சங்ககால இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அக்கால மகளிர் பறித்து விளையாடியதாக தொன்னூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அந்த மலர்களில் ஒவ்வொன்றாக ஆசிரியர் பக்கத்தில் விளக்கும் முகமாக ஏழாவதாக ஆவாரை மலர் குறித்து அமைகிறது இந்தக் கட்டுரை. ஆவாரை மலர் தமிழ்மருத்துவத்தில் நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான நோய் நீக்கத்திற்குப் பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும். ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ? என்பது தமிழ் மருத்துவப் பழமொழி. ஆகும். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். தலைவியை அவளது பெற்றோர் அவள் விரும்பும் தலைவனுக்குத் தர மறுத்தால் ஊரில் மடலூர்ந்து வந்து பெறப்போவதாக அந்தத் தலைவன் குறிப்பிடுகிறான். பனைமட்டைகளால் குதிரை செய்வாராம். அதற்கு ஆவாரம் பூ மாலை சூட்டுவாராம். இன்னாள் இவ்வாறு வரச்செய்தாள் என எழுதி அதன்மேல் வைத்திருப்பானாம். இதனைப் பார்க்கும் ஊரார் அந்தத் தலைவன்- தலைவிக்கு மணமுடித்து வைப்பார்களாம். என்கிற சங்ககால காதல் திருமண நடைமுறை சங்க நூல்களில் காணக்கிடைக்கிறது.
10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆவாரை ஒரு சங்க கால மலராகும். ஆவாரை மலர் இன்றைக்கும் தமிழர் பயன்பாட்டில் மகுதியும் கொண்டாடப்பட்டு வரும் மலராகும். பொங்கல் திருவிழாவின் போது இந்த மலருக்கு பஞ்சம் வந்து விடும். ஆனாலும் இந்த மலர் அன்றாடப் பயன்பாட்டில் இல்லாத காரணம் பற்றி இந்த மலர் வணிக நோக்கில் விளைவிக்கப் படுவது இல்லை. இன்றைக்கும் மலைப்பகுதிகளில் இந்த மலர்கள் மஞ்ச மசேலென்று பூத்துக் குலுங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,197.