தமிழ் தழைக்க, தமிழர்கள் தான் வேண்டுமா? அல்லது தமிழார்வம் கொண்டு தமிழ் பேசுகிறவர்கள் போதுமா? என்று எனக்கு அனுப்பப்பட்ட கேள்விக்கு நான் தெரிவித்த விடையே இந்தக் கட்டுரை. 13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உங்கள் கேள்வியில் ஒருநிலைப்பாடு கருதுகோளாக இருக்கின்றது. கேள்வியின் தொனி அந்தக் கருதுகோளை நியாயப்படுத்துவதற்கானதாகத் தெரிவதை முதலில் வெளிப்படுத்தியாக வேண்டிய தேவை இருக்கிறது. எனது சொந்த வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால்;, உலகில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள்- அவர்களிடம் எனது சொந்த வீட்டைக் கொடுத்து விட்டு, நான் நடை மேடையிலோ, மரத்தடியிலோ, ஒட்டுக் குடிசையிலோ, தெருவோரம் பொறுப்பில்லாமல் அதிகாரிகளால் போடப்பட்டுள்ள பெரிய இரும்புக் குழாய்களிலோ, வாழலாமே என்று பரிந்துரைப்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி. நீங்கள் சொந்த வீடு இல்லாதவராக இருந்தால், மேற்சொன்னது போன்ற பிழைப்பில் உள்ளவராக நீங்கள் இருந்தால், சமூக நீதியில் உங்களுக்கு வீடு மறுக்கப்ட்டிருக்கிற நிலையில், என் மீதான கேள்வியாக, கேள்வி நியாயமானதுதான். வேறுவகையாக ஏதோ ஒரு காரணம் பற்றி, தொடர்ந்து வாடகை வீட்டில் வசிப்பவராகவே நீங்கள் இருந்து, நீங்கள் இப்படிச் சொன்னால் உங்களுக்கு எந்த வீட்டுக்காரரும் வீடு கொடுக்க மாட்டார்கள். நீங்கள் அவர்கள் சொந்த வீட்டை உங்கள் சொந்த வீடாக்கிக் கொண்டு விடுவீர்கள் என்று உறுதியாக நம்புவார்கள். இந்த இடத்தில் வீட்டைப் போன்றே மனித இனத்தின் அடிப்படை உடைமைகளில் ஒன்றான மொழியைப் பாதுகாப்பது பற்றி உங்கள் கேள்வி அமைந்திருக்கிறது. தமிழையே தங்கள் தாய்மொழியாக கொண்டிருந்தும், இன அடிப்படையில் தங்களை பிராம்மனர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிற தமிழகப் பார்ப்பனியர்கள், சில நேரங்களில் எங்களுக்கும் தமிழ் தெரியுந்தானே என்றும், எங்கள் மொழியுந் தமிழ்தானே என்றும் தமிழில் பிற மொழி கலப்பது வளர்ச்சிதானே என்றும் தங்கள் நிலைப்பாட்டுக்கு மட்டும் தமிழ் மீது உரிமை கொண்டாடுவார்கள். அவர்களால் தமிழ் தழைக்காதா? என்பதே உங்கள் கேள்வியின் முழு அடிப்படை என்பதும் அதுவே உங்கள் கேள்வியின் தொனி என்பதையும் இங்கே தெளிவு படுத்தியாக வேண்டும். காலம் காலமாக அவர்கள் குடியிருக்காமலே தங்கள் சொந்த வீடாக (மொழியாகக்) கொண்டாடுகிற சமஸ்கிருதத்தை எப்படி அவர்களால் தழைக்கச் செய்யவோ, பாதுகாக்கவோ முடியவில்லையோ அப்படியான நிலை தமிழுக்கும் வரவேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக இருக்க முடியும். சரி வீட்டுக்கே வருவோம். தனது சொந்த வீட்டைப் பாதுகாப்பு நோக்கத்திற்காக அடுத்தவர்களுக்குத் தாரை வார்க்கிற ஒன்றைத் தமிழனும் தமிழகத்தில் உறுதியாக இருக்க மாட்டார்கள். ஆனால் தமிழரில் பலர், தனது சொந்த மொழியான தமிழைப் பாதுகாக்கும் நோக்கமின்றி அன்னிய மொழிகளை அண்டிப் பிழைப்பவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் அண்டிப்பிழைக்கும் மொழியினராகவும் அங்கீகரிக்கப்படாமல், தமிழர்களாகவும் இல்லாமல் புதிய மொழியினமாக காலம் காலமாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக அண்மையில் அப்படி உருவான ஒரு மொழியினத்தவர்தாம் மலையாளிகள். இன்று தமிழகத்தில், சொந்த மொழி தமிழைப் பேணாத பலவகையான தங்கீலிசர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள், பார்ப்பனியச் சார்பில் பொருள் விளங்காத, வடமொழி எழுத்துகள் வருமாறு பெயர்களைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிக் கொண்டும், ஐரோப்பியச் சார்பில் ஆங்கிலமும் இல்லாத, தமிழும் இல்லாத, தங்கீலிசு மொழி பேசிக் கொண்டும் திரிகின்றார்கள். அவர்களுக்காக எந்த அயல் இனமும் தமிழைப் பாதுகாத்து அவர்களுக்கு வழங்கவோ அவர்களைத் மீண்டும் தமிழர்களாக மாற்றவோ முடியாது. அவர்கள் ஆங்கிலக் கலப்பு விழுக்காட்டு அடிப்படையில் பல்வேறு தங்கிலீச மொழிக் குடும்பமாக தனித்தனி இனங்களாக கிளைப்பார்கள் என்பதே கடந்த கால தமிழ்மொழிக்கான வரலாறு உணர்த்தும் செய்தியாகும். தாய் தன் மூச்சுக்காற்றால் தந்த தமிழைப் பாதுகாக்கிறவர்களிடம் மட்டுமே அவர்களின் உடைமையாக அந்தத் தமிழ் இருந்து கொண்டிருக்கும். தமிழ்! என்தாயின் மூச்சுகாற்றால் எனக்கு வழங்கப்பட்ட என்னுடைய உயிர். இறப்பும் கூட என்னுடைய உடலுக்கு மட்டுமே; என்னுடைய உயிருக்கு அல்ல.
ஆனால், சொந்த மொழி, தாய் மொழி அப்படியானது அன்று. என் தாய், தனது குருதியைப் பாலாக்கி எனக்கு உடலும், தனது மூச்சுக்காற்;றை ஒலியாக்கி எனக்கு உயிருடைமை மொழியும் தந்திருக்கின்றார்கள். இவைகள் எனது தாய் எனக்கு வழங்கிய முதல் உடைமைகள். இந்த இரண்டும் சமூகம் சார்ந்தவைகள் அல்ல. எனக்கான தனிஉடைமைகள்.