30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சு.வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது. ஆனந்த விகடனில் வெளிவரும் வீரயுக நாயகன் வேள்பாரி நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் வேள்பாரியின் நாயகன் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆற்றிய நெகிழ்ச்சியுரை: ஏன் வேள்பாரியை எழுதினேன். இந்தக் கதாபாத்திரத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன். பலரும் எழுப்பும் கேள்வி இது. தமிழின் முதல் மகாகவி கபிலர். சங்க இலக்கியத்தில் 235 பாடல்களைப் பாடியவர், அவர். இந்தியாவின் முதல் பெரும் வள்ளல், வேள்பாரி. முதல் ஏழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் என்றுதான் நம் பேசுகிறோம். அதுவெல்லாம் இதிகாசங்கள், புராணங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள். வரலாற்று மாந்தர்கள் அல்லர். அதெல்லாம் பின்னாளில் எழுதப்பட்ட புரட்டுகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் இருக்கிற வள்ளல்கள் மட்டுமே வரலாற்று மாந்தர்கள். கடையேழு வள்ளல்களில்தான் பாரி, ஓரி, அதியமான் என ஏழு தமிழ் வள்ளல்கள் வருகிறார்கள். பாரி வரலாற்று நாயகன். அவர் வாழ்ந்ததற்கான சுவடு, தடயம் தமிழர்களின் தொல் மரபுகளில் இருக்கிறது; நாட்டார் வழக்காற்றுகளில் இருக்கிறது; கல்வெட்டுகளில் இருக்கிறது. கபிலர் உயர் நீத்த கபிலக்கல் பெண்ணையாற்றின் ஆற்றுக்கு நடுவே இன்றும் இருக்கிறது. தமிழின் முதல் மகா கவியையும், தமிழ்ப் பெரு நிலத்தின் முதல் வள்ளலையும் பாடாமல், ஒரு பாட்டாளானக, ஒரு எழுத்தாளனாக இருந்து என்ன பயன் என்ற பெரும் கேள்வி எழுந்தது. தமிழ் இலக்கியத்தில் அழிந்துபோன பட்டியல் நிறைய இருக்கிறது. அதில் ஒரு நூல் கபிலம். கபிலர் எழுதிய நூல். அது நமக்குக் கிடைக்கவில்லை. கபிலர் எதை எழுதியிருப்பார். கபிலர் எழுதிய 234 பாடல்களும் இருக்கிறபோது, கபிலம் மட்டும் ஏன் அழிந்துபோனது. ஒருவேளை இது பாரி என்ற மாமனிதரைப் பற்றிய காவியமாக இருக்கலாம். ஏனென்றால், அதற்குப் பின் ஆயிரம் ஆண்டுகள் மூவேந்தர்கள்தாம் தமிழ் நிலத்தை ஆண்டார்கள். எனவே, பாரியின் நினைவு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்திருப்பார்கள். எனேவே கபிலம் அழிந்துபோனதில் ஆச்சர்யமில்லை. ஒருவேளை கபிலர் எழுதிய கபிலம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்ததன் விளைவே இன்று, வேள்பாரியாக வந்திருக்கிறது. இன்றைக்கு உலகின் மிகப்பெரிய தொன்மங்கள், மிகப்பெரிய நாயகர்கள் என்று ஐரோப்பிய உலகம் கொண்டாடும் பல கதாபாத்திரங்கள், வீரயுக காலத்தில் எழுதப்பட்ட கிரேக்க காப்பியங்களில் உருவான கதாபாத்திரங்கள். அதே வீரயுக காலத்தில் தமிழகத்திலே எழுதப்பட்ட கதாபாத்திரம்தான் வேள்பாரி. இதை எடுத்ததில் எந்தச் சவாலும் இல்லை. எழுதத் தொடங்கியதும்தான் பெரும் சவால் காத்திருந்தது. வேள்பாரியை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஐந்து ஆண்டுகளாக இருந்தது. ஆனால், ஆனந்த விகடனில் முதல் அத்தியாயம் வந்தபோது என் கையில் இருந்தது நான்கு அத்தியாயங்கள்தாம். செவ்வியல் இலக்கியங்களைத் தங்கள் தாய்மொழியில் படிக்கின்ற பெரும்பேறு இந்த உலகத்தில் மூன்றே மூன்று சமூகத்துக்குத்தான் கிடைத்திருக்கிறது. அது கிரேக்கச் சமூகம், சீனச் சமூகம், தமிழ்ச் மூகம். இவ்வளவு பெரிய செவ்வியல் இலக்கியத்தை, சங்க இலக்கியத்தைப் பற்றிய நவீன ஆய்வுகள் இன்னும் விரிவாகப் பேசுகின்றன. 10 ஆயிரம் ஆண்டு நினைவுகளின் தொகுப்பு, நம் சங்க இலக்கியங்கள். அவ்வளவு பெரிய சங்க இலக்கியத்தை நவீன நாவலில் கொண்டு வருகிறபோது, மிகப்பெரும் உழைப்பும், ஆய்வும் தேவைப்படுகிறது. மற்ற உலக இலக்கியங்கள் எல்லாம், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைத்தான் தலையாயத்துவமாக பாடியிருக்கிறது. சங்க இலக்கியங்கள் மட்டுமே இயற்கையை மையப்படுத்தி முதன்மையாகப் பாடியிருக்கிறது. நான் யார் என்பதை ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஆனால், மோப்பக் குழையும் அனிச்சம், சிறுகன் யானை, பெருங்காது முயல்...' என ஒவ்வோர் உயிரினத்தைப் பற்றியும் ஒரு சொல், இரண்டு சொல்லில் கடத்தியிருப்பது ஆச்சர்யம். வெற்றிலை என்ற தாவரத்தைக் கண்டுபிடித்த குடி, கண்டுபிடித்த கூட்டம் யார் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் வருகிறது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் ஒரு தாவரத்தைக் கண்டுபிடித்தவர்கள் இவர்கள் என்ற குறிப்பு இல்லை. அவ்வளவு நுட்பமானது. நூறு பூக்களின் பட்டியலைப் போடுகிறார் கபிலர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேறு எந்த இலக்கியத்தில் இவ்வளவு பெரிய தாவரப் பட்டியல் இருக்கிறது? இலக்கியத்தைப் பற்றி, இயற்கையைப் பற்றி இவ்வளவு அறிவுகொண்ட, இவ்வளவு நுட்பமான காலத்தை எழுதுகிறபோது அதற்கு குறைந்தபட்ச நியாயமாவது செய்ய வேண்டும் என்ற, அந்த அழுத்தம் என்னை விடாது ஓடவைத்தது; விழிக்க விழிக்க எழுத வைத்தது. அதுதான் உண்மை. இது வரலாற்றுக்குச் செய்கிற மிக முக்கியமான நியாயம். வேள்பாரி நூறு அத்தியாயங்கள் கடந்ததை இன்று விகடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் மூலம் இரண்டு முதன்மையான விசயம் தமிழில் நடந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில்தான், தமிழ்ப் பத்திரிகைகளில்தான் எங்கும் இல்லாத ஒரு நிலை இருக்கிறது. அது, தீவிர இலக்கியம் பொதுமக்கள் ரசனைக்குள் வராது; அல்லது பல லட்சம் பேர் படிக்கிற ஒன்று இலக்கியமாக இருக்காது என்று... இந்தப் பிரிவு சுமார் 30 ஆண்டுகளாக இருக்கிறது. கேரளாவில் அது இல்லை. மலையாளத்தில் இன்றைக்கும் மிகச்சிறந்த நாவல் எது என்னவென்று பார்த்தால், அது பத்திரிகைகளில் தொடராக வந்த நாவலாகத்தான் இருக்கும். தமிழில்தான் நவீன, வெகுஜன இலக்கியம் என்பது தனி, தீவிர இலக்கியம் என்பது தனி என்றிருக்கிறது. இந்தச் சூழலில், நவீன இலக்கியத்தின் அனைத்து வடிவங்களையும் பொதுமக்கள் பரப்பில் கொடுக்கும்போது வாசகர்கள் அதைத் தோளில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதற்கு இந்த வேள்பாரி சாட்சி. இதை விட சிறந்த அடையாளம் வேறு என்ன வேண்டும். இந்தப் பிரிவு போலியானது; அல்லது பதற்றமானது; அல்லது தகுதியற்றது. அடக்க முடியாத குதிரை ஒரு வீரனுக்கு இருக்க வாய்ப்பே கிடையாது. எனவே, மிக முக்கியமான மாற்றம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஏன் இலக்கியம் படிக்க வேண்டும். இலக்கியம் என்ன செய்யும். அதை இந்த வேள்பாரியின் வழியாக நம் முன் கண் முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, மறைந்துபோன ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. ஆனால், பாரியைக் கொன்றாதிங்க ஐயா...' என்ற குரல் எல்லா இடத்திலும் கேட்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இருபது நாள்களுக்கு முன்னால் ஒரு சம்பவம். என் குடும்பத்தினருடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அருகில் இருந்த ஒரு 70 அகவை மதிக்கத்தக்க முதியவர், காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். என்னைக் குறுகுறுவெனப் பார்த்தார். காபி வந்து விட்டது. சூடாறி விடும். இருந்தாலும் பரவாயில்லை என என் அருகில் வந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்றேன். அவர் என்னிடம் நீங்க எழுத்தாளர் வெங்கடேசன்தானே?' எனக் கேட்டார். ஆமாங்க ஐயா' என்றேன். அவர் அடுத்த வார்த்தை என்ன சொல்ல வேண்டும்? நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். காவல் கோட்டம் படித்திருக்கிறேன். என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், அவர் சொன்ன அடுத்த வார்த்தை... பாரியைக் கொன்றாதீங்க...!' - சொல்லிவிட்டு, என் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் சென்று விட்டார். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். அவர் ஒரு முதியவர். கையெடுத்தும் கும்பிடுகிறார். எல்லா இடங்களிலும் இதேதான். வீட்டில் கூட தட்டச்சு பண்ண முடியவில்லை. இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் என் மகள். தேக்கனுக்கு மட்டும் ஏதாவது நடந்துச்சு...' என எச்சரிக்கிறார்கள்... நான் மூவேந்தர் ஆள் என்று சொல்லும் ஒரு கூட்டமும் இருக்கிறது. இதுதான் இலக்கியத்தின் வெற்றி. பாரி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இறந்து விட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அறவழிப்பட்ட ஒரு சிந்தனையின் அடையாளமாக ஒரு கதாபாத்திரம் மனதில் நின்றுவிட்டால், அதைச் சாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அது பாரி அல்ல, நான்...' என்று ஒவ்வொரு வாசகனும் நினைக்கிறான். அறம் வீழக் கூடாது என்று நினைப்பதுதான் மனிதத் தடம். அதைத்தான் இலக்கியங்கள் செய்யவேண்டும். ஒரு பொருளாதார நிபுணன் காலாவதியாவான்; ஒரு வரலாற்று அறிஞன் காலாவதியாவான்; இலக்கியவாதி ஒருபோதும் காலாவதியாக மாட்டான். ஏனெனில், மீண்டும் மீண்டும் அறத்தை நிலைநிறுத்துவது இலக்கியங்கள் மட்டுமே. இந்த இடத்தில் (பாரியின் முடிவு) நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். வரலாற்றை மாற்ற முடியாது. வரலாற்றை மீறுகின்ற ஆற்றல் இந்தப் புனைவு எழுத்தாளனுக்கு உண்டு. அது நடக்கும். (பலத்த கைதட்டல்) இந்தத் தொடருக்கு நிறைய சவால். இது எண்ணிம யுகம். மூன்று பத்திகளுக்கு மேல் படிக்க மாட்டர்கள் என்ற கருத்து இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில் பத்துப் பக்கங்களுக்கு மேல் 100 அத்தியாயங்கள் வந்திருக்கின்றன. அதைவிட முதன்மையமான சவாலாக நான் நினைப்பது இதுவே. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு நாள் தவறாமல் கொந்தளிப்பில் இருந்தது. இரண்டு பெரிய தலைவர்கள் பெரிய மரணம்; அது ஏற்படுத்திய தாக்கம்; மிகப்பெரிய போராட்டங்கள்; துப்பாக்கிச் சூடு... 24 மணி நேரம் தாங்கிய தலைப்புச் செய்தி இந்த இரண்டு ஆண்டுகளில் வேறு எதுவும் கிடையாது. இவ்வளவு கொந்தளிப்பான சூழலில் வேள்பாரி என்ற காவியத்தைத் தமிழர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். இந்தத் தொடரில் எல்லோரும் கொண்டாடும் ஒரு பகுதி முருகனுக்கும் வள்ளிக்கும் இடையிலான காதல். அந்த அத்தியாயம் வருகிற இதழ் வெளிவரும் மறுநாள், தமிழ்நாட்டில் ஒரு பெரிய மரணம் நிகழ்ந்தது; ஊரே பதற்றமாக இருந்தது. பொதுச் சூழல் அலையடிக்கிறது; ஒருநாள் கூட நிம்மதியான மனநிலை இருந்ததில்லை. இந்தச் சூழலையும் இலக்கியத்தால் கடக்க முடியும் என்பதை இந்தத் தொடர் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது. இந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. ஒரு இதழ் 10 பக்கம் ஒதுக்குவது சாதாரண விசயம் இல்லை. ஒவ்வொரு கிழமையும் பத்துப் பக்கம் எழுதுவது என்பது சவால். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் நான் ஒருபோதும் இதைச் சுமையாகக் கருதவில்லை. அது ஒரு சுகம். பாரியோடு வாழ்வது மகத்தான சுகம். பாரி என்ற சொல் பல இடங்களில் வரும். அந்த சொல்லை தட்டச்சு செய்யும்போது, வெடடி ஒட்டலாம். நான் அதைச் செய்ததில்லை. பாரி என தட்டச்சு செய்வது ஒரு மாதிரியான.... என்ன சொல்ல... அது வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய வாசகர்களைக் கொண்ட ஒரு பொதுமக்கள் பத்திரிகை இவ்வளவு பக்கங்களைக் கொடுத்து நீ விளையாடு' எனச் சொல்லும்போது நம்ம இந்தக் களத்துல விளையாடாம வேற என்னிக்கி விளையாடப் போறோம்...' அதுதான் இந்த விளையாட்டு. என் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் ஓவியர் மா.செ ஐயாவுக்கு நன்றி. ஒருநாள் அவர் எனக்கு பேசியல் அழைத்து, நான் இதைக் கேட்கக் கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். நூறு நரம்புகளைக் கொண்ட யாழை அவள் மீட்டிக்கொண்டிருந்தாள்'னு எழுதியிருக்கிங்க. என்னால நூறு கோடு போட முடியாது. அதனால, எண்ணற்ற நரம்புகளைக் கொண்ட யாழைனு மாத்தலாமா?'' னு கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரும் அதை எண்ணிப் பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் இது கலை. அதற்கு நான் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரே... அது பெரிய விசயம். அவர் எவ்வளவு பெரிய மனிதர்... இப்படி மெனக்கெடுகிறாரே... அவரோடு இணைந்த இந்தப் பயணம் எனக்குப் பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.