Show all

இராமப்பய்யன் குறித்து சிலபல சிறப்புச்செய்திகள்! வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது

இராமப்பய்யன் அம்மானையின் கதைத்தலைவர், இராமப்பய்யன்  குறித்து சில பல சிறப்புச் செய்திகள் வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழில் அம்மானை இலக்கியத்திற்குத் தனி வரலாறு உண்டு. இந்தக் கட்டுரையில் நாம் காணவிருக்கிற வரலாற்றுக்குத் துணையாய் இருப்பது இராமப்பய்யன் அம்மானையாகும். 

இதன் காலம் தமிழ்த் தொடராண்டு-4742 (கி.பி.1640) ஆகும். மதுரையில் ஆட்சி புரிந்த திருமலை நாயக்கரிடம் தளவாயாக இருந்த இராமப்பய்யன், இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதி சடைக்கத் தேவன் மீது போர் தொடுத்து அவரைச் சிறைசெய்து வந்த கதையைக் கூறுவது இந்த இராமப்பய்யன் அம்மானையாகும்.

491ஆண்டுகளுக்கு முன்பிருந்து 456 ஆண்டுகளுக்கு முன்பு வரை விசுவநாத நாயக்கர் தொடங்கி வைத்த நாயக்க வம்சத்தில் வந்தவர் திருமலை நாயக்கர். இவரது போர்த்துறைத் தலைவனே இராமப்பய்யன். இவர் குறித்த கதைப்பாடலே இராமப்பய்யன் அம்மானையாகும்.

இராமநாதபுர சேதுபதிகள் வம்சத்தில் வந்த இரண்டாம் சடைக்கன் சேதுபதியே இராமப்பய்யனை எதிர்த்துப் போரிட்டவர் ஆவார். 

சேதுபதியின் மக்களான குமரன், அழகன் ஆகிய இருவரும் போர்க்களத்தில் பலியாகி விட்டதைக் கேட்டதும் அவர்களுடைய அன்னை இரங்கி அழுவதைக் கதைப் பாடல் இயல்பாக விளக்கிப் படிப்போரைக் கசிந்து உருகச் செய்கிறது.

இதன் கதைச்சுருக்கத்தை, இராமப்பய்யன் தலைமையிலான நாயக்கப் படையெடுப்பில் தொடங்கிச் சேதுபதி தன் படையுடன் இராமேசுவரம் சேர்ந்தது வரை ஒரு பகுதியில் அடங்கும். இரண்டாவது பகுதி இராயருக்கு உதவி செய்ய இராமப்பய்யன் வெங்களூர் சென்ற பயணத்தைக் குறிக்கும். மூன்றாவது பகுதியில் இராமேசுவரத்திற்குப் பாலம் கட்டுதல், நாயக்கர் படைக்கும் மறவர் சேனைக்கும் நடந்த தரைப்போர், பரங்கியர் கலந்து கொண்ட கடற்போர், வன்னியன் வெற்றிக்கும் சாவுக்கும் பிறகு சடைக்கன் அடைக்கலம், சிறைவாசம், சடைக்கன் விடுதலை, சேது நாட்டின் அரசைச் சேதுபதி மீண்டும் பெறல் என்பதாக முடிக்கலாம்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு மதுரையைத் திருமலை நாயக்கர் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தார். திருமலை நாயக்கர் காலத்தில் மறவர் நாட்டைத் தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கன் தேவன் ஆண்டு வந்தார். அவருடைய நாட்டைப் பலமுறை முயன்றும் திருமலை நாயக்கரால் கைக்கொண்டு ஆணை செலுத்த முடியவில்லை. இக்காலத்தில் இராமப்பய்யன், திருமலை நாயக்கரின் போர்துறை தலைவனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

திருமலை நாயக்கரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரிய இராமப்பய்யன் பல போர்க்களங்களைக் கண்டவர். திருமலையின் எண்ணத்தை உணர்ந்த இராமப்பய்யன், சேதுபதியைத் தானே வென்றிட திருமலையின் அனுமதியைப் பெறுகின்றான். திருமலையின் அனுமதியோடு இராமநாதபுர சேதுபதி இரண்டாம் சடைக்கத்தேவன் மீது போர்தொடுக்கச் செல்கிறான் இராமப்பய்யன். 

செல்லும் வழியில் மானாமதுரையில் தங்கியிருந்த பொழுது, சடைக்கத் தேவன் தன் மருமகன் வன்னியனை அனுப்பி இவன் மீது போர் தொடுத்து வெற்றி பெறுகிறான். எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இராமப்பய்யனுக்கு உதவி செய்தும் போரில் அவன் வெற்றி பெறவில்லை. போகலூர்க் கோட்டையிலே நடந்த போரிலும் வன்னியனே வெற்றி பெறுகிறான். 

இராமப்பய்யன் மீண்டும் போகலூர்க் கோட்டையை முற்றுகையிட்டுச் சேதுபதியின் மக்களான குமரன், மதியார் அழகன் ஆகியோரைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொல்கிறான். இராமேசுவரத்திலுள்ள சேதுபதியுடன் போரிட பரங்கியர் உதவியுடன் கப்பல் போரும் நடைபெறுகின்றது. 

வெற்றியும் தோல்வியும் இரு பக்கமும் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வன்னியன் அம்மையினால் துன்பப்படுகிறான். பாம்பன் துறைப்போரில் வன்னியன் இறக்க, அவன் மனைவி ஈமத்தீயில் விழுந்து உயிர் துறக்கிறாள். பின்னர் சடைக்கத்தேவன் சரணடைய, சிறையில் அடைக்கப்படுகிறான். இதுதான் அம்மானையில் இடம் பெற்ற கதை.

வரலாறும் தெரிவிப்பதும் ஏறத்தாழ அதுவாக இருக்கிறது. நாயக்கர்கள் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் மதுரையை ஆண்டு வந்தனர். நாயக்க மன்னர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள்  ஆகியோராவர். நாயக்க அரசு வம்சத்தைத் தோற்றுவித்தவர் விசுவநாத நாயக்கர். நாடு முழுவதையும் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து எவர் எவர்க்கு எந்த ஊர் அல்லது பட்டணம் உரியது என்பதை உறுதி செய்தவரும் இவரே. 

இக்காலக் கட்டத்தில் மறவர் நாட்டைத் தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கத்தேவன் ஆண்டு வந்தார். மதுரையை, திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். மதுரைக்கு அருகில் வலிமை பொருந்திய சிற்றரசு ஒன்று இயங்கினால் அது தன்னுடைய அரசுக்கே உலைவைக்கும் என்று தவறாக எண்ணிய திருமலை, சேதுபதிமீது படையெடுக்கத் தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தார்.

சேதுபதி மதுரை ஆட்சியை மதிக்காமலும் கப்பம் கட்டாமலும் இருந்து வருகிறார் என்பதாக சாக்கைச் சொல்லி மறவர் நாட்டின்மீது படையெடுத்தார் திருமலை நாயக்கர் என்பது வரலாறு.

நாயக்கர் வரலாற்றைப் பெருமளவு அறியத் துணைபுரிபவை சேசுசபைப் பாதிரிமார் எழுதிய கடிதங்களாகும். இதுவரை கூறப்பட்ட நாயக்கர் வரலாற்றுக்கும், இராமப்பய்யன் அம்மானையில் காணப்படும் வரலாற்றுத் தகவலுக்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. 

இராமப்பய்யன் என்ற தெலுங்குப் பார்ப்பனியப் படைத்தலைவன் ஒருவர் திருமலை நாயக்கரின் படைத்தலைவனாய் இருந்தார் என்பதிலும், மறவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார் என்பதிலும் எவ்வித மாறுபாடுமில்லை. மறவர் நாட்டுப் படையெடுப்பில் இராமப்பய்யன் வெற்றியடைந்து சடைக்கத்தேவன் சேதுபதியைத் திருமலை நாயக்கனிடம் ஒப்புவித்துச் சிறையில் அடைக்கச் செய்தர் என்பது அம்மானையில் காணப்படும் தகவலாகும். 

இதற்கு மாறாக, போரின் நடுவிலேயே இராமப்பய்யன் இறந்து விட்டாரென்றே வரலாறு சொல்லுகின்றது. ஆனால் கதைப்பாடல் சேதுபதியின் மருமகன் வன்னியத் தேவன் இறந்ததனால், சடைக்கத்தேவன் (சேதுபதி) திருமலையிடம் சரணடைந்தார் எனக் கூறுகிறது. வன்னியைப் பற்றிய செய்தி அம்மானையில் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. மறவர் படையைத் தோற்கடிக்க முடியாத இராமப்பய்யன் பரங்கியரின் உதவியை நாடினான் என்று அம்மானை கூறுகிறது. சேசு சபைக் கடிதமோ மதுரை நாயக்கன் மறவர் நாட்டுப் படையெடுப்பில் தனக்கு உதவியதற்காகப் போர்ச்சுக்கல் அரசனுக்கு மறவர் நாட்டில் கோட்டை கட்டிக் கொள்ளவும், பல மாதா கோயில்கள் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கினான்; இன்னும் பல வசதிகளையும் அளிக்க முன்வந்தான் என்று உறுதி செய்கிறது. 

சிறை வைக்கப்பட்ட சேதுபதி, பாதிரியாரின் வேண்டுகோளின்படி விடுதலையடைந்ததாக வரலாறு கூறுகின்றது. தெய்வ பக்தியால் சேதுபதியைக் கட்டியிருந்த விலங்குகள் தெறித்துவிடவே திருமலையால் விடுதலை செய்யப்பட்டான் என்று அம்மானை சொல்கிறது. ஆயின் வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகளான வயிராகிகளும் லாடசந்நியாசிகளும் திருமலை நாயக்கனிடம் முறையிட்டதனால் சேதுபதி விடுதலை செய்யப்பட்டார் என்றும் வரலாறு சொல்லுகின்றது. 

மேலும் மெக்கன்சி சேர்க்கையில் (மெக்கன்சி மேனுஸ்கிரிப்ட்ஸ்) வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகள் திருச்சியில் சிறை வைத்திருந்த சேதுபதியாகிய சடைக்கத்தேவனை விடுவித்து, திருவரங்கத்தில் அவருக்கு முடிசூட்டி, இராமநாதபுரம் அழைத்துச் சென்று அரசு கட்டிலில் அமர்த்தினார்கள் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

இராமப்பய்யன், போர்ச்சுகீசியரிடம் உள்நாட்டுப் போருக்கு உதவி கோரியதும், அவர்கள் நமது மண்ணில் நிலைகொள்ள உதவியதும், இராமப்பய்யன் மீதான எதிர்மறைச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இராமப்பய்யன் பல கோயில்களில், கோயில் பணிகளில் ஈடுபட்டு வந்த பூசாரிகளை அகற்றி விட்டு தெலுங்கு பார்ப்பனியர்களை அனுமதித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இன்னொரு சிறப்புச் செய்தி என்னவென்றால் பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தன்னை  இராமப்பய்யன் குடிவழி  என்ற பெருமைப் படுத்திக் கொண்டதான பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.