Show all

எது சரி! புரிந்து படிக்கும் வகைக்கான கல்வித்திட்டமா? மனப்பாடக் கல்விக்கான பாடத்திட்டமா?

இந்தியா முழுவதும், ஒன்றியக் கல்வி பாடத்திட்டமும் சரி, தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கும் பாடத்திட்டமும் சரி, புரிந்து படிக்கும் வகைக்கான கல்வித்திட்டம் என்று பறைசாற்றிக்கொண்டு, மனப்பாடக் கல்விக்கான பாடத்திட்டத்தை முன்னெடுத்துவரும் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் வகைக்கானது இந்தக் கட்டுரை.

14,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: காரணம் பற்றியதும், இடுகுறியானதும் என்பன- புரிந்து படித்தலும் மனப்பாடம் செய்து ஒப்பித்தலும் ஆகும். 

மனப்பாடம் செய்து ஒப்பித்தலை சிறந்த கல்வித்திட்டத்தில் ஒப்புக் கொள்வது இல்லை என்கிற வாதம்- வெறுமனே கோட்பாட்டு அளவில் முன்னெடுத்து வருகிற நிலையில் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

சென்னைக்குப் போகலாம், சென்னைக்குப் போகலாம் என்று பயணிகளை அடைக்கிற பேருந்துப் பலகையில், செல்லுமிடம் கோவா என்று எழுதியிருக்க, ஆம் கோவாதான் செல்லுகிறது என்று ஓட்டுனரும் அங்கீகரிக்கிற விடையம் போலாகத்தான் இந்தியா முழுவதும் இன்றையக் கல்வித்திட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

எங்களுடைய கல்வி புரிதலுக்கான கல்வி, எங்களுடைய கல்வி படைப்பாற்றலுக்கான கல்வி, எங்களுடைய கல்வி அந்த நிறுவனவகை கல்வி, இந்த நிறுவனவகைக் கல்வி, எங்களுடைய கல்வி புதிய கொள்கை கல்வி, என்றெல்லாம் கூவி கூவி அழைக்கின்ற தனியார் மற்றும் ஒன்றிய அரசின் பாடத்திட்டக் கல்வி நிறுவனங்களின் தலைப்பு மனப்பாடத்திற்கான இடுகுறி மொழியான ஆங்கிலமொழிவழிக் கல்வியே ஆகும்.

தன் குருதியைப் பாலாக்கித் தருகிற தாய், தன் மூச்சுக்காற்றை மொழியாக்கித் தந்த முதல் உடைமைகளே நமது உடம்பும். தமிழும்.

தமிழே நம் அறிவின் மூலம். தாயின் மடியே நமது கல்வியின், முதல் பல்கலைக்கழகம். நமது முன்னேற்றத்தின் ஆணிவேராக அமைகிற நமக்கான அடிப்படை உள்ளடக்கம் (கன்டென்ட்) தாய்மடிப் பல்கலைக்கழகத்திலேயே நம்மால் உருவாக்கப்பட்டுவிடுகிறது. இதற்கு 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்கிற பழமொழி எடுத்துக்காட்டு ஆகும்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற சிறப்பிற்கு உரிய இயற்கை மொழி தமிழ். நாம் கீழே விழுகிற போது, விழு என்கிற சொல்லின் வேரில்தான் எழு இருக்கிறது, அதைத் தொழு என்று தமிழ் மட்டுமே நம்மை நிமிர்த்த முடியும். 

என்னால் உறுதியாக மனப்பாடம் செய்து கொள்ள முடியாமல், டொமோட்டோ, பொட்டட்டோ என்கிற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களில் எது தக்காளி? எது உருளைக்கிழங்கு என்று அடிக்கடி என்னை குழம்ப வைத்திருக்கின்றன இந்த இரண்டு ஆங்கிலச் சொற்கள்,

இதை எப்படி நிரந்தரமாகப் புரிந்து கொள்வது என்கிற வகைக்கு எனது தமிழாசிரியர் தாமோதரன் ஐயா அவர்களை அணுகினேன். ஆங்கில ஐயத்திற்கு தமிழாசிரியரை அணுகுகின்றாயே எந்த அடிப்படையில் என்று சிரித்துக் கொண்டே கேட்டார் தாமோதரன் ஐயா. 

நீங்கள் நிரந்தரப் புரிதலுக்கு ஏதாவதொன்றைக் காரணப்படுத்துவதை நான் நன்கு அனுபவப் பட்டுள்ளேன் ஐயா, அதனாலேயே தங்களிடம் இதற்குத் தீர்வு இருக்கும் என்று உறுதியாக நம்பி வந்தேன் ஐயா என்றேன்.

அவர் கேட்டார்? லேடிஸ் பிங்கர் என்றால் என்ன, டிரம்ப் ஸ்டிக் என்றால் என்ன என்று. வெண்டைக்காய். முருங்கைக்காய் என்று விடை சொன்னேன். இவைகளை நீ இரட்டை சொற்களாக, காரணச் சொற்களாக நினைவில் வைத்துக் கொள்கிறாய் அதனாலேயே இந்த இரண்டு ஆங்கிலச் சொற்கள் உனக்கு மறக்கவில்லை. அதுபோலவே இந்த டொமோட்டோ, பொட்டட்டோ என்கிற இரண்டு ஆங்கிலச் சொற்களையும் இரட்டை சொல் வழக்காக முன்னெடுத்து நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும் என்று பின்வருமாறு விளக்கம் தந்தார்.

பொட்டட்டோ என்பதில் இரண்டாவது எழுத்து ஒற்றில் முடிவதை நினைவில் கொள். பொட்டட்டோ என்பதற்கு பொட்டட்டோ சிப்ஸ் என்கிற இரண்டாவது எழுத்து ஒற்று வருகிற சிப்ஸ் என்கிற தீனியை நினைவில் வைத்துக் கொண்டால் இனி எப்பொதும் பொட்டட்டோ உனக்கு மறக்காது என்றார்.

அதே போல டொமோட்டோ என்பதின் இரண்டாவது எழுத்து நெடிலாக வருவதை நினைவில் இருத்தி, டொமோட்டோ சாஸ் என்கிற முதல் எழுத்தில் நெடில் வருகிற சாஸ் என்கிற தீனிக்குச் சுவையூட்டியை நினைவில் நிறுத்திக் கொண்டால் இனி எப்பொதும் டொமாட்டோவும் உனக்கு மறக்காது என்றார்.

இரண்டு ஆங்கில சொற்களுக்கே தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எனக்கு இவ்வளவு நெடிய முயற்சி தேவைப்பாடாய் உள்ளது. ஒட்டுமொத்த கல்வியே ஆங்கில வழி என்றால் அது எப்படி புரிதலுக்கான கல்வியாய் அமைய முடியும்?

அமெரிக்காவை நீண்ட காலமாக இந்தியா என்றே நம்பிக் கொண்டிருந்தனர் உலகினர். முதன் முதலாக இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைந்த கடலோடி கொலம்பசின் கூற்றால்.

அதுபோலவே ஆங்கிலவழி மனப்பாடக்கல்வியை- தனியார் பாடத்திட்டக் கல்வியாளர்களின் கூற்றையும், ஒன்றிய பாடத்திட்டத்தை ஆங்கில வழியில் முன்னெடுத்துவரும் ஒன்றிய அரசின் கூற்றையும் நம்பி- சென்னைக்கு செல்ல- நம் தமிழ்நாட்டுத் தாய்க் குலங்கள் உழைக்கும் பணத்தையெல்லாம் கொட்டிக் கொட்டிக் கொடுத்து கோவா பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்கால மாணவ குமுகாயத்தை இடுகுறிளாக்கி தெருவில் விட பாடாற்றிக் கொண்டுள்ளன.

பிறமொழிகள் எத்தனை வேண்டுமானலும் படிக்கலாம். ஆனால் பத்து அகவை வரை, தாய்மொழியில் சிறப்பான தேர்ச்சி பெறும்வரை அயல்மொழியின் ஒற்றைச் சொல்லும் இடுகுறிக்கு நம்மை இழுத்துச் சென்று, நமது முன்னேற்றத்தின் ஆணிவேராக அமைகிற நமக்கான அடிப்படை உள்ளடக்கம் (கன்டென்ட்) அமைப்பதில் நமக்கு குழப்பத்தை உருவாக்கித்தரும். 

பிறமொழிகள் எத்தனை வேண்டுமானலும் படிக்கலாம். ஆனால் பிறமொழி வழியில் ஒற்றைப்பாடமும் படிக்கக் கூடாது. இதுவும் நமது முன்னேற்றத்தின் ஆணிவேராக அமைகிற நமக்கான அடிப்படை உள்ளடக்கம் (கன்டென்ட்) அமைப்பதில் நமக்கு குழப்பத்தை உருவாக்கித்தரும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,231.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.