21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் 1914 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கைமுறை மருத்துவ நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் நூலின் சில பக்கங்கள் வலம் வருகின்றன. இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், போட்டோசாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று திருத்தம் செய்யப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்து செய்முறை: மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று, கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு, நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று. என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று, பூவிருந்தவல்லி பூ.சு.துளசிங்கமுதலியாரது அச்சுக்கூடத்தில் பிரசுரம் செய்யப்பட்டது. 1914 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. எனினும், குறிப்பிட்ட இரு பக்கங்கள் புலனத்தில் பகிரப்படுகின்றன. உள்ளபடியே நூல் இருப்பதும் நூலில் இருக்கும் தகவல்களும் சரியே. ஆனால், கோரோசன, கோரோன ஆக்கப்பட்டதுதான் கோளாறு. என் குடும்பத்தார் சில நோய்களுக்கு மட்டும் சிறப்பு மருத்துவம் பார்க்கும் மருத்துவக் குடும்பத்தார். என் தந்தையார் என் ஒரு அகவையின் போதே காலமாகி விட்டார். என் பாட்டனார், என்தாத்தா, என் அப்பா ஆகியோர் மொழித்துறையிலும், மருத்துவத்திலும், சோதிடத்திலும் வல்லவர்களாக இருந்ததாக என்தாயார் மூலம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இறுதியாக என்தாயார் பெண்களுக்கு குழந்தையின்மை, வயிற்று வலி, குழந்தைகளுக்கு காய்சல், சளி ஆகியவற்றுக்கு மருந்து தயாரித்து தந்ததைப் பார்த்து இருக்கிறேன். ஒரு சில பெண்கள் என் தாயாரின் காலைத் தொட்டு வணங்கியது, பரிசுப்பொருள்கள் வழங்கியது எல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன். நான் மூன்று, நான்காம் வகுப்பு படிக்கும் போது என் அண்ணன் குழந்தைகளுக்கு, சளிமற்றும் இருமலுக்கு- ஈரோடு கருங்கல் பாளையத்தில் இருந்த ஆரியவைத்திய சாலையில் கஸ்தூரி மற்றும் கோரோசனை மாத்திரை வாங்கச் செல்லும் போது, என்அம்மாவோடு நானும் கூட சென்றிருக்கிறேன். அந்த மருந்துகள் அப்படி குணமளிக்கும். நான் ஈரோட்டில் இருந்த வரை (ஆறாம் வகுப்பு படிக்கும் வரை) கருங்கல் பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் என்று ஒரு மருத்துவமனை இருக்கும். உடல்நிலை சரியில்லாத பலமுறை அந்த மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறேன். அப்படி குணமளிக்கும். அந்த மருத்துவமனை சித்த மருத்துவ மனையென்பதும் அதில் இருந்த மருத்துவர் சித்த மருத்துவர் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. பிற்காலத்தில்- தமிழ், மருத்துவம், மற்றும் சோதிடத்தில் எனக்கும் ஆர்வம் வந்தபோதுதான் இவற்றையெல்லாம் மலரும் நினைவுகளாக மனதில் கொண்டு வந்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் மட்டும் என் அம்மாவோடு இருந்தேன். என் அக்கா, சிறியஅண்ணன் எல்லாம், பெரிய அண்ணனோடு மரப்பாலத்தில் நடராச திரையரங்கத்திற்கு அருகில் குடி இருந்தார்கள். இந்தத் திரையரங்கில் ஆங்கிலப் படம் மட்டுமே திரையிடுவார்கள். என் அண்ணன் அக்கா எல்லாம் உடல் நிலை சரியில்லாத போது அங்கே பக்கமாக இருந்த சாமியார் மருத்துவ மனைக்குச் செல்வார்கள். நான் ஒரேயொரு முறை அந்த மருத்துவ மனைக்கு என்அக்காவோடு துணைக்குச் சென்றிருந்தேன். மருத்துவ மனை முற்றத்தில் ஒரு குளம் இருந்தது. அதில் வண்ண வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது. நமது உடலுக்கு என்ன ஏது நோய் என்று சாமியார் மருத்துவருக்கு ஒன்றும் தெரிவிக்க வேண்டியதில்லை. அதுகுறித்து எதுவும் கேட்கவும் மாட்டார். கையில் நாடி பிடித்துப் பார்த்தே நமக்கு சித்த மருந்துகள் தருவார். ஏதுவும் கேட்காமல் எப்படி மருந்து தருகிறார் என்று என் அக்காவிடம் கேட்பேன். ஆனால் என் அக்கா சொன்ன விளக்கம் எதுவும் அப்போது புரியவில்லை. எனது பெண்குழந்தை. நான்கு அகவை இருக்கும். அப்போது நாங்கள் மேட்டூரில் இருக்கிறோம். என் குழந்தைக்குக் காய்சல். வழக்கமாக நாங்கள் செல்லும் அல்லோபதி மருத்துவர் மாதப்பன் அவர்களிடம் சொன்றோம். அவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, குழந்தைக்கு மஞ்சள் காமலை இருக்கிறது ஆங்கில மருத்துவம் வேண்டாம். இரமேஷ் பள்ளிக்குப் பின்புறம் உள்ள ஒரு சித்த மருத்துவரிடம் செல்லுமாறு பணித்தார்கள். நாங்கள் உடனடியாக அங்கு சென்றோம். அந்த மருத்துவர் பார்த்துவிட்டு, வெறும் வயிற்றில்தான் மருந்து தரவேண்டும் நாளை காலை வாருங்கள் என்றார். அடுத்த நாள் சென்றோம். அவர் கொடுத்த ஒரு வேளை மருந்தில் ஒரு கிழமையில் மஞ்சள் காமலை சரியானது. இப்படி சித்த மருத்துவத்தோடு வியக்கத்தக்க நிறைய அனுபவங்கள் இருக்கிறது. பரம்பரை சித்த மருத்துவர்கள் ஏதாவது சில நோய்களுக்கு மட்டுமாக சிறப்பு மருத்துவராகவே இருப்பார்கள். அவர்கள் சிறந்திருந்த அளவிற்கு தற்போது சித்த மருத்துவம் படித்து வரும் மருத்துவர்கள், அனைத்து நோயுக்கும் மருத்துவம் பார்க்க முயன்ற போதும் கூட பரம்பரை மருத்துவர் அளவிற்கு சிறக்க முடியவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையே. பரம்பரை மருத்துவக் குடும்பத்தில் சளி, காய்சலுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்த குடும்பத்திலிருந்து யாராவது ஈடுபாட்டோடு மருத்துவக்கல்வி பயின்றிருப்பார்களேயானால் அவர்களால் கொரோனாவிற்கு உறுதியாக மருந்து சொல்லமுடியும் என்று எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. யாராவது ஒரு போதிதருமர் வந்து கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திட எனது வாழ்த்துக்கள்.