Show all

வாழ்க! பெருவெடிவரை.

நம் வாழ்க்கையில், நம் தேவைகள் அனைத்துக்குமான தீர்வாக, ஒற்றை மந்திரத்தை, மிகச்சிறிய அளவுடையதாகக் கட்ட முடியுமா என்பது இன்றைக்கு என்னுள் இயல்பூக்கமாக எழுந்த தேடல் ஆகும். அந்தத் தேடலுக்குக் கிடைத்த விடையே இந்தக் கட்டுரை.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126:

கடவுளே!
விசும்பு தெய்வமே!
'பெருவெடிவரை வாழ்க்கை'
வழங்கி 
ஆவன செய்ய 
வேண்டுகிறேன்.
கடவுளே!
விசும்பு தெய்வமே!
அருள் செய்க.

இதன் சுருக்கம்:
பெருவெடிவரை வாழ்க்கை வழங்கி அருள்செய்க!

இந்தக் குறுமந்திரத்தையோ, குறுமந்திரத்தின் சுருக்கத்தையோ அன்றாடம் பலமுறை நமக்குள் முழங்கிக் கொண்டிருக்கலாம். எந்த அளவிற்கு இந்த மந்திரங்களின் முழக்கத்தை முன்னெடுக்கிறோமோ அந்த அளவிற்கு கடவுளில் நாம் நெருக்கமாகி, நம்இயங்கங்களுக்கான கடவுளின் முயக்கத்தை எளிதாகப் பெறுவோம். 

நாடகத்தமிழ் காலத்து வரையிலான, குலதெய்வங்களை என்னுள் நிறுத்தி, தேடிக் கிடைத்த விடையே இந்தக் குறுமந்திரம். 

இந்த மந்திரக் கேட்பில், கடவுளிடம், வாழ்க்கை என்கிற தமிழ்முன்னோர் பொருள் பொதித்த சொல்லை கேட்பாக பதிவிடும்போது:

1. நான் வாழவேண்டும். என்பது உறுதியாகிறது.
2. நான் வாழ்வதற்குத் தேவையான என் குடும்பம் வாழவேண்டும். என்பதும் உறுதியாகிறது.
3. நான் மற்றும் என் குடும்ப வாழ்க்கைக்கான ஐந்திரத்தின் மாட்சிகளான உடல்நலம், மனமகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு, தொடர்புகளின் ஒத்துழைப்பு என ஐந்தும் கிடைப்பதும் உறுதி ஆகிறது. 

இந்த மந்திரக் கேட்பில், கடவுளிடம், 'பெருவெடிவரை வாழ்க்கை' கேட்கும் போது:

1. எனக்கு பெருவெடி வரையிலான மறுபிறப்பு என்பது உறுதியாகிறது. 
2. மறுபிறப்பு உறுதியாவதால், நான் குழந்தைப்பேறுடன் வாழ வேண்டும் என்பது உறுதியாகிறது
3. குழந்தை பேற்றில் என் மறுபிறப்பு என்பதால், என் தலைமுறைகள் அனைத்தும் வாழ வேண்டும். என்பது உறுதியாகிறது.
4. என் தலைமுறைகள் அனைத்தும் குழந்தைப்பேறுடன் வாழ வேண்டும். என்பது உறுதியாகிறது.
5. இந்தச் செய்திகள் அனைத்தும் தமிழ்முன்னோர் நிறுவிய தமிழியல் செய்திகள் என்கிற நிலையில், தமிழே கடவுளில் நிறுவப்பட்ட முதன்மொழி என்கிற நிலையில், என்னோடும் என்தலைமுறையோடும் தமிழும் தமிழியலும் வாழும் என்பது திண்ணம்.

இந்த அடிப்படையில் நாம் யாரை வாழ்த்த நினைக்கிறோமோ அவர்களை, 
வாழ்க! பெருவெடிவரை
என்று வாழ்த்த, அவர்களும், நம் மிகச் சிறிய, ஒற்றை வாழ்த்தில், கடவுளின் முயக்கத்தைப் பெறமுடியும்.

வாழ்க என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் மட்டுமே. வாழ்க என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதிந்த பொருளில் உலகில் எந்த மொழியும் சொல்கொண்டிருக்கவில்லை. 

வாழ் என்பது தொழிற்பெயர். வாழ் என்கிற சொல்லைத் தொடர்ந்து வருகிற க, வியங்கோள் வினைமுற்று விகுதி என்று நிறுவப்படுகிறது. 

வியம் என்றால் பேரளவு, எல்லையின்மை, மாறுபாடு, சமமின்மை போன்ற வியத்தக்க பொருளைக் கொண்டது. கொள்வது கோள் என வியங்கோளில் உள்ள, கோள் என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பதான விரிவைக் கொண்டது.

வாழ்க என்கிற சொல் ஈடு இணையற்ற சொல். 

வாழ்க என்கிற சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப் படுவதற்கானது ஆகும்.

வாழ்க என்கிற வாழ்த்தோடு, வாழ்க பல்லாண்டு, வாழ்க நீடூழி என்று பல்லாண்டு, நீடூழி என்கிற சொற்களைப் பொருத்தி கால நீட்டிப்பு வழங்குவதற்குமான சொல்லாகும் வாழ்க.

வாழ்க சிறப்புடன், வாழ்க சீரும் சிறப்புடன், வாழ்க செழிப்புடன், வாழ்க வளமுடன் என்பனவாக, உயர்வு நவிற்சியும் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது வாழ்க முழக்கம்.

சிறப்பில்லாத வாழ்க்கை கிடையாது. அதற்கு பிழைப்பு என்கிற சொல்லைத் தமிழ் கொண்டுள்ளது.

பிழைக்க சிறப்புடன் என்ற வீழ்த்துவதற்கான முழக்கமாகி விடுகிறது வாழ்க சிறப்புடன் என்கிற முழக்கம்.

அவ்வாறானவைகளே வாழ்க சீரும் சிறப்புடன், வாழ்க செழிப்புடன், வாழ்க வளமுடன் என்கிற முழக்கங்கள் அனைத்தும்.

இந்தக் கட்டுரை படிக்கிற அனைவருக்கும், 'வாழ்க! பெருவெடிவரை.' என்று வாழ்த்தைத் தெரிவித்து கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,087. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.