இராசராச சோழன் குறித்து தொடர் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் தஞ்சை பெரிய கோயில் தமிழர் பெருமிதம் என்று கூறுகிறார். மேலும், ‘தஞ்சை கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்று தமிழ்மக்களுக்கு தனது வேண்டுகோளை பதிவுசெய்கிறார். இந்த அரிய கட்டுமானத்தை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள். மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில். இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு குடிநீர்க் குவளையைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இக்கோயில். இங்கு சிவநடுகல்லை கால்கோள் செய்து விட்டுதான் விமானக் கோபுரத்தை எழுப்பியிருக்கிறார்கள். பெருவுடையார் எனச் சொல்லப்படும் சிவநடுகல் 65 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. பெரிய கோயில் குறித்து அறிந்து வியக்க நிறைய நுட்பங்கள் உண்டு. இங்கு கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவநடுகல்லின் மையப் பகுதியில் நூல்வைத்துப் பிடித்து, கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றால் அது கோபுரத்தின் துல்லியமான மையத்தில் இருக்கும். தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர். நுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை. விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட தமிழர் ஆடற்கலையான சதுராட்ட நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் இராசராசன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பின் மையமாகவும் பெரிய கோயில் திகழ்ந்திருக்கிறது. மழை நீர் செல்வதற்கு இரண்டு வழிகள் அமைத்திருக்கிறார்கள். முதலில் விழுகிற மழைநீர், தரையில் உள்ள அழுக்கோடு நந்தவனத்திற்குச் செல்லும். பின்னர் நல்ல நீர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்திற்குச் செல்லும். அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை இராசராசசோழன் பெரியகோயிலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பெரியகோயிலில் இதுபோன்ற அற்புதங்கள் நிறைய இருக்கின்றன. கோயிலைப் பற்றிய ஆய்வுச் செய்திகள், அதிகம் மக்களிடையே பகிரப்பட வேண்டும். பெரிய கோயில் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் மணி.மாறன் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,203.
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்ற வகையில் தமிழர் மெய்யியலுக்கான இந்தக் கோயில் 216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை கொண்டதாக தமிழ்மன்னன் இராசராச சோழன் அவர்களால் கட்டப்பெற்றது.