Show all

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேறுஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்ற வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.

தோல்விகளில் இருந்து எதுவும் கற்றுக்கொள்ள முடியாது. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிப்பது தோல்வியாளருக்கு நாம் சொல்லும் பொய்யான ஆறுதல். அந்தப் பொய்யால் தோல்வியாளர் தனது தோல்வியையே தொடர்ந்து அசை போடுகிறார். 

மக்களில் எண்பது விழுக்காட்டினர், மாற்றமோ முன்னேற்றமோ இல்லாமல், விழிக்க முயலாமல் தூங்கிக் கழிக்கிற, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிற பிழைபாட்டிற்கு, இந்தப் பொய்யான ஊக்குவிப்பே பெருங்காரணம் ஆகும். 

அவர்களுக்கான ஊக்குவிப்பு: ஐரோப்பியர் நள்ளிரவை நாள் தொடக்கமாக கொண்டிருக்கிற நிலையில், ஆரியர் நண்பகலை நாளின் தொடக்கமாகக் கொண்டிருக்கிற நிலையில், அதிகாலையையே தமிழ்முன்னோர் நாளின் தொடக்கமாக கொண்டாடியிருப்பதில் பெரும்பொருள் பொதிக்கப்பட்டுள்ளது. இரவுக்கும் பகலுக்கும் தற்பரை நேரமே வேறுபடும் பொழுதை நாள் தொடக்கம் என்று சொன்னது உறங்கியிருப்பதற்கும், எழுவதற்கும் இடையிலான பொழுது மிக மிக சொற்பமே என்று காட்டுவதற்கானது ஆகும்.
தோல்வியைத் தூக்கமாக விட்டெழுங்கள். வெற்றியின் நேரம் முப்பது நாழிகைகள் தொடரவிருக்கிறது என்று ஊக்குவிப்பதற்கேயாகும். 

முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளார் தமிழ்முன்னோர் பட்டறிவில் இருந்து தொல்காப்பியர்.

அந்த 'இடத்தில்' 'காலம்' என்கிற, நிலம் நீர் தீ காற்றால் உருவான நீங்கள் நான் உள்ளிட்ட அனைத்தும் அனைவரும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

'இடம்' என்கிற கடவுள், 'காலம்' என்கிற அனைத்தையும் ஒருங்கிணைத்து முயக்கிக் கொண்டிருக்கிறது. 

'காலம்' என்கிற அனைத்திற்கும் எல்லையும், தான்தோன்றி இயக்கமும் உண்டு. 

'இடத்திற்கு' எல்லையோ, தான் தோன்றி இயக்கமோ கிடையாது. நாம் அதில் இயங்குவதால், அந்த இயக்கத்தால், அது இயக்கம் பெற்று, வெறுமனே வெளியாக இருந்த கடவுள், 1வெளி, 2விண்வெளி, 3விசும்பு, என்கிற மூன்று நிலைகளை அடைந்து நம்மை முயக்குகிறது.

ஆக நாம் தோல்வியையே அசை போட்டுக் கொண்டிருந்தால் நமக்கு வெற்றியை ஒருபோதும் கடவுளால் ஒருங்கிணைத்துத் தர முடியாது.

நாம் அடைந்த சிறு சிறு வெற்றியைக் கொண்டாடுவதில்தான் பெரிய வெற்றிக்கான செப்பனிட்ட பாதை உருவாகிறது.

நான் பலபதின் ஆண்டுகள் புதிய வீடுகளுக்கு கதவு, சாளரக் கிரில்கள் அமைக்கும் இரும்பு வேலைப்பாட்டாளராக தொழில்ஆற்றி வந்திருந்தேன்.

நான் ஒரு கிரில் செய்யும் போது, ஒரு தவறு ஏற்பட்டால், அதை மீண்டும் மீண்டும் திருத்தும் வேலையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். அந்தக் கிரிலை அப்படியே தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு புதிய கிரில் செய்யும் பணியில் ஈடுபடுவேன். 

கேட்புக்குச் (ஆர்டர்) செய்ய வேண்டிய அனைத்து கிரில்களையும் செய்து முடிக்கும்போது அந்த ஒதுக்கிவைத்த கிரிலில் நான் செய்திருந்த தவறு எனக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். அப்போது அந்தக் கிரிலை எடுத்து, அந்தக் கிரிலில் உள்ள தவறை மிகமிக எளிதாகத் திருத்தி விடுவேன்.

நான் அந்தக் கிரிலை திருத்தும் வரை தொடர்ந்து முயன்றிருந்தால் பேரளவு பொருளும், பேரளவு காலமும் விரயம் ஆகியிருக்கும். இறுதியில் கூட அதைத்திருத்தியிருப்பேன் என்றும் சொல்லமுடியாது. பலகிரில் வேலைப்பாட்டாளர்கள் செய்த படிகட்டுக்கு அமைக்கிற கிரில்- படியோடு பொருந்தியே இருக்காது. காரணம் அவர்கள் தவறைத் திருத்துவதே இல்லை, என்பேதே ஆகும். எனவே தோல்வியில் இருந்து பாடம் கற்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இந்த எனது பட்டறிவுச் செயல்பாட்டில் வெற்றியில் இருந்துதான் நான் தவறையேகூட திருத்தும் பாடத்தைக் கற்றிருக்கிறேன் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,763.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.