வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் ஏன் இவ்வளவு அநியாயங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்? என்ற கேள்விக்கு, நான் தெரிவித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன். 17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்கிறார் திருவள்ளுவர்.
எப்படி அம்மா அப்பாவை விட பிள்ளைகள் அறிவாளர்களாக இருக்க முடியும்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். அம்மா அப்பாவின் தொடர்ச்சிதாம் நாம். அதனால் அவர்கள் தோளில் இருந்து நாம் சிந்திக்கிறோம்; தொடக்கதில் இருந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இல்லை.
ஆனால் அப்படியான தொடர்ச்சி தற்போதைய தமிழர்களுக்கு அமையவில்லை. கடந்த இரண்டாயிரம் அண்டுகளாகவே தமிழர்கள் தம் மரபில் இருந்து சிந்திக்காமல், தாத்தா ஒரு அயல் மரபிலும், அப்பா வேறு அயல் மரபிலும், நாம் இன்னொரு அயல்மரபிலும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மொழியைக் கூட வேரடியாகக் கற்காமல் இடுகுறியாக கற்றுக் கொண்டு ஏனோ தானோ வென்று சிந்திக்கிறோம். அந்த அயல்களாக, பார்ப்பனியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம், ஆகியவற்றின் மதங்கள் அல்லது கோட்பாடுகள் நமது தலையை நிறைத்து இருக்கின்றன. எவ்வளவு சிந்திக்க முயன்றாலும் குழப்பமே விடையாகிறது. உங்கள் கேள்விக்கான உங்கள் அறிதலும் அந்த வகையான குழப்பமே.
நம்முடைய தொன்மத்தில் மிகத் தலையாயது நம்முடைய தமிழ். அடுத்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் என்பன. தமிழை வேரடியாக கற்கவும், நமது இலக்கியங்களை ஆழ்ந்து கற்கவும் முயன்றால், இதுபோன்ற கேள்விகளை தூசு போல ஊதிவிடலாம்.
உங்கள் கேள்வியில் இருக்கிற கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். அந்தச் சொல்லை வேரடியாக கற்க முயன்றாலே உங்களுக்கு இந்தக் கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கும்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் என்று சித்திர்கள் தெரிவிப்பதுபோல, நாம் நிலம், நீர், தீ, காற்று. விசும்பு என்கிற ஐந்திரங்களில் விசும்பு தவிர்த்த நாற்திரங்களால் உருவாகியிருக்கிறோம். நாற்திரங்களால் உருவான நாமும் இந்த நாற்திரங்களும் நமக்கு உள்ளும், கடந்து வெளியிலும் இருக்கிற கடவுள் திரத்தில் இயங்குகிறோம்.
கடவுள் திரம் மூன்று நிலைகளில் அமையும். 1.இயக்கமும், எல்லையும் இல்லாத வெளி. 2.அதில் நாம் இயங்குவதால் எதிர் இயக்கம் பெற்ற விண்வெளி. 3.நம்மிடம் இருந்து பெற்ற இயக்கத்தால் நம்மை இயக்கும் விசும்பு.
ஆக கடவுள் என்பது நம்மை படைத்தது அன்று. நாமும் யாராலும் படைக்கப்பட்டவர்கள் அல்லர். நாம் தான்தோன்றியாக நாற்திரங்களில் உருவானவர்கள். இப்படி ஒரறிவு உயிரியிலிருந்து மனிதன் வரை அஃறிணை பொருட்களும் கூட தான்தோன்றி ஆனவைகளே. அநியாயங்களை செய்வது நம்மில் சிலர், நல்லது செய்வது நம்மில் சிலர், நல்லதை அநியாயம் என்றும் அநியாயத்தை நியாயம் என்று விதி அமைக்கிறவர்கள் நம்மில் சிலர். நாம் அவரவர் விருப்பத்திற்கு விதி எழுதி கடவுளிடம் அந்த வகைக்கு வழிநடத்தப்படுகிறோம். கடவுள் ஆண்பாலோ, பெண்பாலோ அன்று. ஒன்றன்பால்.
இதை கணியன் பூங்குன்றனார் தனது புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்குகிறார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இந்தப்பாடலில் வருகிற
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்ற அடிகள், ‘கடவுள் அநியாயங்களை வேடிக்கை பார்ப்பதில்லை கடவுளில் நீங்கள் எழுதுகிற விதிக்கு கடவுள் உங்களை வழிநடத்துகிறது.
கடவுள் என்ற பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லுக்கு என்னென்னவோ பொருள் வகுத்துக் கொள்வதால் உங்கள் கேள்வி எழக்காரணம் ஆகிறது.