Show all

தென்றலை அதன் பிறப்பிடத்திலேயே சந்திக்க பயணித்தோம்! ஆம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி.

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பது காற்று. அத்தகைய பெருமைக்குரிய காற்றுக்குத் தமிழில் பல பெயர்கள். வீசும் திசையைக் கொண்டு காற்றுக்குப் பெயரிட்டு அழைத்தவர்கள் நம் தமிழ்முன்னோர்.

வாடை:
வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கு வாடை எனப் பெயர் சூட்டினர் நம்தமிழ் முன்னோர். ஊதைக் காற்று எனவும் இதனை அழைப்பர். பெரும்பாலும் வாடைக் காற்றைத் துன்பமான சூழலுடன் தொடர்புபடுத்துவது வழக்கம். இன்றைக்குத்தான் உலகிலேயே மாசு நிறைந்த டெல்லி நமக்கு வடக்கில் அமைந்து பெயர் விளங்குகிறது என்றால், அன்றைக்கும் நம்தமிழ் முன்னோருக்கு வாதையாகவே அமைந்திருந்ததோ வடக்கு.

கொண்டல்:
கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல் காற்று. இதற்கு மழைக்காற்று என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கோடை:
மேற்குத் திசையிலிருந்து வீசுவது கோடை. மேற்குத் திசையைக் குடக்கு என்றும் அழைப்பர். அதன் காரணமாகவே அது கோடைக் காற்று என அழைக்கப்படுகிறது. கோடைக் காற்று பொதுவாக வெப்பமாக இருக்கும்.

தென்றல்:
தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று தென்றல். மென்மையாக இருக்கும். உடலுக்கும், மனத்திற்கும் மிகவும் இதமாக இருப்பது தென்றல் காற்றே. அந்த இனிய தென்றலை அதன் பிறப்பிடத்திலேயே சந்திந்து வரலாம் என்று கன்னியாகுமரி நோக்கி பயணித்தோம். 

சென்னையிலிருந்து தொடங்கிய எங்கள் பயணத்தின் முதல் தங்கல்- எங்கள் பிறப்பிடமான மேட்டூர்அணையில் அமைந்தது. பிரித்தானிய ஆட்சியில், எமது மாமன்னன் கரிகாலனுக்குப் பிறகு, காவிரியின் குறுக்கே பிரித்தானியரின் கொடையாக கட்டப்பட்டதுதான் மேட்டூர்அணை. அதன்பிறகு மேட்டூர்- மேட்டூர்அணையெனப் பெயர் கொண்டது.

நள்ளிரவில் இரண்டு சொகுசுஉந்துகளில் (கார்) தொடங்கிய எங்கள் பயணம், நான் இன்னும் பார்த்திட வாய்ப்பு அமைந்திடாத, குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோனின் கோயில் அமைந்த, திருச்செந்தூர் நோக்கி அமைந்தது. அதிகாலை சென்றடைந்தோம் திருச்செந்தூர். எங்கள் ஊர்திகளை நிறுத்த பெருஞ்சிரமம் கொண்ட வகையில், மிகப்பெரும் மக்கள் கூட்டம்.

தமிழ்மக்கள் இப்படி அனைத்து கோயில்களில் குவிவதைப் பார்த்தே- ஆகா! தமிழ் நிலத்தில் எளிமையாக தாமரை மலர்ந்துவிடும் என்று, ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனரோ பாஜகவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. தமிழர் கோயில் கொண்டாட்டம் வாழ்க்கை நெறி சார்ந்தது. புறப்பொருள் இலக்கணத்தில் ஐந்து நிலங்களுக்கான தெய்வம் சொல்லப்பட்டிருப்பது- ஐந்திரம் (பஞ்சபூதம்) என்கிற ஆற்றல்களின் ஒத்துழைப்பைக் கொண்டாடுவது. தமிழர்தம் இறை, கடவுள், தெய்வம் என்பன புறப்பொருள். அவற்றின் பொருளும் காட்சியும் அறிவு சார்ந்தது. இவைகளின் அடையாளம் தமிழர்களுக்கு நடுகல். 

பாஜகவினர் தமிழர் நடுகல்லை லிங்கமாக மாற்றி, ஆண்பால் பெண்பால் கற்பித்து, உருவமேற்றி, காமசூத்திரம் கொக்கோகம் எல்லாம் கற்பித்து, ஆபாசப் புளுகுகளால் ஒப்பனை செய்து வேதாந்த அடிப்படையில் ஹிந்துத்துவா என்கின்றனர். 

திருச்செந்தூரில் மக்களின் பெருங்கூட்டத்திற்கிடையே சேயோனைக் கண்டுவிட்டு, தென்றலின் பிறப்பிடம் கன்னியாகுமரி நோக்கி பயணித்தோம். எங்களின் அடுத்த தங்கல் கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்தது. அறைகளில் எங்கள் உடமைகளை வைத்துவிட்டு, தமிழர் வாழ்க்கையின் முறையை (மறை அதாவது வேதம் அல்ல) விளக்கிய ஐயன் திருவள்ளுவனாரின் சிலைகண்டு மகிழ பயணித்தோம். 

விசைப்படகில் சென்று பார்வையிட வேண்டும் திருவள்ளுவர் சிலையை. திருவள்ளுவர் சிலைக்கு அருகிலேயே விவேகானந்தர் மண்டபமும் இருக்கிறது. விசைப்படகுக்கான அனுமதி சீட்டு வாங்கும் போது சொன்னார்கள்: திருவள்ளுவர் சிலைக்கு செல்லாதாம் விசைப்படகு, விவேகானந்தர் மண்டம் மட்டுந்தான் பார்க்க முடியும் என்று. அடப்பாவிகளா தமிழகத்தில் என்ன பாஜக ஆட்சியா நடக்கிறது? திருவள்ளுவருக்கு ஏன் இந்த புறக்கணிப்பு என்று விவேகானந்தரை நாங்கள் புறக்கணித்து விட்டு அறைக்குத் திரும்பினோம்.  

எனக்கு சென்னையில் தொடர்ந்து இருந்து வந்த மூச்சு விடுவதில் சிரமம், கன்னியாகுமரியில் காணாமல் போயிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மின்சார உற்பத்திக்கான காற்றாலை பொறிகள் சுழன்று கொண்டிருந்தன.
காற்றாலை என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீச்சினால் சுழலக்கூடிய நீளமான இறக்கைகள் அதன் சுழல் அச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் “கம்பிச்சுருள் அதன் நடுவில் காந்தம்” என்கிற  மின்னோட்டத்திற்கான கருவியை இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். 

சென்னையில் அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுகிறது. 

காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55விழுக்காடு பங்கு வகித்து முதல் இடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20விழுக்காட்டு அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது. 

அறைக்கு வந்து ஓய்வில் செல்பேசியை இயக்கி பார்த்த போது, ‘அதிமுக ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கும் அக்கறையைத் தமிழர்களுக்கு மிக முதன்மையாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்குக் காட்டவில்லை’ எனத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார் என்ற செய்தியை காண நேர்ந்தது.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் தொடர்ந்து வலுவாக எதிர்த்து வருகின்றனர்.

எல்லா எதிர்க்கட்சிகளும் இத்திட்டதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட ஒன்றியநடுவண் அரசு, மக்களின் கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடிய தேவையில்லை, சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. என்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் தமிழர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் தராத பகுதி எதுவும் இருந்து விடக்கூடாது என்பதற்கான பாஜகவின் திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கக் கூடாது என்பதையே வழக்கமாக்கியுள்ளனர். திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டனக் கூட்டம் நடத்தியும் எடுத்துச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இந்த அதிமுக ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கும் அக்கறையைத் தமிழர்களுக்கு மிக முதன்மையாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்குக் காட்டவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். என்றும் கனிமொழி அவர்கள் தெரிவித்தாக செய்தி அறிய முடிந்தது.

எங்கள் அடுத்த தங்கலை மதுரையில் அமைத்தோம். அடுக்கடுக்காக தமிழ் மாதங்களின் பெயரில் நம் தமிழ்முன்னோர்கள் மதுரையில் வீதிகள் அமைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது.

தென்றல் தேடிச் சென்று, வாடைநிலத் தலைவர்களின் மாட்சியில்லாத அதிகார ஆட்சியால், தென்றலை இழந்து அடுத்த தமிழ்த்தலைமுறை வாடையில் வதைபடுவதில் இருந்து மீள என்ன வழி இருக்கமுடியும் என்ற சிந்தனையோடு சென்னை நோக்கி திரும்பினோம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.