பிராமண எதிர்ப்பாளர் ஈவேராவிடம் உள்ள பிராமண குணங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, பெரியாரின் அடிப்படையே பிராமணியம்தான் என்பது நூறு விழுக்காடு உண்மை! என்பதையும், பெரியாரை எதிர்ப்பதும் பிழையே என்பதையும், விடையாகத் தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126: சொந்தக் கட்டுமானத்தில்தான் முழுமையான ஆதாயம் பார்க்க முடியும். ஏனெனில் சொந்தக் கட்டுமானம் என்பது உடைமை குறித்தது. மற்றொன்றை எதிர்ப்பதில் சிலபல உரிமைகள் பார்க்கலாமே அன்றி அது நிரந்தரத் தீர்வு ஆகாது. மன்றொன்றை எதிர்க்கும்போது, அந்த மன்றொன்றையே நமது அடிப்படை என்று ஒப்புக் கொள்கிறோம். இரண்டு முதலாளிகளோ இரண்டு தொழிலாளிகளோ போட்டி போடுவதில் இருவருக்கும் இடையே தொடர்வது போர். ஒரு முதலாளியிடம் ஒரு வேலையாள் தொடர்ந்து போராடலாமே அன்றி போர் செய்ய முடியாது. பிராமணித்தை எதிர்க்கிறபோது அதை நமது முதலாளி ஆக்குகிறோம். பிராமணியத்தை எதிர்த்த பெரியார், பிராமணியத்தின் வேலையாளே என்கிற நிலையில் பெரியாருக்கும் அடிப்படை பிராமணியமே. பிராமணிய எதிர்ப்பில் சில பல உரிமைகள் கிடைத்திருக்கலாம். ஆனால் பிராமணியம் பெற்றது பேரளவு ஆதாயம். அதற்கு பாஜக சிறந்த எடுத்துக்காட்டு. நாம் எதையும் எதிர்க்க வேண்டியது இல்லை. நமது சொந்த இயலான தமிழியலை வலுப்படுத்துவதில்தான் நமது முழுமையான வெற்றி இருக்கிறது. சில பல ஆதாயம் பெறமுடியும் என்கிற கிளையான புரிதலில், பெரியார் முன்னெடுத்த பிராமணிய எதிர்ப்பை தவறு சொல்லிக் கொண்டிருப்பது அவர் முன்னெடுத்த அதே வகையான பிழையே ஆகும். பெரியார் பிராமணியத்தின் வேலையாள் என்றால், பிராமணிய எதிர்ப்பு என்கிற பெரியாரியத்தின் வேலையாள் தாங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் நாம் பெரியாரியத்தை எதிர்ப்பவர்கள். பிராமணிய எதிர்ப்பு பிழையே என்று அடிப்படையாக புரிந்து கொண்டால், அதே மாதிரியான பிழையாகும் அவரைத் தூற்றிக் கொண்டிருப்பதும். ஆகவே, பெரியாரையே எதிர்க்கிறேன் என்றெல்லாம் யாரும் தோள் தட்டிக்கொள்ள முடியாது. தமிழர்களாகிய நாம்- பிராமணியம், பெரியாரியம் என்கிற எவற்றையும் எதிர்க்க வேண்டியது இல்லை. நமது சொந்த இயலான தமிழியலை வலுப்படுத்துவதில்தான் நமது முழுமையான வெற்றியும் முன்னேற்றமும் இருக்கிறது.
உடைமை ஏழேழு தலைமுறைக்கும் தொடர்ந்து வரும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,155.