தமிழரின் தாய் மதம் சைவம் என்று பேசப்படுகிற செய்தி உண்மையா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஒரு மதம் எக்காலத்தும் இருந்ததும் இல்லை. இனியும் ஒற்றை மதத்தின் கீழ் தமிழினத்தை அடைக்கவும் முடியாது. தமிழர்களை ஒற்றைத் தலைமையின் கீழ் எக்காலத்தும் கொண்டுவர முடியாது. எக்காலத்திலும் தமிழர் ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்ததும் கிடையாது. குடும்பமாகக்கூட கூட்டுக் குடும்பமாக வாழ்கிற மரபை தமிழர் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. தலைவன் தலைவியாக மட்டுமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கிற இயல்பு தமிழினத்தின் மரபு ஆகும். தமிழினம் அறிவைக் கொண்டாடும் இனமாகும். யாரின் அறிவுரையையும், ஏன்? எப்படி? என்று விளங்கிக் கொள்ளாமல் அங்கீகரிக்கிற இயல்பு தமிழினத்தில் கிடையாது. எந்த ஒற்றைத் தமிழனும் புரியாத செய்;தியை ஏற்றுக்கொள்கிற இயல்பு உடையவன் அல்லன். தமிழனைப் பொருள் இல்லாதவன் என்று தூற்றினால் பொருட்படுத்தமாட்டான். முட்டாள் என்று சொன்னால் கடுஞ்சினம் எய்திவிடுவான். இத்தனைக்கும் முட்டாள் என்கிற தமிழ்ச்சொல் அறிவு இன்மையைக் குறித்திடவில்லை. தமிழனின் இன அடையாளம் அறிவு. அதனால்தான் தமிழன் மட்டுமே அறிவுக்கு அடிப்படையும் வேரும் ஆன மொழியைத் தூக்கிப்பிடிக்கிறான். உலகில் மூலமொழியை நடப்பு மொழியாகக் கொண்டிருக்கிற ஒற்றை மொழி தமிழாக இருந்து கொண்டிருக்கிறது. நடப்பில் இருந்து கொண்டிருக்கிற, உலகின் எந்த மொழியும் அந்த மொழியையே மூலமொழியாகக் கொண்டிருக்கவில்லை. தங்கள் மொழியைக் தற்காத்துக் கொள்கிற இயல்பு உலகமொழியினர்களுக்கு இல்லை. சிறை காக்கும் ஒழுக்கம் என் செய்யும் நிறை காக்கும் ஒழுக்கமே தலை என்கிற, தனக்கு- தான்மட்டுமே காப்பு செய்ய முடியும் என்கிற தன்மானத்தவன் தமிழன். அந்த அடிப்படையில் தமிழில் இருந்து கொண்டிருப்பவன் தமிழன் என்கிற தற்காப்பை அவனிடமே, தமிழ்மரபு விட்டு விட்ட காரணம் பற்றி, தமிழில் இருந்து வெளியேறியவன் புத்தினமாக மாறி விடுவானே அன்றி, அவன் விரும்பும் ஏற்ற இறக்கங்களைத் தமிழில் திணிக்க முடியாது. இந்தியாவில் இருக்கிற அத்தனை மொழிகளும் தமிழில் இருந்து புத்தினமாகத் திரிந்தவைகளே. தமிழனைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழனை சிறைப்படுத்த முடியாது. தமிழனை முட்டாள் ஆக்க முடியாது. தமிழனை அடிமைப்படுத்த முடியாது. தனக்கு அடிமை, தமிழன் என்று உலகில் எவனாவது, தன் இனத்திற்கு அடிமை, தமிழன் என்று உலகில் எந்த இனமாவது சொல்ல தமிழன் ஒப்புக் கொடுக்கமாட்டான். இயலாமையில் பதுங்கியிருந்து பாயத் தயாராய் இருப்பானே அன்றி படியமாட்டான். தமிழர்களில் யாரும் அறிவாளர்களாக இயங்கலாம். அவர்களின் அறிவைத்- தமிழ்மக்கள் ஆசிரியர் தளத்தில் வைத்து ஏற்பார்களே அன்றி, எந்த அறிவாளரையும் வழிகாட்டியாக கொள்கிற இயல்பு தமிழினத்திற்கு இல்லவே இல்லை. இந்த உலகத்திற்கு ஆசிரியத்தளத்தில் இருந்து வளர்க்கப்பட்டு எல்லையில்லாத அறிவையும் எல்லையில்லாத கருவிகளையும், தந்து கொண்டிருப்பது இயல்அறிவு (சயின்ஸ்). அந்த இயல்அறிவு ஒற்றைத்தலைமையின் கீழ் வராதது போல- ஆசிரியர்களால் தமிழினம் தொடர்ந்து மேம்பட்டு வருமேயன்றி ஒற்றைத் தலைமையின் கீழ் தமிழினம் எப்போதும் முடங்காது. உலகில் இத்தனை முன்னேற்றம் இருந்தும், முன்னேற்றத்தை அனைத்து மனிதருக்கும் பகிர்ந்தளித்தால் அனைவரும் பணக்காரர் ஆகி விட முடியும் என்பதே உண்மை என்கிற நிலையிலும், இந்த வளமையான உலகை, வழிகாட்டிகளால் உருவாக்கப்பட்ட மதங்களும், அரசியல் கோட்பாடுகளும் அனைத்து நிலையிலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற பாகுபட்டைக் கட்டமைத்து இயக்கிக் கொண்டுள்ளன. அவர்களின் அறிவே வேதம் எனப்படுகிறது. வேதம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. அதை மறை என்று மொழிபெயர்ப்பதும் பிழையே. தமிழ்மக்கள் வேதம் என்றோ மறையென்றோ எந்த அறிவாளரின் கருத்தையும் அங்கீகரித்த வரலாறு இல்லை. தமிழருக்கு அதுமாதிரியான அமைப்பு இருந்ததும் இல்லை. அரசாளும் தகுதியைக் கூட ஒற்றையினத்திற்கு தூக்கிக் கொடுத்த இனமல்ல தமிழினம். அரசாளும் உரிமையை மூவேந்தர்களுக்கும், பல நேரங்களில் குறுநில மன்னர்களுக்கும் பகிர்ந்திருந்த மரபைக் கொண்ட உலகின் ஒற்றையினம் தமிழினம். தமிழனுக்கு மதம் என்று ஒன்று இருந்தது இல்லை. தமிழனுக்கு வேதம் என்று ஒன்று இருந்தது இல்லை. தமிழனின் அடிப்படை எப்போதும் மொழிதான். தமிழினக் கூட்டுச் சிந்தனையின் வெளிபாடுதான் தமிழ். தமிழ் இலக்கணம் என்றால் அது தமிழ்மொழிக்கு மொழி இலக்கணமும் தமிழர் வாழ்க்கைக்குப் பொருள் இலக்கணமும் வகுக்கப்பட்டது. அந்த இலக்கணம் வழிவழியான அங்கீகரிப்பான மரபே அன்றி தனிமனித ஆளுமையின் பாற்பாட்டதோ அறிவின் பாற்பட்டதோ அன்று. பொருள் இலக்கணத்தில் தமிழ்மக்களுக்கான அனைத்து காப்புக் கோட்பாடுகளும் உண்டு. தமிழனுக்கு மதம் தேவையே இல்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,548.