நுண்ணிய நூல்பல கற்றுத்தருவேன் என்று கிளம்பி, அவளுக்குத் தெரிந்த சிலநூறு அயல்சொற்களை, அந்த அயல்மொழிக்கே சொந்தக்காரி போல நாடகமாற்றி, என் இயல்மொழி ஆற்றலைச் சிதைக்கிறவளாக இருக்கிற இன்றைய தாயை.மீட்டமைக்கும் முயற்சிக்கானது இந்தக் கட்டுரை. 12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125: தமிழ் என் இயல்மொழி. நான் கற்க நிர்பந்திக்கப்படும்- ஆங்கிலம், ஹிந்தி, சீனம், எபிரேயம், பாஸ்து என்பன அயல் மொழிகள். என்னுள் இயலாய் இருந்த தமிழை, தன் இயல்மொழி தமிழால் வளர்த்தவள் என்தாய். தமிழ் என் இயல்மொழியே அன்றி தாய்மொழி அல்ல. இயல் என்னும் சொல்லில்- இயம் என்கிற கோட்பாடும் இயக்கம் என்கிற நடைமுறையும் பொருந்தியிருக்க, பொருள் பொதித்து இயல் உடையவைகள் எல்லாம் இயற்கை என்று நிறுவியவர்கள் என் தமிழ்முன்னோர். அ ம் மா என்று எழுத்தைக் கூட்டினால் சொல் வருகிற தமிழை, உயிரும் மெய்யுமான தமிழை, குறிலும் நெடிலுமாக இசை கொண்ட தமிழை, நான் கற்க வேண்டிய இயல் மொழி தமிழை, உண்மை அறிவான என் இயல்மொழி தமிழை, நுண்ணிய நூல்பல கற்றுத்தருவேன் என்று கிளம்பி, அவளுக்குத் தெரிந்த சிலநூறு அயல்சொற்களை, அந்த அயல்மொழிக்கே சொந்தக்காரி போல நாடகமாற்றி, என் இயல்மொழி ஆற்றலைச் சிதைக்கிறவளாக இருக்கிறாள் இன்றைய தாய். ஒன்றைத்தமிழைக் கொண்டிருந்த என் இந்தியாவில் அட்டவணை எட்டில் உள்ளடக்கப்பட்ட 22 மொழிகள் உருவாகக் காரணமாக, ஒவ்வொரு மொழி உருவாக்கத்திலும் ஒவ்வொரு கூட்டமாய் அமைந்தவர்கள் இந்த நாடகத்தாய்கள். இயல்மொழி எவருக்கும் அவரின் அதிகாரம் ஆகும். முன்னெடுக்கும் ஒவ்வொரு அயல்மொழிக்கும் அவரவர் அந்த அயல்மொழிச் சொந்தக்காரருக்கு அடிமைகள் ஆவோம். எந்த அயல்மொழி ஆர்வமும், அந்த அயல்மொழியை நமக்கு இயல்மொழி ஆக்கிதராது. ஆரிய அயல்மொழி ஆர்வத்தால் அட்டவணை எட்டில் அமைந்த 22 மொழிகள் போல புதுப்புது மொழிகளையே உருவாக்கித்தரும். இந்த 22 மொழிகளில், தமிழ் தவிர்த்த 21 மொழிகள், ஹிந்தி மொழி பேசுவோர்களுக்கு அடிமைகள் என்கிற வரலாற்றை அயல்மொழி ஆர்வம் கொண்ட, தமிழ்நாட்டின் எந்தத் தாயும் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். நாம் ஹிந்திக்கு அடிமை ஆகவில்லை என்ற போதும், ஒட்டுமொத்த இந்தியாவை இழந்து, இருக்கிற மிகச்சிறு பகுதியான தமிழ்நாட்டிலும் ஆட்சிஅதிகாரம் இல்லாத நிருவாக உரிமையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் தமிழ்நாட்டின் எந்தத் தாயும் புரிந்து கொள்ள வேண்டியதும் கட்டாயம் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,929.