Show all

தேசியக் கட்சிகள் என்று அழைப்பது சரியா? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்

ஒரு மாநில மொழியான ஹிந்தியைக் கொண்டாடுகிற, மற்ற மற்ற மாநிலங்கள் மீது தங்கள் மாநில மொழியான ஹிந்தியைத் திணிக்கிற பாஜக- தேசிய (ஒன்றிய) ஆட்சிக்கு முனைவதால், ‘தேசிய ஆட்சிக்கு முனைகிற கட்சி’ என்று சொல்லாமல் தேசியக் கட்சி என்று பீற்றிக் கொள்கின்றனர். தங்கள் மாநில மொழியான தமிழைக் கொண்டாடுகிற மற்ற மற்ற மாநிலங்கள் அவர்கள் மொழியை அவர்கள் மாநிலத்தில் கொண்டாடுவதை அங்கீகரிக்கிற உண்மையான தேசியக் கட்சியான திமுகவை தேசத்துரோக கட்சி என்றே தமிழக பாஜகவினர் அண்மைக்காலமாக முழங்கி வருகின்றனர். இவை, இடமாறு தோற்றப்பிழைகள்

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? ‘அளவுகோல் கொண்டு சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை.’ இன்றைக்கு இப்படி குறுவினாவாகக் கேட்கப்படுகிற கேள்வி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாம் ஏழாம் வகுப்புகளில், இயல்அறிவு (சயின்ஸ்) பாடப்பிரிவில் இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? படம் வரைந்து விளக்குக என்று பெரிய கேள்வியாக இருந்தது.

இன்றைக்கு எண்ணிம முறைக் கருவிகள், இடமாறு தோற்றப்பிழை இல்லாமல் துல்லியமாக அளவைக் காட்டுகிறது. இடமாறு தோற்றப் பிழை என்பது அளவுகோலில் அளக்கும் போது, அளவுக் கோட்டை நேர் செங்குத்தாகப் பார்க்காமல், இடமிருந்தோ, வலமிருந்தோ, மேலிருந்தோ, கீழிருந்தோ பார்க்கும் போது கிடைக்கும் தவறான அளவாகும். 

இந்த இடமாறு தோற்றப் பிழை தவறை வாழ்க்கையில் பலஇடங்களில் நாம் அடிக்கடி முன்னெடுத்துச் செல்கிறோம். இந்தக் கட்டுரையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிற தலைப்பு- ‘தேசியக் கட்சிகள்’ என்று அழைப்பது சரியா? அது இடமாறு தோற்றப்பிழை அல்லவா என்பதாகும். 

இந்தியா என்பது தமிழகம், வங்காளம், கருநாடகம் என்று பல தேசிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியம் ஆகும். இந்தியாவில் வசிப்பதற்கான உரிமையை குடிஉரிமை (சிட்டிசன்சிப்) என்று தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. 

முதலாவதாக, இந்தியாவை தேசம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் வரையறுக்காத நிலையில், இந்தியாவை தேசம் என்று குறிப்பிடுவது பிழையேயாகும். 

இந்தியாவை தேசம் என்று முதலாவதாக பொதுவெளியில் குறித்தது காங்கிரஸ் கட்சியாகும். காங்கிரஸ் கட்சியின் பெயர் பாரதிய ராஷ்ட்டிரிய காங்கிரஸ் என்றே ஹிந்தியில் எப்போதும் இப்போதும் எழுதப் பட்டு வருகிறது. ராஷ்ட்டிரிய என்றால் தேசியம்.

இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து பாரதிய ராஷ்ட்டிரிய காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் தேசியக் கட்சிகள் என்றும், பீகாரில் அண்மைத் தேர்தலில் மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிற ராஷ்டிரிய (தேசிய) ஜனதா தளமும், தமிழகத்தில் திமுக அதிமுக (அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) மதிமுக பாமக போன்ற கட்சிகள் மாநிலக் கட்சிகள் என்றும் பேசப்படுகின்றன. 

பீகாரில் மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிற ராஷ்டிரிய ஜனதா தளமும், தமிழகத்தில் திமுக அதிமுக மதிமுக பாமக போன்ற கட்சிகளும் அந்தந்த மாநில ஆட்சிக்கு முனைகிற கட்சிகள் என்பதே சரி. உண்மையில் மாநிலக் கட்சிகள் என்கிற தலைப்பும் அவைகளுக்குப் பொருந்தாது. 

இந்த நிலையில் இந்த மாநிலங்களின் ஒருங்கிணைப்பான இந்தியாவிற்கு ஒன்றியம் என்கிற பெயரே பொருந்தும். அப்படித்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவை தேசியம் என்பதாக பொதுவெளியில் பேசத் தொடங்கியது பாரதிய ராஷ்ட்டிரிய காங்கிரஸ் கட்சி. இன்றைக்கு, அதை தங்கள் ஒரேநாடு, ஒரேமொழி(ஹிந்தி) ஒரேமதம்(ஹந்துத்துவா) கொள்கைக்கு தோதாக்கிக் கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. 

ஆக ஒரே மாநிலத்தில் மட்டும் தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளை மாநில ஆட்சிக்கு முனைகிற கட்சிகள் என்றே சொல்ல வேண்டும். அவற்றை மாநிலக் கட்சிகள் என்று சொன்னாலும் பெரிதாக பிழை நேர்ந்து விடாது.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் போட்டியில் கலந்து கொள்கிற கட்சிகளின் முதன்மையான நோக்கம் ஒன்றிய ஆட்சிக்கு முனைவதே ஆகும். ஆக ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத் தேர்தல்களில் ஈடுபடுகிற பாஜக காங்கிரஸ் கட்சிகளை “ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சிகள்” என்றே சொல்ல வேண்டும். மாறாக “இந்தியதேச (பாரதிய ராஷ்ட்டிர) ஆட்சிக்கு முனைகிற கட்சிகள்” என்றாலும் பெரிதாக பிழை நேர வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படி ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சிகளை தேசியக்கட்சி என்று அடையாளப் படுத்தியதும், படுத்துவதும் பாஜக ஆட்சியில் மிகப்பெரும் பிழையாகி விட்டது. 

இதனால், பாஜக- தங்கள் கட்சி மட்டுமே தேசியக் கட்சி என்றும், காங்கிரஸ் கூட பாகிஸ்தானை கொண்டாடுகிற தேசத்துரோக கட்சி என்றும், மற்ற மாநிலக் கட்சிகள் அனைத்தும் தேசத்துரோகக் கட்சிகள் என்றும், அதுவும் தமிழ் மொழிக்கும், மாநில உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதையே தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிற திமுக எந்த நேரத்திலும் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுக்க வாய்ப்புள்ள தேசத்துரோக கட்சி என்றே தமிழக பாஜகவினர் அண்மைக்காலமாக முழங்கி வருகின்றனர். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்காத- பாஜகவின் இந்த தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கு- பெரும்பாலான ஊடகங்களின் பிழையான இந்த “தேசியக்கட்சிகள்” தலைப்பு முன்னெடுப்பே காரணம் ஆகும். 

உலகம் முழுவதும் கொண்டாடுகிற, ஒட்டு மொத்த உலகத்தின் இணையத்துறையின் தேடுபொறி கூகுள்- அமெரிக்க நிறுவனமாக இருந்த போதும், உலகினர் அனைவரையும் சமமாக மதித்து பணியில் அமர்த்துகிறது. தமிழன் சுந்தர்பிச்சை தலைவராக இருக்கிறார். கூகுளில், தமிழ் உள்ளிட்ட உலகின் 108 மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும். எழுத முடியும், தகவல்களைத் தேடமுடியும். 108 மொழிகளிலும் ஒன்றுக்கொன்று மொழிபெயர்க்க முடியும். 

ஆனால் நேற்றைய காங்கிரஸ் ஆட்சியிலும், இன்றைய பாஜக ஆட்சியிலும் நிருவாக மொழி ஹிந்தி மட்டுமே. இந்தியாவில் 22மொழிகள் பேசும் மக்கள் தனித்தனி தேசிய இனங்கள். இவர்கள் “தேசியக்கட்சிகளின்” அரசு என்று சொல்லிக் கொள்கிற காங்கிரஸ் அல்லது பாஜக அரசோடு தொடர்பு கொள்ள அந்தக் கட்சியின் தலைவரின் மாநில மொழியான ஹிந்தியை படிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களின் கட்சி ஹிந்திபேசும் மாநிலத்தின் கட்சி மட்டுமல்ல! மற்ற மாநிலங்கள் மீது தங்கள் மாநில மொழியான ஹிந்தியைத் திணிக்கும் ஆதிக்க வெறிபிடித்த கட்சியே ஆகும். 

ஒட்டு மொத்த இந்தியாவிற்கான, அல்லது இந்திய ஒன்றியத்திற்கான அல்லது இந்திய தேசத்திற்கான கட்சி என்கிற பொருளில், தங்களைத் “தேசியக் கட்சிகள்” என்று சொல்லிக் கொள்ள என்ன உரிமை அவர்களுக்கு இருக்க முடியும்? அந்தக் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் தேசத்துரோகத்தை முன்னெடுக்க தங்களை ஒப்பு கொடுத்தவர்கள் அல்லவா?

மற்ற மொழியைச் சேர்ந்தவர்கள் அந்தக் கட்சியில் சேருவது தங்கள் மொழிபேசும் மக்களை அந்த மாநிலக் கட்சிக்கு அடிமையாக்கும் நோக்கத்திற்கானது அல்லவா? அப்படியானால் தமிழ் மட்டுமே தெரிந்த எல்.முருகன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மருத்துவத்தில் சிறந்திருந்தும், நேற்று வரை ஹிந்தி படிக்க எவ்வளவோ முயற்றும் காற்றுக் கொள்ள முடியாத தமிழிசை என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஒன்றிய ஆட்சிக்கு முனையும் தேசத்துரோகிகளை ஒன்றிய ஆட்சிக்கு முனைகின்றவர்கள் என்பதற்காக தேசியக் கட்சி, தேசியத் தலைவர் என்றெல்லாம் பொது வெளியில் பேச முனைவது அபத்தமும் ஆபத்தும் ஆனது ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.