குவியம் செயலியில் சான்றோர்த்தளம் சிறப்பானதொரு நூல்வெளியீட்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தது. அதில் நூலாசிரியர் சக்கையா அவர்கள் தனது நூலான புலன இலக்கியம் குறித்த சிறப்பான ஆய்வுரையை வழங்கினார். 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை மிகச்சரியாக 7.00 மணிக்கு குவியம் செயலியில் கூட்டஅடையாளஎண்: 828-8992-9253. சான்றோர்த்தளம் சிறப்பானதொரு நூல்வெளியீட்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தது. தமிழ் முல்லை அவர்கள் பங்கேற்பாளர்களை உறவுமுறையில் விளித்து சிறப்பானதொரு வரவேற்புரையை அளித்தார்கள். தொடர்ந்து நன்னானே சு.இரமேசு வரவேற்பு இசை முழக்கி மகிழ்வித்தார்கள். தொடர்ந்து முன்னெடுத்த கண்ணன் இராமன் அவர்களின் குறள் நெறிவிளக்கம் நிகழ்ச்சியைச் சிறப்பாக அணி செய்தது. நிகழ்;ச்சியின் அடுத்த நிரலாக வேதியியலர் சக்கையா அவர்களின் புலன இலக்கியம் நூலை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார் முனைவர்.பாலமுருகன் அவர்கள். நிகழ்ச்சியின் நிறைவுரையாக சக்கையா அவர்கள் தனது விரிவான, செறிவான உரையை ஆற்றி அசத்தினார்கள். புலனத்தின் தொடக்கம் தொட்டு, புலன இலக்கியத்தின் வளர்ச்சி இன்றைய நிலைவரை விளக்கினார் சக்கையா. புலனத்தில் தான் படித்து மகிழ்ந்த படைப்புகள் குறித்த திறனாய்வை வழங்கி சிறப்பித்தார். அவர் திறனாய்வுக்கு முன்னெடுத்த பல படைப்புகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் படைப்பாக அமைந்த நிலையில், பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதைப் பெருமிதமாகக் கருதினார்கள். பங்களிப்பாளர்களின் சிறப்பான உரைவீச்சுக்களை அடுத்து, பாவலர்பெருந்தகை. மன்னர் மன்னன் அவர்கள் நன்றியுரை வழங்க சான்றோர்த்தளத்தின் கூட்டம் குறித்த நேரத்தில் சிறப்பாக நிறைவுற்றது.