உலகில் யாரும் தங்களுடையது என்று கொண்டாடாத- நடப்பில் உலகினர் பயன்படுத்திவரும்- எண்களும், எண்களின் அடிப்படைக்கு பேரளவாக பயன்பட்டு வருகிற சுழியமும் தமிழ்முன்னோர் உலகினருக்கு அளித்த கொடையாகும். அவற்றுள் வருகிற சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று; இருந்து இல்லாமல் போனதைக் குறி;ப்பதாகும் என்கிறது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரம். 22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: சுழல், சுழற்று, சுழற்சி, சுழி, சுழித்தல் என்கிற சொற்களின் வரிசையில் உருவாக்கப்பட்ட பொருள்பொதிந்த தமிழ்ச்சொல் சுழியம் ஆகும். இந்தச் சுழியம் என்கிற சொல் தமிழ்முன்னோரின் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரத்தில் உள்வாங்கப்பட்டு கணக்கிற்கு வந்த எண்ணுரு ஆகும். ஒன்றின் மதிப்பை பத்தாகக் கூட்டுவதற்கு ஒரு சுழியம், ஒன்றின் மதிப்பை நூறாகக் கூட்டுவதற்கு இரண்டு சுழியம் என்று அடிப்படை எண்களின் மதிப்பு கூட்டுவதற்கு இந்தச் சுழியம் கணக்கில் பின்பற்றப் படுகிறது. கணக்கில் கூட இந்தச் சுழியம் இல்லாததைக் குறிப்பதற்கு பயன்படுத்தப் படுவதில்லை. இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு குடும்பத்தின் நிரக்கை (சராசரி) வருமானம் 23000 என்று அண்மையில் ஒரு தரவில் தெரிய வந்தது. இந்த வருமானம் அந்த மாதமே முழுவதும் செலவாகிவிட்டால், அந்த மாத வருமானத்தின் இருப்பு சுழியம் ஆகும். ஆக அந்த சுழியம் இருந்து இல்லாமல் போனது ஆகும். அந்தக் குடும்பத்திற்கு அந்த மாதம் 24000 செலவாகி ரூபாய் ஆயிரம் கடன் வாங்கியிருந்தால், அவர்களுக்கு அந்த மாதத் தேவையாய் இருந்த அந்த ஆயிரம் இல்லை என்பது சுழியம் ஆகாது. சுழியம் என்பது சுழித்தல் அடிப்படையானது. சுழித்தல் என்கிற சொல் இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதற்கான சொல் ஆகும். தமிழ்முன்னோர் எண் உருவாக்க வரலாற்றில் பல படிகளைக் கடந்து வந்திருந்ததை தொல்பத்து, தொல்நூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களில் தமிழ் முன்னோர் பதிவு செய்து வைத்துள்ளனர். அந்தச் செய்தியைக் கொஞ்சம் இங்கே அலசுவோம். 90 இது ஒன்பது பத்துதானே; தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்? 900 இது ஒன்பது நூறுதானே; தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால்தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம் பின்வருவது ஆகும். தமிழில் தொல்காப்பியர் காலததிற்கு முன்பு- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து என்றே எண்மானம் இருந்தது. நமது வீடுகளில் படி அமைக்கும் போது உயரம் எட்டு அங்குலமும், கிடை பத்து அங்குலத்திலும் அமைப்பார்கள். எட்டு என்றால் எட்டுதல் என்றே பொருள். பத்து என்பது பற்றுதல் ஆகும். ஆக ஒற்றைப்படை எட்டில் முடிந்து, இரட்டைப்படை எண் பத்தில் தொடங்குகிறது. ஆக ஒற்றை படை எண்ணில் எட்டே இறுதி எண்ணாக தமிழில் இருந்தது. பத்தில் இரட்டைப்படை எண் தொடங்கி பதினொன்று, பனிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, இருபது என தொடரும். இரட்டைப் படை எண்ணில் எண்பத்தி எட்டு கடைசி எண் ஆகும். அடுத்து தொடங்கும் மூன்று படை எண் நூறு ஆகும். தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்;னேற்றக்கலையான கணியத்தின் அடிப்படையில் ஒற்றைப்படை எண்களை எட்டிலிருந்து ஒன்பதாக மாற்றினர் தமிழ்முன்னோர். கணியம் என்பது எண்கள், எண்களின் இயல்பு குறித்த கலையாகும். அடிப்படை எண்கள் ஒன்று இரண்டு மூன்று என்றும் அடிப்படை இயல்புகளில் முதலாவது வகைபாடு அல்லது பண்பாடு, இரண்டாவது பாகுபாடு, மூன்றாவது அந்தப் பாகுபாட்டிற்கு எதிரான முரண்பாடு என்றும் கண்டறிந்தனர் தமிழ்முன்னோர். அதன் சார்பு இயல்புகளாக மூன்றை மூன்றால் பெருக்க வருவது ஒன்பது என்று கண்டறிந்த நிலையில் அடிப்படை எண்களை எட்டிலிருந்து ஒன்பதாக மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை தமிழ் முன்னோருக்கு எழுந்தது. அந்த வகையில் ஒற்றைப் படை எண்களின் இயல்புகளாக 1.உழைப்பு 2.மேலாண்மை 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.போரியல் என்று நிறுவி கணியக்கலையை விரிவு படுத்தியதோடு அதை எண்மானத்திற்கும் கொணர்ந்தனர். அப்போது எட்டிற்கும் பத்திற்கும் இடையில் ஒரு புதிய எண் அமைந்தது. அந்த புதிய எண்ணுக்கு வரலாற்றை நினைவுகூறும் விதமாக, பழைய பத்து என்பதாக தொல்பத்து என்று பெயர் சூட்டினர் தமிழ்முன்னோர். அந்தக் காலம் தொல்காப்பியர் காலமாக இருக்கக்கூடும். இன்னும் சிறப்பாகச் சொன்னால் அந்த முயற்சியில் தொல்காப்பியரின் பங்கு பெரிதாக இருந்திருக்கக்கூடும். அதன் நினைவாகவே தன் இலக்கண நூலுக்கு 'தொல் (ஒன்பது) காப்பியம்' பெயரிட்டதோடு ஒவ்வொரு அதிகாரத்திலும்; ஒன்பது ஒன்பது நூற்பாக்களாக அமைத்தார். தமிழில் புதிய பத்து அமைந்து விட்ட காலத்து திருக்குறளில் பத்து பத்து குறள்கள் ஒரு அதிகாரத்திற்கு அமைக்கப் பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தில் உள்ள 'தொல்' ஒன்பதைக் குறிப்பதே ஆகும். பழைய என்ற பொருள் குறித்தது அன்று. ஒருவர் தன் படைப்புக்கு பழைய படைப்பு என்பதாக எப்படி பெயர் வைக்க முடியும்? இயல்புக்கு பொருந்த வில்லையே! தமிழின் புதிய எண்மானத்தில்- ஒன்பது ஒன்று தொல்பத்து என்று அழைக்கப்பட்டது. ஒன்பது பத்து தொல்நூறு என்று பெயரிடப்பட்டது. ஒன்பது நூறு தொள்ளாயிரம் என்று பெயரிடப்பட்டது. இந்தப் பழைய என்பதற்கான தொல் என்கிற அடை சேர்ப்பு தொள்ளாயிரத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. அடுத்து வரும் எண்களைச் சுட்ட இந்த பழைய என்பதைக் குறிக்கும் தொல் என்கிற அடை தேவைப்படவில்லை. சுழியம் என்கிற சொல் தமிழ்முன்னோரின் மூன்றாவது முன்னேற்றக் கலையான மந்திரத்தில் உள்வாங்கப்பட்டது குறித்த செய்திக்கு வருவோம். மனிதனின் கூட்டியக்கம் முடிதலை இறத்தல், காலமாதல் என்கிற இரண்டு சொற்களில் நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அந்தச் செய்தியைக் கொஞ்சம் இங்கே அலசுவோம். இறத்தல், காலமாதல் என்கிற சொற்கள், பொருள்பொதிந்த தமிழ்ச்சொற்கள் ஆகும். இறந்து விட்டார், காலமாகி விட்டார் என்று பேசுவது தமிழில் இன்றும் தொடரும் நடவடிக்கை ஆகும். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற அடிப்படையிலேயே தமிழின் ஒவ்வொரு சொல்லும் தமிழ்முன்னோரின் கூட்டுச் சிந்தனையில் ஆய்ந்தாய்ந்து நிறுவப்பட்டுள்ளது. மனிதனின் காலக்கெடு முடிகிற அடிப்படையை, தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவ முயன்றதன் விளைவே இந்த இறத்தல், காலமாதல் என்கிற சொற்களின் உருவாக்கம். தமிழர்தம் பொருள் இலக்கணத்தில் அகத்திணையில் உரிப்பொருளில் கடவுள், இறை, ஆகியன ஆற்றல் மூலமாகவும், அவைகள் தொய்ந்த தெய்வம் வழிபாட்டு மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வம் என்பன- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நிலத்தில், ஒவ்வொரு நிலத்திற்கும் வேறு வேறு ஆகும். தெய்வம் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் வீட்டுதெய்வம், குலதெய்வம் என்று வேறு வேறு ஆகும். அடுத்து இறை என்பது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களான ஆற்றல் மூலங்கள் ஆகும். ஒன்றே ஒன்றான கடவுள் என்பது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது ஆகும். ஆக இறத்தல் என்பதில் நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையாகிப் போதல் என்கிற நடப்பு உள்ளடங்கியுள்ளது. இறந்தவரின் உடலை நிலத்தில் புதைக்கும் போது அது மண்ணில் மக்கி நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது. ஆக உடல் தன்னுடைய அடிப்படையான நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது என்கிற அடிப்படை காரணம் பற்றியே அதை இறத்தல் என்றனர் தமிழ் முன்னோர். உடலை எரியூட்டுவது தமிழர்மரபு அன்று. அடுத்து காலமாதலுக்கு வருவோம். இறத்தலைப் போல அவ்வளவு எளிதான பொருள் பொதிப்பு கொண்டது அல்ல காலமாதல். தமிழ்முன்னோர் கண்டறிந்த காலமாதல் என்கிற செய்தி உலகினருக்கு புதிய செய்தியாகும். உயிரைப் பேரளவாகக் கொண்டாடும், உயிர் தொடர்பாக மறுபிறப்பு என்கிற செய்தியைக் கொண்டாடும் வகைமையில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை. உயிர் என்பது மீண்டும் உயிர்ப்பது இல்லை, அது சுழியமாகி விடுகிறது, என்பது தமிழியல் ஆகும். மேலும் உயிர் என்பது கூட்டியக்கம் மட்டுமே. அதன் காலக்கெடு முடிந்ததும் அந்தக் கூட்டியக்கம் சுழியம் ஆகிறது. சுழியம் என்பது அந்தக் கூட்டியக்கத்தின் வரலாறும் அறிவும் தெய்வமும் என்கிற தரவு ஆகும். ஆக ஒரு கூட்டியக்கம் வந்தது. காலக்கெடு முடிவில் சுழியம் ஆக விசும்பில் பதிவாகி விட்டது. அது திரும்ப எண்ணிக்கையாக இயங்க முடியாது. சுழியம் எண்ணிக்கையின் மதிப்பு கூட்ட முடிவது போல தம் எச்சங்களின் அறிவைக் கூட்ட முடியும் கூட்டியக்கச் சுழியங்களால். ஆக இந்த உயிரைக் காலமாதல் என்று தமிழர் தெரிவிப்பது எவ்வாறு? தமிழியலில், முதல் எனப்படுவது இடமும் காலமும் ஆகும். படைப்புக் கோட்பாட்டில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை. இடம் என்பது- தான்தோன்றி இயக்கமும் எல்லையும் இல்லாத வெளி ஆகும். அதைக் கடவுள் என்று கொண்டாடினர் தமிழ்முன்னோர். ஆக கடவுள் என்பது தான்தோன்றி இயக்கமும் எல்லையும் இல்லாத வெளி மட்டுமே ஆகும். காலம் என்பது அதில் இயங்கிக் கொண்டிருக்கும், தான்தோன்றி இயக்கம், எல்லை எண்ணிக்கை உடைய மிக மிக நுட்பமான தனிஒன்றுகள் நிலை மட்டுமே ஆகும். அந்தத் தனிஒன்றுகள் என்கிற தனிஇயக்கங்கள் இயங்குவதால் அவைகள் காலம் காட்டுவன என்பதால் அதை காலம் என்றனர் தமிழ் முன்னோர். தமிழ்முன்னோரின் கடைசி என்பது பெருவெடி ஆகும். நமது பயணம் பெருவெடியை நோக்கியது ஆகும். காலத்தின் நோக்கம் இருப்பும் வளர்ச்சியும் ஆகும். காலத்தின் தனி ஒன்றுகளின் அடுத்த நிலை நிலம், நீர், தீ, காற்று என்கிற எண்ணிக்கை மாற்றத்தால் வேறு வேறு இயல்புகளை கொண்ட இறை அல்லது நாற்திரங்கள் ஆகும். இந்த நான்கும் அடிப்படை கூட்டியக்கங்கள் ஆகும். இவைகள் காலக்கெடு இல்லாத கூட்டியக்கங்கள். அடுத்து ஓரறிவு உயிரியிலிருந்து ஆறறவு மனிதன் வரை மரம், விலங்குகள், நீங்கள், நான் அனைவரும் வேறுவேறு எண்ணிக்கையில், வேறுவேறு இயல்புகள், வேறுவேறு காலக்கெடு அமைந்த கூட்டியக்கங்கள் ஆவோம். காலம் என்று சுட்டப்படுகிற தனி ஒன்றுகளின் இயக்கம் தனிஇயக்கம் ஆகும். தனிஇயக்கம் மட்டுமே அடிப்படையான காலம் ஆகும். காலக்கெடு உள்ள கூட்டியக்கங்களின் உயிரும் ஒற்றையானது என்கிற நிலையில், அந்த உயிர் இல்லாமல் போகிற சுழிய நிலையை காலமாதல் என்றனர் தமிழ் முன்னோர்.
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம் (இலட்சம் என்பது பழங்காலத்தில் இல்லை)
ஆயிரமாயிரம் ((பத்து இலட்சமும் பழங்காலத்தில் இல்லை) கோடி
பத்து கோடி
நூறுகோடி
ஆயிரம் கோடி
பத்தாயிரம் கோடி
நூறாயிரம் கோடி
ஆயிரமாயிரங்கோடி
கோடிகோடி என்று தமிழ் எண்மானம் தொடரும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,426.