Show all

மந்திரமா! மாயமா! எதை நாம் கற்றுத் தெளிய அல்லது தேற முடியும்

மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியாது. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை. அதைத் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள்.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:  மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியாது. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை. அதைத் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள்.

நிலவை மறைக்கலாம், எதிரியை உருண்டோடச் செய்யலாம், நீங்கள் விரும்பும் பெண்ணை உங்களைத் துரத்தி வரச் செய்யலாம். பில்லி, சூனியம், ஏவல் என்றெல்லாம் எளிமையாகப் பேசப்படும். ஆனால் அந்த தகவல்கள் தெரிவிக்கும் செய்திகளை எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும், அவற்றையெல்லாம் படித்து விட்டு ஒரு முடியை கூட நாம்மால் அசைத்துப் பார்க்கும் சக்தியைப் பெற முடியாது. அத்தனையும் புளுகோ புளுகு.

அதை தாங்களும் தொடர்ந்து புளுகி கொண்டும், பெருமை பீற்றி எழுதிக் கொண்டும் இருப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நம்மால் முடியாது, ஆனால் ஏதோ இருக்கிறது என்று சொல்கின்றவர்களும் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். 

ஆனால் இதில் என்ன அடிப்படை இருக்கும் தேடியவர்கள் யாராவது இருக்கக் கூடுமா என்று நான் தேடிக் கொண்டே இருக்கிறேன். தேடியவர்கள் யாரும் இல்லவேயில்லை. 

இப்படி மந்திரம் என்று பேசும் அனைத்து செய்திகளும் சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் செய்திகளாகவே இருக்கின்றன. 

ஆனால் தமிழ் இலக்கியங்களில் மந்திரம் குறித்து தேடினால், எண்ணத்தை சொல்லால் செயல்படுத்தும் ஆற்றல் கலையே மந்திரம். அது யாருக்கும் சாத்தியம் என்கிறது. அதையே மந்திரம் என்று கொள்ளும் போதுதாம், மேலே ஏராளமாகச் சொல்லப்பட்ட பார்ப்பனியம் சார்ந்த செய்திகள் அனைத்தும் நடைமுறைப் படுத்த இயலாத கனவு காண்கிற, கற்பனையில் மகிழ்கிற, நான் அதைக் கற்றவனாக்கும் என்று ஏமாற்றுகிற, அது சமஸ்கிருதத்தில்தான் முடியும் என்று புளுகுகிற மாயங்கள் என்று தெளிவு படுத்திக் கொள்ள முடிகின்றது. 

தமிழ் இலக்கியங்களில் கிடைக்கிற, நாம் நடைமுறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற, மந்திரம் குறித்த செய்திகளுக்கு வருவோம். 
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
என்ற குறளில்: பல்லக்கில் பயணிப்பவன் பெரிதாக அறம் செய்து விட்டான் என்றோ, பல்லக்கை சுமப்பவன் ஏதோ பெரும் பாவம் செய்து விட்டான் என்றோ விதி, விதியின் பயன், அறத்தாறு என்றெல்லாம் சொல்லக் கூடாது என்கிறார் திருவள்ளுவர்.
அப்படியானால் அவர் பல்லக்கில் பயணிப்பதற்கும், இவர் சுமந்து செல்ல வேண்டிய ஏற்றதாழ்வு நிலைக்கும் என்ன காரணம் என்பதை வேறொரு குறள் மூலமாகவே நாம் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
எண்ணியவர் எண்ணியபடி தனது இலக்கை அடைகிறார். அதற்காக அவர் உறுதியான எண்ணத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் இந்தக் குறளில்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்கிறார் கணியன் பூங்குன்றனர் அவர்களும்.
அறிவார்ந்த தமிழ்முன்னோர் யாரும், நமக்கான துன்பத்தையோ, இன்பத்தையோ எண்ணத்தாலும் செயலாலும் நாமே பெறுகிறோம். தெய்வங்களோ மற்ற மற்ற மனிதர்களோ நமக்கு விரும்பியோ திட்டமிட்டோ எல்லாம் தருவதில்லை என்கின்றனர்.
நமக்கு எது வேண்டுமோ அதை செயலாற்றிப் பெற எப்படி விரும்ப வேண்டும் என்பதே மந்திரம். 
ஆக மந்திரம் என்பது மாயமல்ல; விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள எப்படி எண்ணத்தை முன்னெடுப்பது என்கிற மன ஆற்றலே மந்திரம். 
வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது. என்று விதி யாராலோ எழுதப்படுவதாக எண்ணியிராமல் சாதனைக்கு எண்ணத்தை கூர் தீட்டுவதுதான் மந்திரம். ஆக மந்திரம் என்பது மாயமல்ல தெய்வங்களோ மற்றவர்களோ நிறைவேற்றித்தர.
நீங்கள் விரும்பியதெல்லாம் அடைய எப்படி எண்ணத்தை முன்னெடுப்பது என்பதை, நீங்கள் யாரை முன்மாதிரியாக நினைக்கின்றீர்களோ அவரின் வாழ்க்கையைக் கூர்ந்து படியுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற ஆரியர் வருகைக்ககு முந்தைய இயல்பு சிந்தனையை முன்னெடுத்த இலக்கியங்களைப் படியுங்கள். அவைகளில் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, உங்கள் முன்னேற்றத்திற்கு, உங்கள் முன்னேற்றத்தை வடிவமைத்துச் சிறப்பதற்கான எண்ண ஆற்றலுக்கு ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.