உடல் உயிருடன் இருப்பதால் ஆன்மா உயிருடன் இருக்கிறதா? அல்லது ஆன்மா உயிருடன் இருப்பதால் உடல் உயிருடன் இருக்கிறதா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை. 31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: உயிர் என்றால் என்ன? மெய் என்றால் என்ன? உயிர்மெய் என்றால் என்ன? இந்த உயிர், மெய், உயிர்மெய் என்கிற தமிழ்ச்சொற்களில் பொதிந்துள்ள பொருளிலேயே, இந்தக் வினாக்கள் அனைத்திற்கும் விடை கிடைத்து விடுகிறதே. ஆன்மா என்பது தமிழில் உள்ள உயிர் என்கிற சொல்லுக்கான சம்ஸ்கிருதச் சொல்லாகும். எனவே ஆன்மா குறித்த தேடல் நமக்கு அன்னியம் ஆனது ஆகும். அந்தத் தேடலுக்கான தேவை நமக்கு எக்காலத்தும் இல்லை. அத்தேடல் எதற்கும் நமக்கு உதவாது. உயிர் தனித்து இயங்கும். மெய் தனித்து இயங்காது என்பது தமிழ் எழுத்திலக்கணத்தில் அடிப்படையான செய்தியாகும். உயிர் தனித்து இயங்கும். மெய் தனித்து இயங்காது என்று தமிழ் தெரிவிப்பதில் உள்ள நுட்பத்தை, தனித்த மெய்யாக இயற்கையில் எதுவும் இல்லை. எந்த மெய்யும் உயிரோடு இயைந்தே இயங்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். க் என்கிற மெய்யில் இருந்து ன் வரையும் உள்ள பதினெட்டு மெய்யில் எந்த மெய்யெழுத்தையும் இகர உயிர் வராமல் ஒலிக்க முடியாது. ஆக மெய் தனித்ததன்று அந்த மெய்யுக்குள் உயிர் இருக்கிறது என்கிறது தமிழ். இங்கு தமிழ் எண்மானத்திற்கு வாருங்கள். முதலாக இருக்கிற எண்ணை ஒன்று என்கிறது தமிழ். ஆனால் அந்த ஒன்றில் பொதித்து வைக்கப்பட்டிருக்கிற பொருள் யாது? ஒன்று- ஒன்றியிருத்தல்- ஒன்றிப்பு- ஒன்றியம்- அதாவது, இருவேறு ஒன்றியுள்ளது என்பதே அதன் பொருள். இரண்டு என்பதில் இருவேறு தனித்தனியாக உள்ளது. ஆக ஒன்று என்பதையும், இரண்டு என்பதையும் ஒன்று என்பது ஒன்றிய இரு, இரண்டு என்பது தனித்தனியான இரு என்கிறது தமிழ். தொல்காப்பியம் தெரிவிக்கிற- முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற நிலையில்- அடிப்படையானது இரண்டே என்கின்றனர் தமிழ்முன்னோர். திருக்குறள் தெரிவிக்கிற இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர்ஆதல் வேறு என்பதிலும்- அடிப்படையானது இரண்டே என்று நிறுவுகிறது தமிழ். ஆக கருத்திலிருந்து பொருளோ, பொருளிலிருந்து கருத்தோ வரவில்லை. இரண்டும் இருந்து கொண்டே இருப்பன என்கின்றனர் தமிழ் முன்னோர். ஆக உயிர் தனித்தோ, மெய் தனித்தோ இயங்க வல்லன அல்ல என்கின்றனர் தமிழ் முன்னோர். கூட்டியக்கத்தில் உயிர் இயக்கத்தை பார்க்க முடிகிறது. மெய்யின் தனித்த இயக்கத்தில் உயிரின் இயக்கத்தை வெளிப்படையாக காண முடிவதில்லை, அவ்வளவுதாம். கடவுள் என்ற சொல்லில் க் என்கிற மெய், ட் என்கிற மெய், வ் என்கிற மெய், ள் என்கிற மெய், அனைத்தும் ஒரு கூட்டியக்கச் சொல்லாக அமைய அ என்கிற உயிர் இரட்டித்தும், உ என்கிற உயிர் தனியாகவும் பயன்படுகின்றன. கடவுள் என்கிற சொல்லில் இருப்பன க்,ட்,வ்,ள் என்கிற நான்கு மெய்கள். இந்த நான்கு மெய்களோடு அ,உ உயிர் இணைந்து கடவுள் என்கிற கூட்டியக்கம் அமைகிறது. தமிழில் உள்ள அத்தனைச் சொற்களையும் அமைக்க இந்த பதினெட்டு மெய்யும், பனிரெண்டு உயிரும் போதுமானது. தமிழால்தான் கடவுள், அம்மா, அப்பா போன்ற சொற்கள் இயல்கின்றன. அது வேறு மொழிகளுக்கு வெவ்வேறு சொல்லாக இயல்கின்றன. தமிழோ, எந்தவொரு மொழியோ இருந்தாலும் இல்லா விட்டாலும் மெய் பதினெட்டும் உயிர் பனிரெண்டும் இருந்து கொண்டே இருக்கும். இந்த முப்பதும் உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவே. நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திர ஆற்றலால் ஆன தனித்தனி கூட்டியக்கம் நம் உடல். நாம் இறந்து போகிறோம் அல்லது காலமாகிறோம், என்பதிலேயே நாம் இறத்தல் என்பது இறையாகிப் போதல் அல்லது நான்கு திரங்களாக மாறிப்போதல் என்கிற செய்தியைத் தமிழ் பதிவு செய்து கொண்டுள்ளது. முதலெனபடுவது இடமும் காலமும் என்கிற அடிப்படைகளில் ஒன்றான காலமாகிப் போகிறோம் என்பதாக நாம் காலமாதல் என்கிற செய்தியை தமிழ் பதிவு செய்து கொண்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,248.