Show all

ஏன் மனிதர்களில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது?

ஏன் மனிதர்களில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நம்பிக்கை என்றால் என்ன? யாருக்கு நம்பிக்கை தேவை என்கிற தலைப்புகளைப் புரிந்து கொண்டால் நம்பிக்கையின்மை ஏன் வருகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அறிவாளி என்கிற தலைப்பிலும், முட்டாள் என்கிற தலைப்பிலும் தமிழ் பொதித்து வைத்திருக்கிற செய்திகள் யாவை என்பதை புரிந்து கொண்டால்தான்- நம்பிக்கை என்றால் என்ன? யாருக்கு நம்பிக்கை தேவை என்கிற தலைப்புகளை நாம் ஆய்ந்திட முடியும்.

அறிவாளி யார்? தன் அறிவினால் தான் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடி. தொடர் வெற்றிகளுக்கு பாதை அமைக்கிறவன் அறிவாளி.

முட்டாள் என்கிற தலைப்பில் தமிழ் என்ன மாதிரியான தகவல்களை பொதித்து வைத்திருக்கிறது? 'அறிவு சுழியம்' என்பதாக அறிவை அளவுகோலாக வைத்து தாழ்த்துவதற்கான சொற்கள் தமிழில் கிடைக்காது. ஏனென்றால் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் அறிவை கொண்டாடுகிற இனமாகும். அறிவைக் கொண்டாடுவதில் தமிழர் வினைத்தொகையினரே. (முக்காலம் உணர்த்துவது வினைத்தொகை) 

ஆகவே அறிவுக்குறைபாடு என்பதை தமிழன் ஒப்புக்கொள்ள மாட்டான். ஆயிரம் பட்டங்கள் எல்லாம் வாங்கிய எந்த ஒருவனை விட தான்அறிவாளி என்றுதான், ஒவ்வொரு தமிழனும் நினைப்பான். அது தமிழனுக்கே உரிய இயல்பு.

நீங்கள் மட்டுமே அறிவாளிகளா? என்று தமிழனைப் பார்த்து கேட்கிற யாருக்கும்- இதுதான் விடை! என்பதை இமயத்தில் ஏறி நின்று முழங்க தமிழைக் கொண்டாடுகிற, தமிழின் வெற்றியைக் கொண்டாடுகிற எந்த தமிழனுக்கும் கெத்து உண்டு.

முட்டாள் என்றோ, மடையன் என்று திட்டினால் கூட தமிழன் கோபித்துக் கொள்வான். ஆனால் அந்தச் சொற்களும் அறிவுக் குறைபாடு குறித்த சொற்கள் அல்ல. அறிவில் இதுமட்டுமே எனக்கானது என்று முடிவு செய்து கொண்டவர் என்பதையே குறிக்கும் சொற்கள் ஆகும். 

முட்டுமரம், முட்டுக்கட்டை போன்ற சொற்கள் போன்றதுதான் முட்டாள் என்கிற சொல்லும். முட்டு மரம் என்பது கட்டிடம் போன்ற இடங்களில் தங்கிப் பிடிப்பதற்காக கொடுக்கப் படுகிற மரம். 

முட்டுக்கட்டை என்பது மிகப்பளுவான தேரை இழுக்கும் போது அதை நிறுத்துவதற்காக கொடுக்கிற முக்கோண வடிவில் செதுக்கப்பட்ட மரமாகும். அதுபோலத்தான் தாங்களாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு குறிப்பட்ட கொள்கையை தாங்கிப் பிடிக்கிறவர்களை முட்டாள் என்கிறது தமிழ்மரபு.

இங்கே நமக்கு புரிதல் நம்பிக்கை என்கிற இரண்டு தலைப்புகள் கிடைக்கின்றன. அறிவாளியாக இருப்பதற்கு புரிதல் தேவை. முட்டாளாக இருப்பதற்கு தான் சார்ந்த அமைப்பு, கட்சி, மதம், தலைவன் மீது நம்பிக்கை தேவை. 

உங்களுக்கும் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் எப்படி ஒரு அமைப்பு, கட்சி, மதம், தலைவன் சிந்தித்திருக்க முடியும்? உங்கள் தேடலில் நீங்கள் தொடர் முட்டாளாக இருப்பதற்கு, நீங்கள் தொடர் அடிமையாக இருப்பதற்கு, நீங்கள் தொடர் நம்பிக்கையாளராக இருப்பதற்கு அமைப்பு, கட்சி, மதம், தலைவன் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை! நம்பிக்கையின்மையை மட்டுமே இந்த வகை மனிதன் அறுவடை செய்ய முடியும்.

வாழ்க்கை மிக மிக எளிதானது என்பது நூறு விழுக்காடு உண்மை. ஆனால் இதை யாருமே ஒப்புக்கொள்ளாமல் குழப்பிக் கொள்கிறோம், அல்லது குழம்பித் தவிக்கிறோம். 

பிறந்த குழந்தை மூன்று அகவையில் நன்றாக நடந்து விடுகிறது. ஐந்து அகவையில் தன் எண்ணமொழியைக் கருத்து மொழியாக்கி அழகாக பேசுகிறது. ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக இயங்க இந்த நடையும் இந்த மொழியும் போதுமானது.

இந்த வகைக்கு, நாம் நமது குழந்தைகளுக்குத் தரவேண்டியது அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே. அனைவருமே இந்த உணவு, உடை, இருப்பிடம் என்கிற மூன்றுக்கு மட்டுமே இயங்கினால் போதுமானது. மனிதன் வரையிலான உயிரிகள் இதை மட்டுமே செய்து காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி மிக மிக எளிமையாக இல்லாமல், மனித வாழ்க்கையைச் சிக்கலாக்குவதற்கு நிறைய விடையங்கள் மனிதனில் தோன்றுவதாக நாம் நமது பெற்றோர்களால் மற்றும்  முன்னவர்களால், எச்சரிக்கப்படுகிறோம்; வழிநடத்தப்படுகிறோம். ஆனால், மனிதனில் தொடருகிற எதுவுமே சிக்கல் இல்லை! 

எனினும், அறிவுதான் சிக்கல் என்று ஒருவரும், ஆசைதான் சிக்கல் என்று ஒருவரும், பொய்தான் சிக்கல் என்று ஒருவரும், ஒழுக்கமின்மையே சிக்கல் என்று ஒருவரும், சோம்பலே சிக்கல் என்று ஒருவரும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களை சுமந்து கொண்டு அதை அடுத்த தலைமுறைகளுக்கு கற்பிக்கிறார்கள்.

அதில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டுகிறார்கள்- வழிகாட்டலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்- வழிகாட்டலுக்கு கூட்டம் சேர்க்கின்றார்கள்- வழிகாட்டலை சட்டம் ஆக்குகிறார்கள்- மீறுகிறவர்களைத் தண்டிக்கிறார்கள்- தண்டனையில் இருந்து தப்புவிக்க இலஞ்சம் கேட்கிற உள்வட்டம் அமைக்கப்படுகிறது- சட்டஅமைப்பை நிருவகிக்க வரி கேட்கிறார்கள். இப்படித்தான் தங்கள் அறிவைத் தூக்கிப் பிடிக்கிற வழிகாட்டியிடம் தொடங்குகிறது நம்முடைய வாழ்க்கைக்கான சிக்கல்.

உலகினர் அனைவரும் தனிமனித வழிகாட்டிகள் முன்னெடுத்த மதம் மற்றும் அரசியல் கோட்பாட்டை மட்டுமே அறிவு என்று நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நம்பிக்கையின்மையை மட்டுமே அறுவடை செய்ய முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.