Show all

மேல்வகுப்பில் தடம்பற்றிய இரண்டு இயல்அறிவு விடைகள்!

இயல்அறிவு (சயின்ஸ்) என் சிறு அகவையில் இருந்தே விரும்பிப் படிக்கும் பாடமாகும். அந்தப் பாடம் எந்த ஐயத்தையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் மிக்கது என்று நான் கொண்டாடிய காரணம் பற்றியதாகும் இயல்அறிவின் மீதான என் ஆர்வம். என் இரண்டு வினாக்களுக்கான தெளிவான விடையை மேல்படிப்பே எனக்கு வழங்கியது என்பது பற்றியது இந்தக் கட்டுரை.

17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இயல்அறிவில் படித்த ஒரு பாடம் நிரையூடல் (ஆஸ்மாசிஸ்) என்பது. அப்போது சவ்வூடு பரவல் என்று அதற்கு தலைப்பு இருந்தது.

செடிகளின் வேர்கள் நிரையூடல் முறையில் நீரை தரையில் இருந்து உறிஞ்சுகின்றன என்பது பாடத்தின் செய்தியாகும். செடிக்கு நாம் ஊற்றுகிற அடர்த்தி குறைந்த நீர், செடியின் வேர் இந்த வகைக்குக் கொண்டுள்ள அடர்த்தி மிகுந்த திரவத்தை நோக்கி மெல்லிய சவ்வின் ஊடாக பரவுவது சவ்வூடு பரவல் என்று நான்காம் ஆசிரியரால் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அடர்த்தி குறைந்த ஒன்று அடர்த்தி மிகுந்த ஒன்றை நோக்கி பரவுவது இயல்அறிவுப்பாடக என்னால் ஏற்க முடியவில்லை. ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, எனது நான்காம் வகுப்பு ஆசிரியர் எனக்கு வழங்கிய பட்டம் அதிகப்பிரசங்கி என்பது. ஆனால் எனது வினாவிற்கு ஆசிரியர் விடைதர முயலவில்லை.

இதற்கான விடையை நான் புகுமுக வகுப்பு படிக்கும்போது எனது தாவரவியல் ஆசிரியர் தெளிவுபடுத்தியதும் அந்த விடைக்கு நான் அத்தனைக் காலம் காத்திருந்ததும், என்னால் மறக்கமுடியாத கல்வி காலத்து நிகழ்வு ஆகும். இன்றைக்கு மாதிரி அன்றைக்கு, கூகுள் தேடல் எல்லாம் கிடையாதே.

செடியின் வேர் தரையில் இருந்து நீரை எடுத்துக்கொள்ளும் வகைக்குக் கொண்டுள்ள, நீரின் அடர்த்தி குறைந்த திரவத்தை நோக்கி, செடிக்கு நாம் ஊற்றுகிற நீரின் அடர்த்தி மிகுந்த திரவம் ஆகிய நீர் பரவுகிறது என்பது விளக்கமாக என் புகுமுகப் படிப்பு தாவரவியல் ஆசிரியரால் தெளிவு படுத்தப்பட்டது. 

அடுத்து, எனது மின்பணியாளர் தொழில் படிப்பில் எனக்குத் தெளிவுப்பாடான காந்தம் குறித்த கேள்வியாகும். எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது காந்தம் குறித்த இந்தக் கேள்வி எனக்குள் வந்தது.

காந்தத்தின் எதிரெதிர் விகற்பங்கள் (போல்) ஒன்றை ஒன்று ஈர்க்குமென்றால், புவியின் வடதிசையை நோக்கி ஈர்க்கப்படும் காந்த ஊசியின் முனை, வடவிகற்பம் என்று அடையாளமிட்டது உண்மையாகவே தென் விகற்பம்தானே என்பதாகும்.

அப்போது எனக்கு எட்டாம் வகுப்பு ஆசிரியர் கொடுத்த விளக்கத்தை நான் மனப்பாடம் செய்திருந்ததை அப்படியே தெரிவிக்கிறேன். 'பூமியின் பூகோந்த வட துருவம் தெற்கிலும். பூமியின் பூகோந்த தென்துருவம் வடக்கிலும் இருப்பதால் காந்த ஊசியின் வடக்கு பூமியின் வடக்கால் ஈர்க்கப்படுகிறது காந்த ஊசியின் தெற்கு பூமியின் தெற்கால் ஈர்க்கப்படுகிறது' என்பதாகும். விகற்பம் என்பது நான் எட்டாம் வகுப்பு படித்தபோது துருவம் என்று பேசப்பட்டது.
இந்த விடை ஒருபோதும் ஒற்றை விழுக்காட்டு அளவும் எனக்கு நிறைவு தரவில்லை. 

இது எனக்கு, நான் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மின்சாரப்பணியாளர் படிப்பில் ஈடுபட்டிருந்த போது தெளிவுபடுத்தப்பட்டது. புவியின் வடக்கைத் தேடும் காந்த ஊசியின் முனை, வடக்கைத் தேடும் விகற்பம் (நார்த் சீக்கிங் போல்) என்பது ஆகும். அது பின்னாளில் வட விகற்பம் என்றாகி விட்டது என்று தெளிவுபடுத்தப்பட்டது.

முதலில் நாம் கற்கத் தொடங்கியது புவி குறித்தே ஆகும். முதலாவதாக, வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று நான்கு திசைகளைப் புவிக்கு, காந்தம் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெயரிட்டு விட்டோம். கந்தம் கண்டு பிடித்து அதன் பண்பறியும் போதுதான் இந்தப் புவியே ஒரு காந்தம் என்று கண்டறிந்தோம். 

புவியின் வடதிசை வடவிகற்பம், தென்திசை தென் விகற்பம் என்று நிறுவிக் கொண்டோம். மாற்று விகற்பங்கள் ஒன்றையொன்று விரும்பும் என்ற அடிப்படையில் புவின் வடக்கை நோக்கி நிற்கும் காந்த ஊசி முனைக்கு தென்விகற்பம் என்று பெயரிடத் தோன்றாமல் வடக்கைத் தேடும் விகற்பம் என்று பெயரிட்டு விட்டனர். பின்னாட்களில் அது வடவிகற்பம் என்றே பேசப்பட்டது என்பதே உண்மையான செய்தியாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,391.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.