Show all

10ம் வகுப்பு தகுதியுடைய தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டியிடும் நிலை எதை உணர்த்துகிறது!

இந்தக் கேள்விக்கு, எல்லோரும் படித்துவிட்டு வருவது குற்றம் என்றும், அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்காதது குற்றம் என்றுமே பலரும் வாதிட முயல்வார்கள் ஆனால் உண்மை அதுவன்று. 

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இங்கே நிருவாகக் கூலிகளை உருவாக்கும் கல்வி கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக முன்னெடுக்கப்படுகிற  அயல்மொழி வழிக் கல்வி படிப்பவர்களைத் தற்சார்பு அற்றவர்களாக உருவாக்கி அனுப்புகிறது. 

தன்னுடைய மொழி, தன்னுடைய குடும்பம், இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிறது.

உண்மையில் நாட்டில் வேலையில்லாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த வேலையை விட அந்த வேலையில் மேற்பார்வை குறைவாகவும் சம்பளம் அதிகமாகவும் இருக்கும் என்ற தேடல் வாழ்நாள் முழுவதும் இவர்களின் இயக்கமாக இருக்கும். 

10ம் வகுப்பு தகுதியை தேர்வுக்கு முன்வைத்திருக்கிற நிறுவனம் அரசு மட்டுமே. ஆக அங்கேதானே மேற்பார்வை குறைவாகவும் சம்பளம் அதிகமாகவும் இருக்கும். அகவைத் தகுதியின்  காலக்கெடு முடிகிற வரை போராடுவார்கள்.

அரசுப்பள்ளியில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். தொடக்கத்தில் ஏதாவதொரு வேலைக்குச் செல்வார்கள். படிப்படியாக சிறு தொழிலுக்கோ, வணிகத்திற்கோ முதலாளி ஆவார்கள். நாமும் படித்திருந்தால் பெரியதாக தொழில் தொடங்கியிருக்க முடியும், பெரியதாக வணிகத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என்று படிப்பின் மீது ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

அவர்கள் கனவுகளை அவர்கள் பிள்ளைகளின் மீது திணித்து அவர்களை ஹிந்தி மொழிப்பாடம், தாய்மொழியே இல்லை, என்பதான ஆங்கில வழிக்கல்வியில் பயிற்றுவிக்க எல்லையில்லாமல் செலவு செய்வார்கள். அதனால் பிள்ளைகள், தன்னுடைய மொழி, தன்னுடைய குடும்பம், இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிப் போன படிப்பாளியாக, இந்த வேலையை விட அந்த வேலையில் மேற்பார்வை குறைவாகவும் சம்பளம் அதிகமாகவும் இருக்கும் என்ற தேடல் வாழ்நாள் முழுவதும் அவர்களின் இயக்கமாக தொடங்கிவிடும்.

தாய்மொழி வழிக்கல்வியை முழுமையாகப் பெற்ற பட்டதாரிகளை உருவாக்கினால் யாரும் வேலை தேட மாட்டார்கள். எல்லோருக்கும் வேலை கொடு;பபார்கள். இன்றைக்கும் தமிழகத்தில் பலருக்கும் வேலை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ் வழிக்கல்வியை முடித்தவர்களாகவோ, பகுதியாக நிறுத்தியவர்களாகவோ மட்டுமே இருப்பார்கள். 

வட இந்திய முதலாளிகள் இருக்கிறார்களே என்று வாதிட முனைந்தால் அவர்களும் அவர்கள் தாய்மொழி வழிக்கல்வியை முடித்தவர்களாகவோ, பகுதியாக நிறுத்தியவர்களாகவோ மட்டுமே இருப்பார்கள். உலக முதலாளிகளுக்கும் இதுதான் விதி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.