Show all

கடல் எல்லை! அறிந்து கொள்வோம் வரிசையில்.

நம்மை ஒட்டி கடலில் பக்கம் பக்கமாக நாடுகள் அமையாமல் இருந்தால், நமது கடல் எல்லை மிகப் பெரியது ஆகும். நாடுகள் அமைந்தால் வேறுவழியில்லை. இடைப்பட்ட தூரத்தை சரிபாதியாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். எடுத்துக்காட்டாக: இராமேசுவரத்திலிருந்து கட்சத்தீவு 11கடல்மைல்களில் இருக்கிறது. நமது கடல் எல்லையே இன்னும் ஒரு கடல் மைல் தாண்டி இருக்கிறது. அதாவது நமக்கான ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு மட்டுமே 12கடல் மைல்கள் ஆகும். அந்த நிலையில், கட்சத்தீவு நமது நாட்டுக்கு சொந்தமாகிற போது கட்சத்தீவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் வரை நம் கடல் எல்லை இன்னும் நீளும். இவ்வாறான நிலையில் 1974 ஆண்டில் கட்சத்தீவை இந்திரகாந்தி இலங்கைக்கு தாரை வார்த்ததுதான் தமிழக மீனவர்களின் தீராத சிக்கலுக்கான அடிப்படையாகும், மீண்டும் கட்சத்தீவை மீட்கும் வரை தீராத சோகமாகும்.

கடல் எல்லை என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லை ஆனது ஒரு நாட்டின் 1.ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு, 2.அண்மை கடற்பரப்பு, 3.பொருளாதார தனியுரிமை பகுதி மற்றும் 4.கண்டத் திட்டு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.

1.ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு
ஐக்கிய நாடுகள் மாநாட்டில் 1982 ஆம் அண்டில் கடல் சட்டம் குறித்து ஒரு வரையறை உருவாக்கப்பட்டது. அதன்படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். இது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும், 

2.அண்மை கடற்பரப்பு
அண்மை கடற்பரப்பு என்பது ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் வெளிப்புறத்திலிருந்து அடுத்த 12 கடல் மைல் (அதாவது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 24 கடல் மைல்) உள்ள கடல் நீர்ப்பரப்பாகும். அண்மை கடற்பரப்பில் ஒரு நாடு அதன் சுங்க, நிதி வரவு, குடியமர்தல் மற்றும் சுகாதார சட்ட மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்கவும், கண்காணிக்கலாம் ஆகியன  வரையறை படுத்தப்பட்டதாகும்.

3.பொருளாதார தனியுரிமை பகுதி
அதிகபட்சமாக 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள கடற்பரப்பு அந்த நாட்டின் பொருளாதார தனியுரிமை பகுதி என்பதாகும். இப்பகுதியின் மீன் வளம், கனிம வளம், பெட்ரோலிய ஆய்வு போன்ற அனைத்து வளங்கள் மீதான உரிமைகளையும் மற்றும் இவ்வளங்கள் சார்ந்த கழிவு மேலாண்மையையும் அந்த நாடே கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் இப்பகுதியின் வழியாக வேறு நாட்டின் கப்பல்கள் பயணிக்கவோ அல்லது ஐக்கிய நாடுகளின் விதிகளுக்குட்பட்டு இக்கடற்பரப்பில் வேறு நாடுகள் கழிவுகளை கொட்டாவோ தடை செய்யும் அதிகாரம் இல்லை.

ஒரு உலக வரைபடத்தை எடுத்துக் கொண்டு இரண்டிரண்டு நாடுகளுக்கிடையே சமமான தூரத்தை புள்ளிட்டுக் கொண்டு அனைத்து புள்ளிகளையும் இணைத்தால் அனைத்து நாடுகளின் முழுமையான கடற்பரப்பை அடையாளம் காண முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.