா? பாமரத்தமிழனின் குறுதியில் கலந்த தமிழ்மருத்துவத்தை அந்த மருத்துவம் சொல்லும் துவர்ப்பைக் கொண்டாடுவோம்.