Show all

மந்திரம். தொடர்கட்டுரை: 3.திருக்குறள் மந்திரக்கலைக்கான பாடப்புத்தகமே என்பதறிவோம்.

நமது தலைஎழுத்தை அல்லது நமது விதியை, நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதுதான் மந்திரக்கலையின் அடிப்படையாக தமிழ்முன்னோர் ஆய்ந்து கண்டுள்ளனர். அதை எப்படி எழுதுவது என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த நுட்பமாகும். 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: அ.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த நாள்மீனில் பிறந்து விட்டீர்கள். ஆ.நீங்கள் இந்த திசையில் பிறந்துள்ளீர்கள் இ.நீங்கள் பிறந்த போது கோள்கள் இந்த இந்த ஓரைகளில் இருந்துள்ளது என்று மூன்று வகையான கணிப்புகளை வைத்து உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று பலன் சொல்லுவது. உங்களுக்கு அமையப் போகிற வாழ்க்கையை மேலே குறிப்பிட்ட மூன்று கணிப்புகள் மூலம், அன்றாடம் பலன் தெரிவித்து, அதை உங்களை ஏற்றுக்கொண்டு அந்தக் கணிப்புகளின் போக்கில் உங்களை முன்னெடுக்கிற கலை நிமித்தகமாகும்.

கணியக்கலை, நிமித்தகத்தின் மேம்படுத்தப் பட்ட கலை. கணியக்கலை என்பது: உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட பெயரால்- உங்களுக்கு வாய்க்கப் பெற்ற இயல்பை புரிந்து கொண்டு, அல்லது உங்களுக்கு பிடித்த இயல்புக்காய் உங்கள் பெயரை அமைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இயல்புக்கான கல்வி, தொழில், என அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான கலை ஆகும். இது நிமித்தகத்தைத் தோற்கடிக்கிற கலை ஆகும். 

உங்கள் பெற்றோர் தீர்மானித்த இயல்பு உங்களுக்கு விருப்பமில்லை யெனில் அதுகுறித்தும் கவலைப்பட வேண்டாம். எது உங்களுக்கு விருப்பமான இயல்பு, எது உங்களுக்கு விருப்பமான கல்வி, எது உங்களுக்கு விருப்பமான தொழில் அவற்றை முன்னெடுப்பதற்கானதுதான் கணியக்கலை. 

அடுத்து மந்திரம் என்பது கணியத்தின் மேம்படுத்தப்பட்ட கலை. இந்தக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம். உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். 

உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். 

இது வரை திரட்டிய தகவல்கள் மூலம் மந்திரம் என்பதற்கு நாம் ஒரு வரையறையை வகுக்க முயல்வோம்:- பொது அறம் உடை, தனிஅறம் பேணு, தனித்து விடாதே என்பது நமக்குக் கிடைத்த வரையறை.

எனக்கான விதி என்பது, அயல் மதங்கள் சொல்லுகிற மண்டையோட்டில் எழுதப்பட்டுள்ள கீறல் அல்ல என்றால் முதலாவதாக அதை அந்தப் பொது அறத்தை உடைத்திட வேண்டும் என்கிற நமது வரையறையின் முதல் பகுதியைப் புரிந்து கொண்டு விட்டோம். 

அப்படியானால் அறமே வேண்டாமா என்றால் இல்லையில்லை அறம் வேண்டும். அப்படியானல் அது என்ன அறம்? உன் அறிவுக்குப் பொருந்துகிற தனிஅறம். இரண்டாவதாக தனிஅறம் பேணு என்கிற நமது வரையறையின் இரண்டாவது பகுதியைப் புரிந்து கொண்டு விட்டோம்.

பொதுஅறம் வேண்டாம் என்று சொன்னோம், தனிஅறம்பேணு என்று சொன்னோம், அப்படியானால்  தனித்துப் போய்விட முடியுமா? தனித்து இயங்கலாம் தனித்துப் போய்விட முடியாது. தனித்துப் போதல் என்பது அறம் என்கிற ஒழுங்கு ஆகாது. நமது அறம் என்பது பொது அறத்திற்கு ஒரு நிபந்தனை. நான் இதுதான், நான் இப்படித்தான் என்கிற ஒரு நிபந்தனை. தனித்துப் போகதிருப்பதற்கான பிணைப்பு என்ன? 

முன்னோர் வழிபாடு என்பதுதான் அந்தப் பிணைப்பு. தமிழ்நாட்டு முதல் அமைச்சர் தருவதாக அறிவித்திருக்கிற பொங்கல் பொருளுக்காக அல்லது நாம் ஏதோ ஒரு காரணம் பற்றி வரிசையில் நிற்கிறோம். நமக்கு பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. முன்னால் நிற்கிற யாரென்றே தெரியாத ஒருவரிடம், நான் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்- அழைப்பில் பேசிவிட்டு வந்துவிடுகிறேன்- என்று அவரை நாமும் நம்மை அவருக்கும் அடையாளப்படுத்தி கொள்கிறோம் அல்லவா வரிசையைப் பேணும் வகைக்கு. அப்படி வரிசையைப் பேணும் வகைக்கானதுதான் முன்னோர் வழிபாடு. 

திருக்குறள் மந்திரக்கலைக்கான பாடப்புத்தகம்! 
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
என்கிற குறளில் சிலர் பல்லக்கைத் தூக்கிக் செல்கின்றனர், ஒருவர் அதில் அமர்ந்து செல்கின்றார். வாழ்க்கை இப்படித்தான் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டது அல்ல என்று தெளிவுபடுத்தி- அது அவரவர்கள் அவரவர்களுக்கு விதித்துக் கொண்டது என்றும் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் மந்திரக்கலை செய்தியாக உணர்த்த, அறதாறு இதுவென வேண்டா என்று அடித்துச் சொல்லுகிறார். 

பொது அறம் உடைத்து தனிஅறம் பேணும் மந்திரக்கலையின் வரைறையை திருவள்ளுவர் இங்கே தெளிவு படுத்துகிறார். 

முன்னோர் வழிபாட்டை முன்னெடுப்பது குறித்து திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்கிற தனது முதல்குறளில் மற்ற மற்ற கோள்களுக்கெல்லாம் முதலாவதானது பகவன் என்கிற ஞாயிறு போல எழுத்துக்களுக்கெல்லாம் முதலாவது அகரம். என்று தெரிவித்து தனது திருக்குறளை னகர மெய்யில் முடித்து தமிழே நாம் பிரிந்து போகா வகைக்கான முதல் (முன்னோர்) என்று தெளிவு படுத்துகிறார். 

இந்தவகைக்கான விரிவான அலசலுக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: http://www.news.mowval.in/Editorial/katturai/Tamil-205.html
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.