15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்த இரட்டைக் குழந்தைகள். அரசவை கூட்டப்படும் முன் மணியொலிப்பதும், அதே போல புலவர்கள் அவை கூட்டப்படும் போது சங்கம் ஒலிப்பதும் தமிழர் மரபு. தமிழ் வளர்த்த தமிழரின் மூன்று சங்கங்கள் சங்கம்ஒலித்து கூட்டப்படுகிற அவை என்ற பொருளில் சங்கஅவை யென்றே பெயர் சூட்டப்பட்டிருந்தன. காலப்போக்கில் சங்கம் என்று சுருங்கப் போய், சங்கம் என்பது தமிழ்ச் சொல் அன்று என்ற விவாதம் எழும்ப, கழகம் என்றும் அண்மைக் காலத்தில் பெயரிட்டு வழங்கும் முறையும் கூட முன்னெடுக்கப் பட்டது. அரசரும் ஆளுமைப் பொறுப்பினரும் கூடும் அவை அங்கஅவை அல்லது அரசஅவை யென்றும், தமிழ் வளர்க்க புலவர்கள் கூடும் அவை சங்கஅவையென்றும் பெயர் கொண்டிருந்தன. தற்போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் அவையை சட்டமன்றம், சட்டப் பேரவை என்றும், பலதுறை அறிஞர்கள் அவையை சட்டமேலவை என்றே அழைக்கிறோம். (பல மாநிலங்களில் ஈரவை ஆட்சி முறை தொடரும் நிலையில் தமிழகத்தில் சட்ட மேலவை முறையை அகற்றிக் கொண்டோம்; இது பிழையான முயற்சியே) ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வேள்பாரி பறம்பு மலையைத் தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச் சங்கஅவைக் காலத்தைச் சார்ந்தவர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு ஊர்களைக் கொண்டதாகும். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராக சங்கஅவை இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம் பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டிய நாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கஅவைத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். பாரியைப் பற்றி இறவாப் புகழுடைய பாடல்களைப் பாடியவர் கபிலர். பாரி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர். பாரி குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார். நறுமுகையே… நறுமுகையே எனத் தொடங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான். வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவராகப் பாரியைத் தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராகப் போற்றப்படுகின்றார். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறில் பல உள்ளன. பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக் கிடைக்கவில்லை அவர்களுக்கு. மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள். நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக் கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக் கேட்டார்கள், கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளன, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும், கிழங்குகளும் உள்ளன, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார். அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதற்கு, போரில் அவரை வெல்ல முடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் கொடையாக தேசத்தைக் கேட்டாலும் கொடுத்து விடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப் பாடி அவரை மகிழ்விக்கவும், அப்போது மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக் கொடுப்பார் பாரி என்று அவர்களுக்கு வழிக் காட்டினார் கபிலர். கபிலர் பாரியின் கொடைத் தன்மையை விவரிப்பதற்காக சொன்ன இந்த யுக்தியையே கையாண்டால் என்ன என்று மூவேந்தர்களும், பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்குள் புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி கொடை வேண்டியெல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்றும்; தெரிய வருகிறது. ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி தமிழ்மக்கள் பெரிதாக கொண்டாடிய தமிழ்மூதாட்டி ஒளவையார் முயற்சியை முன்னெடுத்தார். அதுவரை தடுத்து வந்திருந்த போதும், ஒளவையாருக்கு அஞ்சிய மூவேந்தர்களையே, ஒளவையார் துணைக்கு அழைத்து, உருத்திரன் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது கரபுரநாதர் கோயில் என்று அழைக்கப் படுகிறது. அந்தக் கோயிலுக்கு அருகில் திருமணத்தில் வந்து கலந்து கொண்ட சோழன் தங்கியிருந்த இடம் உத்தம சோழபுரம் என்றும், திருமணத்தில் வந்து கலந்து கொண்ட பாண்டிய மன்னன் தங்கியிருந்த இடம் வீரபாண்டி என்றும், திருமணத்தில் வந்து கலந்து கொண்ட சேரமன்னன் தங்கியிருந்த இடம், சேரலம் என்றும், அழைக்கப் படுகிறது. (சேரமன்னன் தங்கியிருந்த இடமான, சேரலம் பகுதியே தற்போது சேலம் என்று அழைக்கப் படுகிறது என்றும் தெரிய வருகிறது) பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,262.
தமிழ்முன்னோர்: செங்கோல் ஆட்சிக்கு அங்கஅவையையும், தமிழ் வளர்ச்சிக்கு சங்கஅவையையும் நிறுவி பிரிக்க முடியாத இரு அவைகளை கொண்டு ஆட்சி புரிந்த நினைவைப் போற்றி, தமக்கு இரட்டையராகப் பிறந்த பெண்களுக்கு அங்கவை என்றும் சங்கவை யென்றும் பெயர் சூட்டிக் கொண்டாடினார் கடையேழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வேள்பாரி.
பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி, இனி உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைத்தாலும், பாரியின் மகள்களை பொறுப்பான மனிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது திருமணம் முடித்து வழியனுப்ப வேண்டும் என்று முயன்ற போது, மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன் வரவில்லை. மனவருத்தம் மிகுந்த கபிலர் அப்பெண்ணை தன் நண்பர் ஒருவர் குடும்பத்தில் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப் போக்கிக் கொண்டார்.