எல்லாவற்றின் மீதும் ஆர்வம் உள்ளது. நமக்கான சரியான வேலையை கண்டுபிடிப்பது எப்படி? என்று என்னிடம் வினவப்பட்ட வினாவுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. 11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நமது இயல்புக்கு சரியான தேர்வு:- தொழிலா? வணிகமா? தனித்திறமையா? வேலையா? என்று கேட்பதுதான் சரி. உங்கள் வினாவில் உள்ள வேலை என்பது துணைத் தலைப்பு. வேலையில் இரண்டு உட் தலைப்புகள் உள்ளன. ஒன்று நிருவாகக்கூலி, இரண்டு உடல் உழைப்புக்கூலி. உடல் உழைப்புக் கூலிக்கு, எப்போது வேண்டுமானாலும் களத்தில் இறங்கலாம். வடஇந்திய மக்களுக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தாராளமாக வேலை கிடைக்கிறது. கடந்த 74 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வட இந்தியத் தலைவர்களுக்கு- ஒட்டு மொத்த இந்தியாவையே ஆள்வதற்கும் மற்ற மற்ற மாநிலங்கள் மீது ஹிந்தியைத் திணிப்பதற்கும் உள்ள ஆர்வம்- வடமாநில மக்களுக்கு கல்வி அறிவு ஊட்டுவதில் இல்லவேயில்லை, என்பது இதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இப்படியான உடல்உழைப்புக் கூலிகளைக் காண்பது அரிது. அதற்கு நீதிக்கட்சி தொடங்கி, மிகச்சிறப்பாக திமுகவும் மற்றும் திராவிட இயக்கங்களும் முன்னெடுத்த- எல்லை இல்லா கல்வி நிறுவனங்கள், இட ஒதுக்கீடு, உதவித்தொகை, சத்துணவு, மிதிவண்டி, இலவச பேருந்துப் பயணம், மடிக்கணினி, செருப்பு, சீருடை ஆகியவைகள் காரணமாக உள்ளன. தமிழகத்தில், கொஞ்சம் கருத்தூன்றியும், உயர்கல்வியும் முடித்தால் அமைப்பு சார்ந்த- தனியார்- தொழில், வணிக, நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசுப்பணிகள் ஆகியவற்றில் நல்ல சம்பளம், மேலதிகாரம் இல்லா வேலைகளில் அமரலாம். இளநிலைப்பட்டம் மட்டும், முழுமையான கல்வித் தகுதி பெறாமை ஆகியோர்- அமைப்பு சாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தொடர்ந்து தேடல்களில் இருந்துகொண்டே இருக்கின்றனர். தொழில், வணிகத்தைப் பொறுத்தவரை- மரபு வழி, ஆர்வம், அமைப்பு சாரா தொழில் வணிகங்களில் பெற்ற அனுபவம், ஆகியவற்றைக் கொண்டு படிப்படியாக வளர்ந்து கொண்டே இருப்பர். சென்னை, திருப்பூர், கோவை, சிவகாசி, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற இடங்களில் இந்த வகையான முன்னேற்றங்கள் மிகுதியாக காணப்படும். பாஜக அரசு முன்னெடுத்த பணமதிப்பிழப்பில் இவர்கள் மிகவும் பாதித்தார்கள். வருமான வரித்துறை, அறங்கூற்றுத்துறை, சரக்குசேவை வரித்துறை, சுங்க வரித்துறை, இப்படி அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் இவர்கள் பெரிதாக வளர்ந்து விடாதபடிக்கு கவனமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி இவர்கள் வளர்ந்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்தால்- தமிழகம் எங்கோ போய்விடும். தனித்திறமையைப் பொறுத்த வரை விளையாட்டு, திரை, ஓவியம், இசை, சிற்பம், போன்ற கலைகள் ஆகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இப்படியான தனித்திறமை பற்றியதான சொலவடையே.