கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்! 20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர்- வெளி என்கிற கடவுள் ஒன்று. நிலம், நீர், தீ, காற்று என்கிற இறை நான்கு. என்பதாக ஆற்றல் மூலங்களை ஐந்தில் அடக்கி ஐந்திரம் என்று பொருள் பொதிந்த தலைப்பிட்டனர். சான்றோர் பெருமக்களை, அந்த ஐந்திரங்கள் தொய்ந்தவர்களாக தெய்வங்கள் என்றும், அவ்வாறன தெய்வங்கள் பல என்றும், பொருள் பொதிந்த இயல்கணக்கை நிறுவி பெருவாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழ்முன்னோர். சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்று தொழில் வணிகம் போற்றிய- சித்திரைப் புத்தாண்டு, ஆடி நீர்ப்பெருக்குவிழா, கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா, தைப் பொங்கல் திருவிழா ஆகியவற்றை பொது விழாவாக நாள் அடிப்படையில் கொண்டாடினர். பிறந்த நாள், காதணிவிழா, பெயர்சூட்டு விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, புதுமனைப் புகுவிழா, தொழில் தொடக்கவிழா, வளைகாப்பு, இந்த விழாக்களில் வீட்டு தெய்வம் கொண்டாடல். குலதெய்வ வழிபாடு ஆகியவற்றை குடும்ப விழாவாக நாள் அடிப்படையில் கொண்டாடினர். நாள் என்பது ஞாயிற்றாண்டு அடிப்படையில் ஏழுகிழமைகளில் ஒன்றாக அமைவது. பார்ப்பனிய விழாக்கள் நிலா ஆண்டு அடிப்படையில் திதியில் முன்னெடுக்கப்படும். திதி என்பது நிலாவின் வளர்மானம் தேய்மானத்தில் ஒரு பகல் ஒரு இரவு கொண்டது ஆகும். ஒரு விழா நாள், நாள்மீனில் கொண்டாடப்பட்டாலே அது தமிழர்விழா என்று புரிந்து கொள்ளலாம். இன்று கொண்டாடப்படும் கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா- கார்த்திகை மாதத்து கார்த்திகை நாள் மீனில் முன்னெடுக்கப்படும் விழாவாகும். கார்த்திகை திருநாளன்று விளக்கேற்றுவது, போன்று பனையோலைக் கொழுக்கட்டை தீனியும் சிறப்பானது. அதிலும் தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டை மிகவும் சிறப்பு பெற்றது. பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும். தமிழர்களின் விழாக்களில் வழக்கமாக முன்னெடுக்கப்படும் தூய்மை நடவக்கைகளைத் தொடர்ந்து இன்று மாலை வீடு முழுவதும் மண் விளக்குகளில் ஓளியேற்றி கொண்டாடி மகிழ்வர். உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்வர். இன்றைய கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா நாளில் தமிழ்மக்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறோம். கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் அகலிரு விசும்பின் ஆஅல் போல ஆடு இயல் அழல் குட்டத்து - (புறநானூறு 229) விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து இந்தப் பாடல்கள், தமிழர் வரலாறு நெடுக்கவும், விளக்கீட்டுத் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாடியிருந்தனர் என்பதை உணர்த்துவனவாகும்.
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் - (பரிபாடல் திரட்டு 10)
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை - (மலைபடுகடாம் 10)
எழில் வேழம் தலை எனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த
மூன்று ஒன்பதிற்று இருக்கை - (பரிபாடல் 11)
மாலை விளக்கின்வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது - (நற்றிணை 58)
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம -
(அகநானூறு - 141)
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,454.