13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல் வணக்கம், வழிபாடு என்பதானது அல்ல. தமிழர்களோடு கலந்த பார்ப்பனியர்கள், தமிழைக் கற்று தமிழுக்கு பார்ப்பனிய முலாம் பூசுவதையே பலஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வாழ்மானமாகக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில்- முயற்சியைக் கொண்டாடுகிற திருக்குறளுக்கு, பார்ப்பனியச் சாயம் பூசுகிற முன்னெடுப்பே கடவுள் வாழ்த்து என்கிற முதல் அதிகாரத்தின் தலைப்பு மாற்றமும் அந்த அதிகாரத்தில் அமைந்த குறள்களுக்கு தெளிவுரை சொன்ன வகையுமாகும். மற்ற மொழிகள் எல்லாம் எழுத்தைக் கூட்டினால் சொல் வராத, அடையாள எழுத்துக்களைக் கொண்டிருந்த நிலையில், தமிழை வாழ்த்துவதற்கு அகரத்தை தூக்கிப் பிடிப்பதே திருவள்ளுவருக்கு சிறப்பெனத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிக்கிறார் தனது திருக்குறளை திருவள்ளுவர். குறள் 2: ஆகவே கல்விக்கு அடிப்படையான அகரத்தை முதலாகக் கொண்ட மொழியை- தமிழை- அதன் அடிபடைகளைத் தொழுது கொண்டாடுவோம் என்கிறார் மொழி வாழ்த்து அதிகாரத்தின் இரண்டாவது குறளில் திருவள்ளுவர்.
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அ என்கிற எழுத்தே முதல். வலிமையாகச் சொல்லுகிறார். அடித்துச் சொல்லுகிறார் திருவள்ளுவர். கொண்டாட வேண்டியதும், தூக்கிப் பிடிக்க வேண்டியதும், அகரமே (தமிழே).
ஒலியன் எழுத்து முறையாக தமிழுக்கு (மட்டுமே) எழுத்து அமைக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ஒலிகளையும் ஒலியன் முறையில் எழுதிவிடக் கூடிய முதல் எழுத்துக்கள் என தமிழ்மொழி சுட்டுகிற முப்பது எழுத்துக்களுக்கும் முதல் எழுத்து அ எனவே அகரத்தைக் கொண்டாடுவோம் என்கிறார் திருவள்ளுவர்.
எவ்வாறெனில் உலகங்களுக்கெல்லாம் (கோள்களுக்கு எல்லாம்) தொடக்கமாக இருக்கிறான் பகவன் என்கிற ஞாயிறு என்பது போல. இந்தக் குறளில் எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையை விளக்குவதற்கு வானியலை மேற்கோள் காட்டியது, முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவுகிற தமிழன்- காலத்தை வாழ்ந்த அனுபவத்தின் மிகப்பெரிய அறிவாகக் கெண்டிருந்தான் என்பதை உணர்த்துவதாகும்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கல்வி என்ற அதிகாரத்தில் எண்ணும் எழுத்துமான மொழியை மக்களின் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
என்கிற குறள் மூலமாக.
இப்படிப்பட்ட கண்போன்ற போன்ற மொழியை, அறிவை (வாலறிவன்) அதன் அடிப்படைகளை (நற்றாள்;) கொண்டாடா விட்டால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்னவாக இருக்க முடியும்? என்கிறார் திருவள்ளுவர்.