உழைப்பு, கல்வி, தொழில், வணிகம், அரசியல் என்கிற ஐந்து அமைப்புகளை இயக்குவதற்கு மனிதர்களுக்கு கொடுக்கப் படுகிற வாய்ப்புக்கான வரிசை அடிப்படையில் ஒரு தெளிவு இல்லை. மாறாக எந்த அடிப்படையில் வரிசையைப் பேணுவது என்கிற வகைமைக்கானது இந்தக் கட்டுரை. 18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: எந்த அடிப்படையில் வரிசையைப் பின்பற்றுவது, என்பதற்கு சரியான முறைமையை, இந்தியா- சமூக அடிப்படையிலும், சட்டஅடிப்படையிலும் கூட தெளிவாகக் கொண்டிருக்கவில்லை. மனிதன் ஆறாவது அறிவான பகுத்தறிவையும் கடந்து ஏழாவது அறிவான படைப்பாற்றலில் இயங்குகிறான். மனிதன் உடலால் உழைக்கத் தேவை இல்லை. மனிதனின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதற்கு பேரளாவாக கருவிகளைப் படைத்து பயன்படுத்தி வருகிறான். இந்தக் கருவிகளை உழைப்பு, கல்வி, தொழில், வணிகம் என்கிற நான்கு தளங்களின் இயக்கம்- மேலும் மேலும் படைத்துக் கொண்டே இருக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் தேவையாய் இருக்கிறது. இந்த நான்கு தளங்களின் இயக்கத்தை நிருவாகப்படுத்துவதற்கு சமூக சட்ட அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக உழைப்பு, கல்வி, தொழில், வணிகம், அரசியல் என்கிற ஐந்து அமைப்புகளை இயக்குவதற்கு மனிதர்களுக்கு கொடுக்கப் படுகிற வாய்ப்புக்கான வரிசை அடிப்படையில் ஒரு தெளிவு இல்லை. அரசியல் என்று பார்க்கிற போது, பல்வேறு இனக்குழுக்களின் ஒன்றியமாக இந்திய அரசு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சி நேற்று காங்கிரசாக இருந்தாலும்;, இன்று பாஜகவாக இருந்தாலும், இரண்டும் ஹிந்தி, சமஸ்கிருதம், ஹிந்து மதம், வடஇந்தியக் கார்ப்பரேட்டுகள், வட இந்திய சாமியார்கள், பார்ப்பனியர்கள், பணியாக்கள், மார்வாரிகள் ஆகியோரை அல்லது ஆகியவற்றை வரிசையின் முதலில் கொண்டுபோய் நிறுத்தி விடுகின்றன. அவர்களின் அறிவு படைப்பாற்றலை முன்னெடுக்கும் ஏழாம் அறிவாக இல்லை, சில போதுகளில் பகுத்தறிவை முன்னெடுக்கும் ஆறாம் அறிவாகக் கூட இல்லை. இதனால் இந்தியாவில் வளர்ச்சி பேரளவாக தடைபடுகிறது. உழைப்பு, கல்வி, தொழில், வணிகம், அரசியல் என்கிற ஐந்து அமைப்புகளில் மற்ற அனைவரும் உழைப்பு என்கிற அமைப்பில் பேரளவாக இயங்கும் வகைக்கு வரிசையில் குளறுபடிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த அடிப்படையில் வரிசை அமைய வேண்டும் என்பதை தமிழ்முன்னோர் தெளிவாக வரையறுத்து, ஆரியர் நம்முள் கலக்கும் வரை சிறப்பாக வாழ்ந்திருக்கின்றனர். தமிழ்முன்னோர் உலக இனங்களைப் போல ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக நாடோடி வாழ்க்கையை முன்னெடுத்திருக்கவில்லை. மாறாக முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பார் தொல்காப்பியனார். அதையும் நான் சொல்லவில்லை, என் முன்னோர் வழிவழியாக சொல்லி வருகின்றனர் என்பார். ஆக வரிசையை இடத்தின் அடிப்படையாகவும் காலத்தின் அடிப்படையாகவும் நிறுவ வேண்டும். அதுவே பொதுமையானதாகவும், ஏற்றதாழ்வு அற்றதாகவும், அனைவருக்கும் வாய்ப்பளிப்பதாகவும் அமைய முடியும். இலங்கைக்கு கட்சத் தீவை தாரை வார்க்கும் முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் வகைக்கான பரப்பு பெரிதாக இருந்தது. தற்போது இலங்கைக்கு நமது இடம் கொடுக்கப்பட்டு நேற்று நமக்கு இருந்த மீன்பிடி பரப்பு இன்று இல்லை என்கிற காலம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. என்பது ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதை வரைபடமாக்க வேண்டும். அந்தந்த மருத்துவக் கல்லூரியை சூழ்ந்து அமைந்திருக்கிற மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் பயில இடமளிக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு பொதுவான தகுதியாக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அகவை முதிர்விலிருந்து அகவை குறைவு என்ற வரிசை அடிப்படையில் மிக அருகாமை என்கிற இடத்தையும், அகவை முதிர்வு (அதாவது கடந்த ஆண்டும் விண்ணப்பித்தவர் என்று காலத்தையும் பேண வேண்டும். முடிந்த வரை மதிப்பெண் என்பது தேவையில்லை. நுழைவுத் தேர்வு என்பது தேவையே இல்லை. கல்லூரிகளுக்குத் தூரமாக இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேறு எந்த அடிப்படையையும் வரிசையாக்க கூடாது. அவர்களுக்கு அண்மையில் கூடுதல் கல்லூரிகளை அமைப்பதே உரிய சிறந்த தீர்வாக இருக்க முடியும். அதுபோலவே அரசு வேலையில் அந்தந்த வேலைக்கு சொல்லப்பட்ட பொதுவான கல்வித்தகுதி போதும். அந்தந்த நிறுவனத்திற்கு அருகாமை என்கிற இடமும், அகவை முதிர்வு என்கிற காலமும் பேணப்பட வேண்டும். இதில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த இயலாவிட்டால்- ஒருவர் ஐம்பது அகவையில் வேலைக்கு சேர்ந்து ஐம்பத்தெட்டு அகவையில் ஒய்வும் ஓய்வூதியமும் பெறட்டுமே. ஐம்பது அகவை வரை சொந்தத் தொழிலோ தனியார் துறை வேலைவாய்ப்புகளோ பெற்றிடடட்டுமே. ஒருதொழிற்சாலை அமைக்க வங்கியில் கடன் தேவை என்றால் அதே போல அருகாiயையும் அகவையையும் பேணலாம். கடன் தொகையை அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறவரின் எண்ணிக்கையால் அந்த வங்கியின் முதலீட்டுத் தொகையை வகுத்து வரும் தொகையை அந்த வங்கியின் வாடிக்கையாளரின் கடன் அளவாகக் கொள்ளலாம். அதிக தொகை தேவைப்படுகிறவர்கள் பங்குச்சந்தையில் பட்டியல் இட்டு தனது நிறுவனத்தின் பங்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அவர்களின் பெயர்களில் விடுவிக்கப்படுகிற தொகையை தன் நிறுவனத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். நடப்பு பங்குச்சந்தையிலும் நடைமுறையில் இருக்கிற முதலீட்டாளர்கள் மட்டுமே இழப்பைச் சந்திப்பார்கள், தரகு நிறுவனங்களோ பங்குச்சந்தையோ இழப்பைச் சந்திக்க மாட்டா என்கிற ஏற்றதாழ்வு நடைமுறையும் களையப்பட வேண்டும். பங்கை வாங்கி விற்று ஆதாயமோ இழப்போ பெறுகிற சூதாட்ட நடைமுறை மாற வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சியில் ஈவுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் பகிர்ந்து அளிப்பது முதலீட்டாளர்களின் ஆதாயமாக மாற்றப்பட வேண்டும். இந்த வகைக்கு பங்குசந்தை இவ்வளவு விரிவாகத் தேவைப்படாது. தரகு நிறுவனங்கள் தேவையேபட மாட்டா. இவைகள் தொழில் நிறுவனத்தின் வருமானத்தில் அமர்ந்து சாப்பிடுகிற வகைமைகளே. வரிசையில் இடத்தையும் காலத்தையும் முதன்;மையாக்குவதால்- அனைவருக்கும் வாய்ப்பு பகிரப்படும். மனிதனின் ஏழாம் அறிவு தொடர்ந்து வளரும். ஏற்றதாழ்வு களையப்படும். அதிகாரம் தனிஇன தனிக்குழுவின் சொத்தாக இருக்காது. அரசுக்கு வருமானவரித்துறையின் மூலம் பெறும் வரிகள் தேவைப்படாது. சரக்கு சேவைவரி பதினெட்டு விழுக்காடு என்பதெல்லாம் மிக மிகக் கொடுமையே. கருவிகள் இல்லாது நாட்டின் பெருமபான்மையோர் உழைப்பில் ஆழ்த்தப்படுகிற காரணம் பற்றியே அரசுக்கு இத்தனை கொடுமையான வரி தேவைப்படுவதாகிறது. வண்டி வாகனங்களும், நெடுஞ்சாலைகளும் இவ்வளவு தேவையில்லை. அந்த செலவில் கிராமச் சாலைகளை வெறுந்தரையில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு செப்பனிடலாம். பெட்ரோல் டீசல் செலவுகளுக்கு அன்னியச்செலாவணிகளை வீணடிக்கத் தேவை எழாது. நாட்டின் ஏற்றதாழ்வு சட்ட சமூக அமைப்பு முறைகளே அனைத்துக் குற்றங்களுக்கும் தளமாக இருக்கிறது. இந்த வரிசை முறை மாற்றப்படும் போது, இத்தனை அறங்கூற்றுமன்றங்கள், அதிகாரிகள், அதிகாரிகளுக்கு சம்பளம் என்கிற வீணடிப்புகள் எல்லாம் மக்களுக்கே பகிரப்படும்.
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்று குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல், பாலை என்று வாழ்ந்த நிலந்திருத்தியே வாழ்ந்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.