Show all

அறிவியல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆன்மீகம் என்பது எவ்வாறு பார்க்கப்படும்?

இந்தியாவில் உலாவரும் ஆன்மீகம் என்ற தலைப்பின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு பெருமிதம் இருந்து கொண்டு இருக்கிறது. அதையே பாஜக ஹிந்துத்துவா என்ற தலைப்பில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் எனை நோக்கி வந்த இந்தக் கேள்விக்கு தமிழ் முன்னோரின் கருத்துக்கள் அடிப்படையில் எனது விடையைத் தொகுத்துள்ளேன்.

28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: முதலாவதாக ஐரோப்பியத்தின் சயின்ஸ் என்ற தலைப்பை அறிவியல் என்று பிழையாக மொழிபெயர்த்ததாலும், ஆன்மீகம் என்ற தலைப்பின் தமிழ் மூலம் அறிய முயலாததுமே இந்தக் கேள்வி எழக் காரணம் ஆகிறது. இந்த சயின்சும், ஆன்மீகமும் தமிழர்க்கு புதிது அன்று. தமிழில் அவைகள் காலம் காலமாக இருக்கின்றன. சயின்சுக்கு தமிழில் இருக்கிற சொல் இயல் என்பதாகும். தமிழில் மூன்றாவது தமிழாக இயல் காணப்பட்டது. 

முதலாவது தமிழ் நாடகத்தமிழ். தமிழ் சைகை மொழியாக நடைபோட்ட காலமே நாடகத்தமிழ் காலமாகும். மேடைநாடகம், கூத்து, திரைப்படம், சின்னத்திரை என இன்றுவரை தொடரும் வளர்ச்சிகள் எல்லாம் நாடகத்தமிழின் அடுத்த கட்டமான நாடகக்கலைகள் ஆகும். 

இரண்டாவது தமிழ் இசைத்தமிழ். மெல்ல நாவை அசைத்து மாஅஅஅஅஅஅஅ, பாஅஅஅஅஅஅ, வாஅஅஅஅஅஅஅ, போஒஒஒஒஒஒஒ என்று நீட்டி முழக்கிய அளபெடை மொழிச் சொற்கள் உருவாக்கப்பட்ட காலம் தான் இசைத்தமிழ் காலம். யாப்பு, சந்தம், இசைப்பாடல், பின்னிசை, கருவி இசை, இசைஅமைப்பு என இன்றுவரை தொடரும் வளர்ச்சிகள் எல்லாம் இசைத்தமிழின் அடுத்த கட்டமான இசைக்கலைகள் ஆகும்.

மூன்றாவது தமிழ் இயற்றமிழ். இயல் என்பதில் இயம் என்கிற கோட்பாடும் இயக்கம் என்கிற நடைமுறையும் இருக்கின்றன. இயற்கை என்றால் இயல் உடையது அதாவது கோட்பாடும் நடைமுறையும் உடையது என்று பொருள். இயல் உடைய எல்லாப் பொருட்களும் இயற்கை ஆகும். 

இன்று நீங்கள் கேட்டிருக்கிற கேள்வி- நான் சொல்ல முயன்று வருகிற விடை- அனைத்தும் இந்த மூன்றாவது தமிழான இயற்றமிழ் ஆகும். ஆக இயற்றமிழ் என்பது தமிழுக்குரிய சயின்ஸ் என்று பொருளாகும். 
இன்றைக்கு இருக்கிற உலகம் முழுதும் பொதுமையான சயின்சை இயற்றமிழ் என்று சொல்லாமல் இயல்அறிவு என்று சொல்லலாம். இயல்அறிவு என்பதே சயின்சுக்கு தமிழ் அடிப்படை மாறாத மொழி பெயர்ப்பாகும். 

சயின்ஸ் என்பதை இயல் அறிவு என்று சொல்லுவதே சரி என்பதற்கு:- http://www.news.mowval.in/Editorial/katturai/Eyalarivu-121.html இந்த இணைப்பில் விரிவான விடை அளிக்கப்பட்டுள்ளது

அடுத்து ஆன்மீகத்திற்கு வருவோம். ஆன்மா என்றால் உயிர். அந்த உயிரைப்பற்றிய நம்பிக்கைகள்தாம் ஆன்மீகம். இந்த ஆன்மீகம் மதத்திற்கு மதம் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுகிறது. நமக்கு அப்பாற்பட்ட ஆற்றல், நமக்கு உயிர் கொடுத்தது யார்? நம்மை படைத்தது யார்? தலைஎழுத்து, நமது வாழ்க்கை திட்டமிடப்பட்டதா? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் நம்பிக்கை சார்ந்து விடை தேடும் முயற்சிகளை முன்னெடுக்கும் தலைப்பு தான் இந்த ஆன்மீகம்.

தமிழில் இந்தத் தேடலில் கிடைத்தவை முதலாவது நிமித்தகம். இரண்டாவது கணியம். மூன்றாவது மந்திரம். இந்த மூன்றில் ஆன்மீகம் என்பதற்கான தலைப்பு முடித்து வைக்கப்பட்டு விட்டது.
இந்த முதலாவது நிமித்தகம். இரண்டாவது கணியம். மூன்றாவது மந்திரம். என்பன குறித்து கொஞ்சம் விரிவாக:- http://www.news.mowval.in/Editorial/katturai/Kaniyakkalai-2-103.html இந்த இணைப்பில் விடை அளிக்கப்பட்டுள்ளது
ஆன்மீகம் என்பதற்கு இன்றைய நிலையில் அதன் அடிப்படையிலேயே ‘இயல்கணக்கு’ என்று சொல்லலாம். 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இந்த ஒற்றைத் பாடலில் ஆன்மீகத் தேடலுக்கான முழுவிடை இருக்கிறது. 
தமிழர்கள் இயல்கணக்குத் தேடல் இன்றி- வீட்டு தெய்வம், குலதெய்வம், நடுகல்வழிபாடு, தெவம் என்று இருந்து விட்ட நிலையில்,

தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப்பனியர்கள், தமிழர்களின் இயல்கணக்கை கற்றுக் கொண்டு, நடுகல்லை சிவலிங்கமாக்கி தங்கள் ஆன்மீகத் தேடலுக்கு அருமையான தளத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இன்றைக்கு ஒன்றிய ஆட்சியில் பாஜக வரை அந்தத் தேடல் வளர்ந்திருக்கிறது. 

இயல்அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கும். இயல்கணக்கு உண்மையான புரிதல் வரை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கப்படும். மதங்கள் இருக்கும் வரை உண்மையான புரிதலை உலகம் எட்ட முடியாது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.