இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்;கின்றேன். 23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இறை, கடவுள், தெய்வம் என்பன பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்கள். அவற்றுக்குப் பொருத்தமான நேரடி மொழிபெயர்ப்பை உலகின் எந்த மொழிகளிலும் தேடக் கிடைக்காது. ஆக இறை, கடவுள், தெய்வம் குறித்து தெளிவடைய தமிழில் மட்டுமே தேட வேண்டும். தமிழர் ஐந்திரம் என்ற தலைப்பில் வெளிப்படுத்திய செய்திகளை- இந்த ஐந்திரம் குறித்த அறிவு தங்களுடையது என்று காட்ட, பார்ப்பனியர் பஞ்ச பூதம் என்று மொழிமாற்றம் செய்து கொண்டனர். அண்ட வெளியும், அண்ட வெளியில் உலாவரும் அடிப்படை இயக்கங்களான விசும்பு, நிலம். நீர், தீ, காற்று, என்பனவற்றை தமிழர் ஐந்திரம் என்றனர். திரம், திரள், திரட்சி என்கிற இடையின ரகரம் கொண்ட சொற்கள் குவிந்த ஆற்றலை குறிக்க தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே குவிந்த ஆற்றல் அடிப்படைகளான விசும்பு, நிலம். நீர், தீ, காற்று என்பனவற்றை தமிழ்முன்னோர் ஐந்திரம் என்று அழைத்தனர். இந்த இந்த ஐந்திரங்களில் இருந்து வெளிப்படுகிற ஆற்றல் திறன் என்று அழைக்கப்படுகிறது. திற, திறப்பு, திறவுகோல் என்கிற வல்லின றகரம் கொண்ட சொற்கள் வெளிப்படுகிற ஆற்றலைக் குறிக்கப் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக ஐந்து வகையான திறன்களை வெளிப்படுத்துகிற விசும்பு, நிலம். நீர், தீ, காற்று என்பனவற்றை தமிழ்முன்னோர் ஐந்திரம் என்று அழைத்தனர். இதில் விசும்பு என்பது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய அண்ட வெளி என்கிற ஆற்றல் வெளிப்பாட்டுத் திரமாகும். இந்த அண்டவெளியை விளக்கமாகப் புரிந்து கொள்ள இயலாமல், வெறுமனே ஆகாயம் என்று கடந்து சென்றுவிடுகின்றனர் தமிழ்முன்னோரிடம் இருந்து ஐந்திரம் குறித்த அறிவை மேலோட்டமாக பெற்றுக் கொண்டு புரியாத இடங்களுக்கு கற்பனைகளை நிறைத்து பயன்படுத்தி வருகின்றனர் பார்ப்பனியர். அந்தப் பார்ப்பனிய சார்பு அடிப்படையில்தான் இறை என்ற சொல்லிற்கு இறைவன் என்று ஆண்பால் விகுதி கொடுத்தும், படைப்பு என்கிற அமைப்பே இல்லாத இறையை படைப்பின் அதிகாரமாக கற்பனையாக உருவகித்து இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன? என்று ஒரு கேள்வியை முன்னெடுக்க வேண்டிய நிலை நமக்கு வந்திருக்கிறது. அண்டவெளியோ, அண்ட வெளியில் உலா வருகிற நிலம். நீர், தீ, காற்று, என்கிற நாற்திரங்களோ மற்றும் அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் என்று- மரம் மட்டை நீங்கள் நான் என்று- அனைத்தும் தான்தோன்றிகளே அன்றி யாரின் படைப்புகள் அன்று. உண்மையில் மனிதன் மட்டுமே படைப்பாளி. மனிதன் உருவாக்கி பயன்படுத்தி வருகிற கருவிகள் அனைத்தும் மனிதனின் படைப்புகள். இவைகளை தமிழ்முன்னோர் செயற்கை என்ற தலைப்பில் அடக்குகின்றனர். இயற்கை தான்தோன்றியாகவே நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களில் இருந்து பல்வேறு ஆக்கங்களாக உருவாகின்றன. அவைகள் ஒவ்வென்றும்; வெவ்வேறு எண்ணிக்கையிலான கூட்டியக்கங்கள். கூட்டியக்கங்கள் சிதைந்து மீண்டும் நாற்திரங்களில் ஐக்கியப்பட்டு, மிண்டும் அவற்றிலிருந்து புத்தறிவோடு புது உருவாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) ஒன்றிலிருந்து ஒன்று உருவானதாக பரிணாமம் என்று தலைப்பிடுகிறது. ஆனால் சிதையும் ஒவ்வொன்றும் முன்னதில் பெற்ற அறிவின் அடிப்படையில் மட்டுமே ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு மனிதன் வரை உருவான தனித்தனி தான்தோன்றிகளே என்கின்றனர் தமிழ் முன்னோர். அந்த வகையில் அவைகளின் அறிவை பதிப்பிக்கும் இடமாக விசும்பு என்கிற அண்டவெளி அவைகளுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்த நாற்திரங்களையே தமிழ்முன்னோர் அண்ட வெளியில் இறைந்து இயங்கிக் கொண்டிருப்பதால் இறை என்றனர். நாம் ஐந்திரங்களில் தான்தோன்றியாக உருவாகி, ஐந்திரங்ளையே உண்டு, அருந்தி, மூச்சிழுத்து, காய்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஐந்திரத்தில் உருவான ஒரு புதிய ஒருங்கிணைப்பு அல்லது கூட்டியக்கம். ஒருங்கிணைப்பு செயலற்று போதலை இறப்பு என்கின்றனர் தமிழ் முன்னோர். அதாவது மீண்டும் இறையாகிப் போதல் என்று பொருள். காலமாகி விட்டார் என்றும் செல்லுகின்றனர். அந்தக் காணாமல் போன புதிய கூட்டியக்கமே உயிர். முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது தமிழ்முன்னோர் கண்டுபிடிப்பு. இரண்டை ஒற்றாவதாக முன் வைக்கின்றனர் தமிழ் முன்னோர். ஒன்று என்கிற எண்ணிலேயே இரு தனிகள் ஒன்றியிருத்தல் என்பதாக ஒன்றுதல்- ஒன்று என்ற வினையைப் பெயராக்கியிருக்கிறார்கள். வினை பெயராக வரும் சொல்லுக்கு தொழிற்பெயர் என்ற இலக்கணம் தமிழ் கொண்டிருக்கிறது. ஆக தமிழில் ஒன்று என்பது ஒன்றிய இரு தனிகள். இரண்டு என்பது பிரிந்த இரு தனிகள். ஆக முதல் எனப்படுவது எப்போதும் இரண்டுதாம் என்கின்றனர் தமிழ்முன்னோர். பொருள் என்றால் அகமும் புறமும், நாள் என்றால் இரவும் பகலும், மதங்கள் கருத்து முதல்வாதத்தை முன்னெடுத்தாலும், இயல்அறிவு (சயின்ஸ்) பொருள் முதல் வாதத்தை முன்னெடுத்தாலும் , தமிழ்முன்னோர் முன்னெடுப்பது கருத்தும் பொருளும் சேர்ந்தே இருப்பது என்பதாகும். இருப்பு என்பதும், இல்லை என்பதும் சேர்ந்தே இருப்பதாகும். இல்லையிலிருந்து இருப்பு தோன்ற முடியாது என்பதும், இருப்பு இல்லாமல் போக முடியாது என்பதும் தமிழ் முன்னோர் முன்னெடுக்கும் வாதமாகும். ஆக இறை என்பது ஐந்திரங்கள். 1.இயக்கம் இல்லாத- எல்லை இல்லாத- வெளியாகவும், 2.மற்ற நாற்திரங்களால் இயக்கம் பெற்று விண்வெளியாகவும், 3.இயக்கம் தந்த நாற்திரங்களை இயக்கும் விசும்பு ஒரு திரமாகும். நிலம், நீர், தீ, காற்று மற்ற நாற்திரங்கள். இவைகளே தமிழ் முன்னோர் சுட்டிய இறை. இவ்வளவு விளக்கங்கள் அடங்கிய ‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.