என்னிடம் கேட்கப்பட்ட, மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன? என்பதற்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை. 23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே, ஆங்கிலச் சொல்லான நாலெட்ஜ் என்ற சொல் கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் உலக மொழிகளில் தமிழில் மட்டுமே விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. தொல்காப்பியம் ஒரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரிகள் குறித்தெல்லாம் தெளிவாகப் பட்டியல் இடுகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ ஐந்துவகை உணர்வு (பைவ் சென்ஸ்), ஆறாம் உணர்வு (சிக்ஸத் சென்ஸ்) என்று கூறும் வழக்கைக் கொண்டுள்ளனர். அதாவது இந்த உணர்வு (சென்ஸ்) எனும் சொல் சென்சஸ் என்று குறிக்கப்படும் போது புலன்கள் என்கிற தமிழ்ச் சொல்லோடு பொருந்துகிறது. நமது தமிழ்மொழி வரிசைப்படுத்துவது போன்ற ஒரறிவு ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐயறிவு ஆறறிவு என்கிற வரிசைப்பாட்டையும் அதற்கான ஆய்வையும், ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகள் எதுவும் கொண்டிருக்கவில்லை. இந்த ஐந்துவகை உணர்வு (பைவ் சென்ஸ்), ஆறாம் உணர்வு (சிக்ஸத் சென்ஸ்) போன்றவற்றை உணர்வு மற்றும் புலன்களோடு மட்டுமே தொடர்புகொண்டதான ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றனர் உலகினர். உலக மொழிகள் அறிவை மனிதனிடம் இருந்து மட்டுமே முன்னெடுக்கின்றன. நாலெட்ஜ் என்கிற மனிதனிடமிருந்தே தொடங்குவதாக நம்புகிற அறிவைப் பற்றி உலகமொழிகள் பக்கம் பக்கமாக எழுதி மலைக்கின்றன. ஆனால் நமது தமிழ் மொழியோ, உலகினரைப் போல- திடீரென்று மனிதனிடம் இருந்து மட்டுமே அறிவு வெளிப்பட்டதாகக் கருதவில்லை. இல்லை என்பதிலிருந்து புதியதாக எந்தவொரு இருப்பும் வந்து விட முடியாது. அதற்கான அடிப்படை அந்த இல்லா நிலையிலும் இருந்தே இருக்கும் என்று சிந்திக்கின்றனர் நம் தமிழ் முன்னோர். ஆகவே தமிழ் முன்னோர் இருவேறு உலகத்தியற்கை திருவேறு தெள்ளியர் ஆதல் வேறு என்கின்றனர். ஆனால் இன்றைக்கு உலகினர் கருத்து முதல் வாதம் என்று ஒரு அணியனரும், பொருள் முதல்வாதம் என்று மற்றொரு அணியினரும் மோதிக் கொள்கின்றனர். உலகினர் அறிவை மனிதனில் இருந்து மலைக்கிற பாங்குடையவர்கள். நமது தமிழ் முன்னோர் அறிவானது பொருளில் இயக்கமாகவும் உயிரிகளில் விலங்குகள் வரை ஓரறிவு தொடுதல் என்றும்- ஈரறிவு தொடுதல், சுவைத்தல் என்றும்- மூவறிவு தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்றும்- நான்கறிவு தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்றும்- ஐயறிவு தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் என்றும்- மனிதனில் ஆறறிவு தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் மற்றும் இவற்றின் கூட்டு உருவாக்கம் ஆன மனம் என்கின்றனர். இந்த அடிப்படையில் மேலும் விரிவாகப் பார்க்கும் போது, உலகம் படைக்கப்பட்டதான கோட்பாட்டில் நம் தமிழ் முன்னோருக்கு உடன்பாடு இல்லை. அண்டத்தில் பொருள்கள் கோள்கள், உயிரிகள் அனைத்தும் தான்தோன்றிகளே என்று தெரிவிக்கின்றனர் தமிழ் முன்னோர். அதே போல நமக்கான விதிகள் இயல்அறிவர்கள் (சயின்டிஸ்டுகள் சொல்லுவது போல தற்செயலானதோ, மதங்கள் சொல்லுவது போல தெய்வங்களால் முன்குறித்து எழுதப்பட்டதே அன்று) தான் தோன்றிகள் தங்களுக்குத் தாங்களே எழுதிக் கொள்வதே என்கின்றனர்.
முதலெனப்படுவது இடமும் பொழுதும் என்றும், தொடக்கத்தை இரண்டாகவே தமிழர் காட்டுகின்றனர். முதலாவது எண்ணான ‘ஒன்று’ என்கிற எண்ணைக் கூட ‘ஒன்றிய இரண்டு’ என்கிற பொருளில் அமைத்திருக்கின்றனர்.