தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் விவசாயத்திற்கு உதவி செய்த சூரியன், இயற்கை, கால்நடைகள் மற்றும் பலவற்றிற்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாடப்படுகிறது. பொதுவாக அறுவைடையில் இருந்து கிடைத்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புதிய அரிசிகளை கொண்டு வெல்லம், நெய் மற்றும் பால் சேர்த்து புதிய மண்பானையில் பொங்கல் செய்வதே வழக்கம். அறுவடை காலத்தை கொண்டாடவும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழா மிக தொன்மையான காலம் முதலே தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் உலகில் மிக நீண்ட காலமாக கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் விழாவும் ஒன்று. குறிப்பாக பொங்கல் ஒரு மதம் சார்ந்த விழா கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிருத்தவ தேவாலயங்களிலும், முஸ்லிம்களின் வீடுகளிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். உலகின் நிறைய நாடுகளில் தைப்பொங்கல் தினத்தை தமிழர் திருநாளாக அறிவித்துள்ளது. மேலும் கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பொங்கல் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே.