Show all

நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா?

நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நல்லவர் கெட்டவர் என்கிற அடையாளம் பொதுநிலை நிறுவல் அன்று. உங்கள் கருதுகோள் தெரிவிக்கும் நல்லவர்கள், சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா? என்று சோதனை, தண்டனை என்கிற எதிர்மறை குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் விருப்பம், அந்த வகையினதே  என்பதாக, கடவுளில் பதிவாகி, அந்த வகையே கடவுளால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, நீங்கள் குறிப்பிடுகிற நல்லது கெட்டது என்கிற உங்களுக்கு மட்டுமே புரிகிற தலைப்பு கடவுளால் புரிந்துகொள்ளப்படாது. 

நீங்களும் நல்லவர் என்கிற தளத்தில் உங்களை நிறுவிக்கொண்டு, சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா? என்று சோதனை, தண்டனை என்கிற எதிர்மறை குறித்தே புலம்பும் இந்த வினாவை முன்னெடுத்திருக்கின்றீர்கள். வேண்டாமே இந்தப் புலம்பல் என்பதுதான் இந்தவினாவிற்கான தலைப்பான விடை.

உங்கள் கருதுகோள் தெரிவிக்கும் கெட்டவர்கள், தங்கள் கேட்புகள் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின், அவர்கள் முன்னேற்றத்திற்கான கேட்புகள் கடவுளில் பதிவாகி, அதுவே கடவுளால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கடவுள்- நீங்கள் கொடுத்ததை உங்களுக்கு கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
கடவுள்- நீங்கள் எண்ணியதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
கடவுள்- நீங்கள் கேட்டதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கு கொடுத்திருங்கள்.
அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதுவே எப்போதும் உங்கள் சிந்தனையாக இருக்கட்டும்.
அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே கடவுளிடம் கேட்டிருங்கள்.

உங்கள் செயல், எண்ணம், மொழி ஆகிய மூன்றும், ஒவ்வொரு தற்பரை நேரமும் கடவுளிடம் பதிவாகிறது. அந்தப் பதிவின் அடிப்படையிலேயே கடவுள் உங்களுக்கானவைகள் மற்ற மற்றவர்களிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வகைக்கு ஒருங்கிணைக்கிறது. 

மனிதப்பாகுபாட்டு ஏற்றதாழ்வுக் கட்டமைப்பான நல்லவர்- கெட்டவர், பெரியவர்- சிறியவர், பணக்காரர்- ஏழை, அறிவாளி- முட்டாள், ஞானம் பெற்றவன்- ஞானம் பெறாதவன் போன்ற தலைப்புகளைக் கடவுள் மீது திணிக்காமல், அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு என்ன தேவையோ அதை மற்றவர்களுக்குக் கொடுத்திருங்கள். நீங்கள் ஒன்று கொடுத்தால் உங்களுக்கு பத்தாக நூறாக என்று வேறு இடத்தில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும்.

அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு என்ன தேவையோ அது குறித்து மட்டும் சிந்தித்திருங்கள். 

அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு எண்ண தேவையோ அதைமட்டும் கடவுளிடம் கேட்டிருங்கள். உறுதியாகக் கிடைக்கும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவைகள் அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டிருந்தவை மட்டுமே என்பது உறுதியான உண்மை.

தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
என்கிற கணியன் பூங்குன்றனாரின் மந்திரச் செய்தியை நினைவில் நிறுத்துங்கள்.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,533.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.