Show all

இந்த நாட்களில் நல்ல எழுத்துத் திறன் முதன்மைத்துவத்தை இழக்கிறதா?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த நாட்களில் நல்ல எழுத்துத் திறன் முதன்மைத்துவத்தை இழக்கிறதா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இல்லவேயில்லை! எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறைகள்தாம் முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.

இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுக்கள் கிடைப்பது தமிழில் மட்டுந்தாம். இது கல்வெட்டுகளில் எழுத்தைக் கொண்டுவருகிற அமைப்பு முறை.

பனை ஓலைகளில் எழுதத் தொடங்கிய போது கல்வெட்டு எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.

பனை ஓலைகளில்தாம் தமிழர்தம் வரலாற்றை நிலைநிறுத்தும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் அனைத்தும் எழுதப்பட்டன. இது ஓலைகளில் எழுத்தைக் கொண்டு வருகிற அமைப்பு முறை.

அடுத்து தாள்களில் எழுதி அச்சில் புத்தகமாக்கும், எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறை வந்த போது, பனை ஓலை எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல.

இப்போது செல்பேசிகளில், கணினிகளில் மின் எழுத்துக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம். தாளில் எழுதி அச்சில் கொண்டுவரும் எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. இணையத்தில், சொந்தமாக அமைத்துக் கொண்ட இணையத்தளத்தில் கூகுள் தேடுதளத்தில், முகநூல், கீச்சு, புலனம், படர்வரி, விக்கிபீடியா, கோராதமிழ், கூ என அனைத்து சமூக வலைதளங்களிலும் தமிழ்நாட்டின் அனைத்து மனிதர்களும், எழுதி குவித்துக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.

முன்பெல்லாம்- எடுத்தக்காட்டுக்காக ஒரு இலக்கிய மேற்கோளைக் காட்ட வேண்டும் என்று நினைத்தால், எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு நண்பர்களையும், புத்தகக் கடைகளையும், நூலகங்களையும் தேடி அலைந்து எடுக்க வேண்டும். மீண்டும் எழுதத் தொடங்குவதற்கு மாதக்கணக்கில் கூட ஆகிவிடும். தற்போது அப்படியில்லையே. 

'நாடாகொன்றோ' என்று ஒரு பாடல் இருக்கிறதே நாட்டைப்பற்றி அது அழகாகச் சொல்லுமே என்று தேட விரும்பினால் தேடுவது மிக எளிது. கூகுளில் தட்டி விரிவாகவே தெரிந்து கொள்ளலாம். 
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்ற புறநானூற்றுப்பாடல் ஒளவையார் பாடியது என்று விடை கிடைத்துவிடும்.

இந்த எழுத்துத்திறனில்தான் உலகத்தின் ஒட்டு மொத்த இயக்கமும் நடந்துகொண்டிருக்கிறது. எழுத்துத்திறன் மனித இனம் உள்ளவரை முதன்மைத்துவத்தை இழக்கவே இழக்காது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.