மந்திரம் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். மந்திரம் மாயக்கலை அல்ல. மந்திரம் என்பது மாயக்கலை போல வேறு மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது, மலைப்போடு தமிழிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பே. 10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உங்களின் எந்தத் தேவைக்கும் வெற்றிக்கும் அதை நீங்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதோடு விட்டு விடாமல் அந்த நினைப்பு உங்களிடம் கேட்கும் வேலைகளை நீங்கள் கட்டாயம் முடித்துத் தரவேண்டும் என்பதே மந்திரக்கலையாகும். நீங்கள் உங்கள் தேவைக்கும் வெற்றிக்கும் காணும் கனவில், உங்களுக்கு அந்த வகைக்கான நிறைவேறலுக்கு, நிறைய கேட்புகள் உங்கள் எண்ணத்தில் மீட்டப்படும். அவைகளை நீங்கள் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும். என்று மந்திரத்திற்கான வரையறையை இப்படி வேறுவிதமாகவும் பேசலாம். ஆக உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது உங்கள் மந்திரம் மட்டுமே. உங்கள் பெற்றோர், உங்கள் துணை, உங்கள் நட்பு, உங்கள் தலைமை, உங்கள் தொண்டர் இப்படி யாருடைய மந்திரமும் உங்கள் மந்திரத்தில் தலையிட முடியாது. அவரவர்கள் மந்திரத்தால் அவரவர்கள் தலைஎழுத்தை மட்டுந்தாம் எழுதிக் கொள்ள முடியும். உங்கள் தலைஎழுத்தை நீங்கள் எழுதிக் கொள்வதற்கு மற்றவர்கள் இந்தவகையாக எழுதுங்கள் என்று நிர்பந்திக்கலாம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் தலைஎழுத்து விசும்பில் பதிவேற்றப்படாது. பெற்றோர்- பிள்ளைகள் மீது அயல்மொழி வழிக்கல்வியைத் திணிப்பது, ஆட்சியாளர்கள் தங்கள் இனமொழியை திணிப்பது, தங்கள் இனமுன்னேற்றத்திற்கான பாடத்திட்டத் தேர்வை (நீட் தேர்வு) திணிப்பது போன்றவை உங்களுக்கான நிர்பந்தங்கள். இந்த நிர்பந்தங்களையெல்லாம் ஒரு அறத்தாறு போல பாவம் புண்ணியம் என்ற தலைப்பில் ஒரு தனி இன முன்னேற்றத்திற்காக ஒரு தனிமனிதச் சான்றோர் முன்னெடுத்த மதம் அதை சார்ந்த மற்ற இனத்தினர் மீது திணிக்கிறது. பாவம் புண்ணியம் என்பது தனிமனித சிந்தனையில் விளைந்த மதம் சார்ந்த கருத்தியல். அது அறத்தாறு அல்ல. இயற்கையின் இயம் (கோட்பாடு) இயக்கமே (நடைமுறை) அறத்தாறு ஆகும். அடிப்படை முதலான 1.இடம் 2.காலத்திற்கு தனித்தனி இயல்பு உண்டு. சார்பு நிலை முதலான 1.நிலம் 2.நீர் 3.தீ 4.காற்று 5.விசும்புக்கு தனித்தனி இயல்பு உண்டு. இவைகள் மட்டுமே நீங்கள் உங்களுக்காக முன்னெடுக்கும் மந்திரத்தில் அறத்தாறு ஆக கட்டுப்படுத்தும். உங்கள் பெற்றோரின் மந்திரங்கள் அவர்கள் தோளில் நீங்கள் அமர்ந்து சிந்திக்க தம் தம்மக்கள் அறிவுடைமைக்கு உரமாகும். ஒருபோதும் அவர்கள் முன்னெடுத்திருந்த மந்திரங்கள் உங்களுக்கு பாவமாகவோ புண்ணியமாகவோ தொடராது. நீங்கள் எழுதும் மந்திரம் உங்கள் வாழுங்காலத்திற்கு மட்டுமானது. நீங்கள் தாய்மொழி அடிப்படையோடு தாய்மொழியை வாழ்த்தி உங்கள் மந்திரங்களைத் தொடர்ந்தால் நீங்கள் கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், தொல்காப்பியர் தோளில் அமர்ந்து சிந்தித்த வகைக்கு உங்கள் மந்திரத்தை வலுப்படுத்திக் கொள்வீர். உங்கள் பிள்ளைகள் உங்கள் தோளில் அமர்ந்து சிந்திக்கிற போது அவர்களது வலிமை உங்களுடையது மட்டுமல்லாமல், கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், தொல்காப்பியர் சிந்தனைகளும் அவர்களுக்கு வலிமையூட்டும். நீங்கள் நரேந்திர மோடி தோளில் அமர்ந்து சிந்தித்தால், உங்கள் காலத்தை ஒருவழியாக ஓட்டி விடுவீர்கள். உங்கள் பிள்ளைகள் நரேந்திர மோடியின் வழித்தோன்றல்களோடு போட்டியிட வேண்டி இருக்கும் உங்கள் பிள்ளை இரண்டாந்தர குடிமக்களாக வரிசைப்படுத்தப் படுவார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது பெற்றோர் உள்ளிட்ட முந்தையோர்- பார்ப்பனியம் உள்ளிட்ட அயல் சார்ந்திருந்த காரணம் பற்றியே- தற்போது நாம் இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக பல்வேறு அயல் திணிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இவைகள் நமக்கான பாவ புண்ணியங்களும் அல்ல. அறதாறும் அல்ல. நம் அயல் சார்பில் திளைத்த காரணம் பற்றி நாம் வலிந்து திணித்துக் கொள்கிற அல்லல். உங்கள் தலைஎழுத்தை நீங்கள் மட்டுமே எழுதிக் கொள்ள முடியும். அதை அயல் சார்புகளில் நின்று எழுதினால், அது உங்கள் காலத்திற்கு உங்களிடம் கேட்கப்பட்ட வேலைகளை நீங்கள் அளித்த வகைக்கு மட்டும் பயன்படும். உங்கள் பிள்ளைகளை அயல்களுக்கு அடிமையாக கையளித்து விட்டுப் போவீர்கள். உங்கள் தலைஎழுத்தை நீங்கள் மட்டுமே எழுதிக் கொள்ள முடியும். அதை தாய்மொழி அடிப்படையில் நின்று எழுதினால், அது உங்கள் காலத்திற்கும், உங்கள் பிள்ளைகள் காலத்திற்கும் தமிழ்முன்னோர் அறிவாக நின்று பலனளிக்கும். பாவம் புண்ணியம் என்று, கூகுள் தேடலில் தலைப்பிட்டுத் தேடினால் உங்களையும் உங்கள் ஏழேழு தலைமுறையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அயல்களின் கால்களில் மண்டியிட்டு உங்கள் வாழுங்காலம் முழுக்க கெஞ்சினாலும் உங்கள் பாவம் தீரவே தீராது என்று உங்கள் அறிவை முற்றாக மழுங்கடிக்கும் வகைக்குப் பக்கம் பக்கமாக கொட்டிக் குவிந்து கிடக்கும். அயல்களில் தொடர்ந்து ஏமாறாதீர்கள். அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
என்கிற திருக்குறளில்:
பல்லக்கில்தான் செல்வேன் என்று சிந்தித்தவர் பல்லக்கில் செல்கிறார். நானெல்லாம் பல்லக்கில் செல்ல முடியுமா! என்று சிந்தித்தவர் பல்லக்கைச் சுமக்கிறார். இந்த நிலைக்கு அவர்களுக்கு காரணமாக அமைந்தது பாவம் புண்ணியம் என்கிற அறத்தாறு என்று யாராவது சொன்னால் ஏமாந்து விடாதீர்கள் என்று நெற்றியில் அடித்த மாதிரி சொல்கிறார் திருவள்ளுவர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,197.