Show all

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூயதமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா?

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதில்லை? அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா? என்பதாக சிலரிடம் தொடரும் அச்சத்திற்கு நேர்மறையான விடை அளிக்கும் முயற்சிக்கானது இந்தக் கட்டுரை.

30,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:

தமிழ் மட்டுமே தெரியும். தமிழே அவர்களின் தாய்மொழி. ஆனால் ‘தாங்கள் தமிழர் இல்லை’ பிராமணியர் என்று சொல்லிக் கொள்வோர்களும், மதங்களில் இணைகிற தமிழர்கள் சிலரும், சொந்தமாக தொழில் தொடங்குவதை பேரிடராக கருதி வேலை தேடி அலைய கார்ப்பரேட்டுகளின் தேவைக்கு பிறமொழிகளில் கல்வி பயில முனையும் சிலரும், ஏதேதோ காரணம் பற்றி, தங்கள் குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதை விரும்புவது இல்லை. மேலும் தமிழில் தொடர்ந்து மொழிக்கலப்பு செய்தும் வருகின்றனர். 

ஒரு எல்லையில் அவர்களின் கலப்புத் தமிழ், தமிழுக்கு அன்னியப்பட்டு அவர்களுக்கான ஒரு புதிய கிளை மொழி உருவாக்கப்பட்டு விடும். தென்னகத்தில் அண்மையில் மலையாளம் வரை புதிய கிளை மொழிகள் உருவான வரலாறு இப்படியானதுதாம். 

தற்போது இவ்வாறகத் தமிழர்களில் பலரும், பெயர்களில் வடமொழியையும், பேச்சில் ஆங்கிலத்தையும் தமிழில் கலந்து ஒரு புதிய கிளை மொழியை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் ஆங்கிலமும், தமிழும் இல்லாத இரண்டுக்கும் பொதுவான ஒரு கிளை மொழியை உருவாக்குவார்கள். 

இந்த மாதிரியான நடவடிக்கை தமிழுக்குப் புதிது அன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நடவடிக்கையே. தமிழ் தாய்மொழியாகவும், இயன் (இயற்கை) மொழியாகவும் இருந்து கொண்டிருப்பதால் தமிழர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். தமிழ் இருந்து கொண்டே இருக்கிறது.

பல புதிய புதிய மொழிகள், தம்மை அறிவாளராகக் கருதிக் கொள்வோர் மொழியாகவும், கிளை மொழியாகவும் பல ஆயிரக்கணக்கில் தோன்றி மறைந்து கொண்டே இருக்கின்றன. 

தமிழர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பதில்லை? காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் ஒரு கிளை மொழிக்குச் சொந்தக்காரர்கள் ஆகி தமிழர்கள் அல்லாதவர்கள் ஆகி விடுவார்கள். அவர்களைத் தமிழர்களாக நிலைநிறுத்தப் பாடாற்றுவது எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை.

அப்படி வைக்கவில்லை என்றால் தமிழ் அழியும் நிலை வருமா? தாய் மொழியாகவும், இயன் மொழியாகவும் இருக்கும் தமிழ் அழியாது. அடுத்த அடுத்த தலைமுறையில் வாழையடி வாழையாகத் தமிழ் தொடர்ந்துவருகிறது. தொடரும். என்பதே உண்மை. தமிழில் கலப்பு செய்வோர்களோடு சண்டை போடுவதைக் காட்டிலும் தூய தமிழ் பின்பற்றுவதற்கான தளங்களை வலிமைப்படுவதே தமிழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறவர்கள் தொடர வேண்டிய பெரும்பணியாகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.