தமிழர்களின் நிலமாக இருந்த மாலைத் தீவில் தற்போது வெறுமனே முப்பதாயிரம் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அறிவோமா மாலைத்தீவின் வரலாறு. 31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழர்களின் தாயகமாக இருந்த மாலைத் தீவில் தற்போது வெறுமனே முப்பதாயிரம் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 866 ஆண்டுகளுக்கு முன்பு இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 461 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கேயரிடமும், 365ஆண்டுகளுக்கு முன்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 132 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 54 ஆண்டுகளுக்கு முன்பு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 51 ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் தலைமை அமைச்சராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார். கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் எனவும் தமிழ் மட்டுமே அங்கு பேசும் மொழியாகவும் இருந்தது என்றும் தெரிகிறது. 39 ஆண்டுகளுக்கு முன்பு மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் ஏவிட்டா என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாலைத்தீவு கடல் வழி வணிகத்தில் முதன்மை பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி கிழக்கை போற்றும் கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கிப் பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்தின் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய தமிழர் கோவில்கள்மீது எழுப்பப்பட்டன எனக் கருதுகின்றார். மாலைத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியாயிற்று. அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தானெனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைத்தீவை ஆண்டார்கள். இவர்கள் தங்களைத் தமிழரின் வழித்தோன்றல்களெனக் கூறுகின்றனர். இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வணிகர்களின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5090 இல் (நவம்பர் 1988) விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து 'தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்' என்ற பெயரில், இயங்கிய இயக்கம் மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவு மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு மாலைதீவைக் கைப்பற்றியது தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திடம் இருந்து மாலைதீவை மீட்கும் அதிரடி நடவடிக்கையை கற்றாளை படை நடவடிக்கை (Operation Cactus) என்ற பெயரில் மேற்கொண்டது இந்திய ராணுவம். மாலைத்தீவுகளின் முக்கிய வாணிக நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,152.