வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, உறுதிப்படுத்தல் திருமணத்தில் உங்கள் துணையின் மீது உண்மையான காதல் மலர எத்தனை காலம் பிடித்தது? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை. 21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: எனக்கு நடந்தது உறுதிப்படுத்தல் திருமணமே. எனக்காக பார்க்கப்பட்ட பெண் ஒருவர் மட்டுமே. பெண் வீட்டில் நான் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். எதிரில் விரிக்கப்பட்ட பாயில் நான் பார்க்கச் சென்ற அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். நான் ஏறிட்டு பார்த்தபோது அந்த இருவிழிகள் சமகாலத்தில் என்னைப் பார்த்தன. எனக்குள் மின்னல் வெட்டியது போல் இருந்தது. நான் படித்திருந்த குறுந்தொகை, அகநானுறு எல்லாம் தமிழ்முன்னோருக்கு அமைந்தது நூறு விழுக்காடு சாத்தியந்தான் என்று, என்னுயிராக நான் கொண்டாடும் என் இயற்றமிழைப் பாராட்டியது என் மனம். அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் முதலாவதாகச் சந்தித்த என் தலைவியின் அந்த செவ்வரியோடிய கண்களைக் கொஞ்சமும் மறக்காமல் இன்றைக்கும் நினைவில் கொண்டு வந்து அந்தக் கால நினைவுகளில் புல்லரித்துப் போக முடிகிறது. எனக்கு என் தலைவியின் மீது காதல் மலர தேவைப்பட்டது தற்பரை நேரந்தான். தற்பரை நேரம் என்றால் எவ்வளவு தெரியுமா? தமிழ் முன்னோர் சங்கம் அமைத்து, கூட்டுச்சிந்தனையில் தமிழ் மொழிக்கு எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் வடித்து, தமிழர் வாழ்க்கைக்கு வடித்த பொருள் இலக்கணத்தில் முதல் எனப்படுவது இடமும் பொழுதும் என்று தெரிவித்து, நாம் வாழும் புவி ஞாயிற்றைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 365 நாட்கள், 15 நாழிகை, 31 விநாழிகை, 15 தற்பரை என்றும் கணித்த நடப்புத் தமிழ்த் தொடராண்டு 5123 ஆகும். தமிழ் முன்னோர் கணித்த அந்த ஆண்டுக்கு ஆறு பருவங்கள். ஒரு பருவத்திற்கு இரண்டு மாதங்கள். மாதத்தின் உட்பிரிவாக கிழமைகள். கிழமையின் உட்பிரிவாக நாட்கள். ஒரு நாளுக்கு பகல் முப்பது இரவு முப்பது என அறுபது நாழிகைகள். ஒரு நாழிகைக்கு அறுபது விநாழிகைகள். ஒரு விநாழிகைக்கு அறுபது தற்பரைகள். எனக்கு என் தலைவியின் மீது காதல் மலர தேவைப்பட்ட அந்தத் தற்பரை நேரம் இதுதான். என்னை பெண் வீட்டார் தங்கள் மருமகனாகத் தேர்வு செய்வார்களா? என் தலைவியாக வரப்போகிறவருக்கு என்னைப் பிடித்திருக்குமா? என்ற ஏக்கத்தோடு பல நாட்கள் நான் காத்திருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு பொறுமையாக இயங்கினார்கள் என் வீட்டாரும், பெண் வீட்டாரும். அப்பா என் ஓரகவையிலேயே காலமாகிப் போயுள்ளார். எனக்கு இன்னொரு அண்ணனும் இன்னொரு அக்காவும் உண்டு. அந்த அக்கா பெரிய பணக்காரி என்பதால் பெரியதாக தொடர்புகள் இல்லை. அண்ணன் என் சிறிய அக்காவிற்குத் திருமணம் முடித்ததில் தன் கடமை முடிந்ததாக ஒதுங்கியிருப்பவர். நான் பாசத்தோடு பழகும் சிறிய அக்காவிடம்தான், என்னை பெண் வீட்டார் தங்கள் மருமகனாகத் தேர்வு செய்வார்களா? என் தலைவியாக வரப்போகிறவருக்கு என்னைப் பிடித்திருக்குமா? என்ற ஏக்கத்தை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் ஆறுதல் சொல்லவுமாக நாட்கள் தொடர்ந்தன. பெண் வீட்டார் ஒப்புதல் தெரிவித்த போது - அன்றைக்கு அந்த செவ்வரியோடிய கண்களே என்னைத் தங்களுக்குப் பிடித்தமையைத் தெரிவித்தனதாமே! ஆனாலும் ஏன் இத்தனை ஏக்கம் இத்தனை நாட்களாய் இப்படி என்னைத் தொற்றியிருந்தது என்ற வெட்கம் என்னைக் கவ்வியது. ஓ! அதே அந்தத் தற்பரை நேரந்தான் அந்தப் பெண்ணுக்கும் என் மீது காதல் எழ தேவைப்பட்டிருந்திருக்குமோ என்று எனக்குள் அடித்த ஒரு மணியோசை எனக்கு உணர்த்தியது. எங்களுக்குள் முளைத்த இந்தக் காதலின் ஆழத்தை இரண்டு நிகழ்வுகள் இன்றைக்கும் எங்களுக்குள் பறைசாற்றும் மலரும் நினைவுகள் ஆகும். அடுத்த நாள் எங்கள் வீட்டிற்கான அழைப்பு முன்னெடுக்கப்பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஈரோட்டில் இருந்து எங்களூர் மேட்டூரில் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டோம். நாங்கள் வந்த வேனில் பெண்ணின் அம்மா, அப்பா. பாட்டி, மாமன்கள் மற்றும் உறவினர்கள் என பத்துக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மதிய உணவு அணியமாகிக் கொண்டிருக்கிறது. உணவுக்கு முன் சம்பந்தியார் கலந்துரையாடலில், ‘நீங்கள், மாப்பிள்ளை பெண்ணுக்கு மொத்தை வாங்கித்தந்திருக்க வேண்டும், தரவில்லை தேவலாம்; நாங்கள் வாங்கிக் கொடுத்துக் கொள்கிறோம். இந்தத் தலையணைகளையும், பாய், சமுக்களம் மற்றும் போர்வைகளையும் எடுத்துச் சென்று விடுங்கள் என்று நானும் அம்மாவும் இருக்கும் அண்ணன் தெரிவித்தது பெண்வீட்டாரை மிகவும் காயப்படுத்தி விட, வாய்ச்சண்டை பெரிதாகிக் கொண்டே போனது. ஒரு எல்லையில் தலைவியின் பாட்டியார் உட்பட சிலர் அவர்கள் வீட்டிற்கே என் தலைவியை அழைத்துச் சென்றுவிட அணியமானார்கள். சிலர் வேனுக்குச் சென்று விட்டார்கள். தலைவியின் பாட்டியார், இப்படிப்பட்ட குடும்பத்தில் இப்படிப்பட்ட கணவனிடம் நீ ஒன்றும் பிழைக்க வேண்டாம் என்று என்தலைவின் கையைப்பிடித்து இழுத்தார்கள். என் தலைவி வீட்டின் முற்றத்தில் போடப்பட்டிருந்த தென்னங்கீற்று பந்தலின் பந்தக்காலைப் பிடித்துக் கொண்டு கொஞ்சமும் நகராமல் கண் கலங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாகப் பெண்வீட்டார் என் தலைவியை மட்டும், ‘எப்படியோ போ’ விட்டு விட்டு வேன் ஏறிச் சென்று விட்டார்கள். கண்கலங்கிய நிலையில் என் தலைவி என்னை விட்டு பிரியவேண்டாம் என்ற உறுதியில் பந்தக்காலை இறுகப்பற்றியிருந்த நிகழ்வு இப்போது எழுதும் போதுகூட என்கண்கள் கண்ணீரைத் துளிர்க்க காரணமாகிறது. ஒரு சில மாதங்களில் என்தலைவியின் தாய்வீட்டாரோடு சமாதானம் ஆகிவிட்டோம் என்பது நிறைவாகச் சொல்லவேண்டிய செய்தியாகும்.
என் வீட்டார் என்றால் என் அம்மாவும், என் இரு அண்ணன்களும், ஒரு அக்காவும். நான் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்பணியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்று, மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் மின்ஒப்பந்ததாரர் உரிமம் பெற்று, சொந்தமாக வீடுகளுக்குத் தேவையான படிகட்டு, பால்கனி, சாளரக் கிரில்கள் செய்வதற்கான சிறு பணிமனையொன்று வைத்திருந்த போதும், என் இரு அண்ணன்களில் ஒருவரிடம்தான் நானும் அம்மாவும் அப்போது இருக்கிறோம். இன்னொரு அண்ணன் எனக்கு பெண் பார்க்கும் வகைக்கு நெருங்கி வந்திருக்கிறார். ஆம்! அவரின் மனைவியாகிய அந்த அண்ணியாரின் உறவுக்கார பெண் தான் எனக்குத் தற்பரை நேரத்தில் காதல் மலரக் காரணமான, உறுதிப்படுத்தல் திருமணத்திற்காக நான் பார்த்த அந்தப் பெண்.
எங்கள் திருமணம் முடிந்து பெண்வீட்டு அழைப்பில், நான் தலைவியின் தாய்வீட்டில் இருக்கும் இரண்டாவது நாள் அதிகாலையிலேயே எங்கள் பயணம் எனது விருப்ப தெய்வமான மருதமலை முருகன் கோயில் நோக்கி அமைந்தது.
பயணம் முழுக்க நானும் அவர்களும் பேசிக்கொண்டே வந்தோம். மருதமலையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு நகரப்பேருந்தில் பேசிக்கொண்டே பயணித்தோம். பயணதூரத்தில் பாதிதூரம் கடந்திருப்போம். திடீரென்று என் தலைவி பயணச்சீட்டு வாங்கிவிட்டீர்களா என்று நினைவூட்டினார். அச்சச்சோ என்று பரபரத்து, பயணச்சீட்டு எடுக்க மறந்ததைத் தெரிவித்து நடத்துனரிடம் நான் பயணச்சீட்டு கேட்டேன். அவர் பலமுறை இன்னும் இரண்டு சீட்டு யார் யார் என்று பேருந்தின் முன்னும் பின்னும் நடந்து கேட்டிருப்பார் போல. அதனால் அவரின் ஆற மறுத்த சினம், ‘நீங்கள் பயணச்சீட்டே வாங்க வேண்டாம்’ என்று எங்களை அங்கேயே இறக்கிவிடக் காரணம் ஆனது. அந்த நிகழ்வு எங்களின் மலரும் நினைவாகப் பதியும் வகைக்கே எங்களைப் பாதித்தது எங்களுக்குள் தற்பரை நேரத்தில் முளைத்திருந்த காதல் காரணமாய்.