Show all

கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும்

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. கடவுளுக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். கடவுள் குறித்து ஓரளவிற்கான புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் கடவுள் குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். 

1. கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேரடியான பொருளில் உலகில் எந்த மொழியாவது சொல்லைக் கொண்டுள்ளதா?
கொண்டிருக்க வில்லை.

2. கடவுள் என்பதற்கு தமிழ் தெரிவிக்கும் பொருள் என்ன?
கடந்தும் உள்ளும் அமைவது கடவுள்.

3. கடவுள் மொத்தம் எத்தனை?
கடவுள் ஒன்றே ஒன்றுதான்

4. கடவுள் எங்கே இருக்கிறது?
எல்லையும், இயக்கமும் இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கிறது.

5. கடவுளுக்கு என்னதான் வேலை?
இயக்கமும் எல்லையும் காலக்கெடுவும் உடைய நமது- செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) ஆகியவற்றால் இயக்கம் பெற்று, அந்த இயக்கத்திற்கு எதிர் இயக்கமாக நம்மை கட்டுப்படுத்துவது கடவுளின் முழுநேர வேலை. 

6. கடவுளுக்கு உயிர் உண்டா?
இயக்கமும் எல்லையும் காலக்கெடுவும் உடைய ஓரறிவு உயிரியிலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகளுக்கு மட்டுமே கூட்டியக்கம் என்கிற உயிர் உண்டு. கடவுளுக்கு உயிர் இல்லை.

7. நம்மை படைத்தது கடவுளா?
இல்லை நம்மை யாரும் படைக்கவில்லை. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில், இடம் கடவுள் ஆகும். காலம் என்கிற தனி ஒன்றுகளின் வேறுவேறு எண்ணிக்கையிலான தான்தோன்றி கூட்டியங்கங்கள் ஆவோம் நாம். நாம் வேறுவேறாக இருப்பதற்கு எண்ணிக்கை மாற்றம் காரணம் ஆகும். 

8. கடவுள் மாறாத ஒன்றா?
இல்லை. கடவுளின் மீதான நம் இயக்கத்தால் கடவுள் 1.வெளி 2.விண்வெளி 3.விசும்பு என்கிற மூன்று நிலைகளை எய்துகிறது.

9. கடவுளை நாம் வணங்க வேண்டுமா?
கடவுளை நாம் வணங்க வேண்டியதில்லை.

10. கடவுளிடம் நாம் பேச முடியுமா?
கடவுளிடம் நாம் பேச முடியும்.

11. கடவுளிடம் நாம் என்ன பேச வேண்டும்?
உங்கள் தேவை எதுவானாலும் காலத்தை நிர்பந்திக்காமல், கமுக்கத்தை உடைக்காமல், கடவுளிடம் நீங்கள் நேரடியாக கேட்கலாம். 

12. நான் கேட்பதை எல்லாம் கடவுள் கொடுக்குமா?
நீங்கள் கேட்பது எல்லாம் உங்களுக்குக் கிடைப்பதற்கு மற்றவற்றை ஒருங்கிணைப்பது கடவுளின் வேலையாகும்.

13. யார் கடவுளிடம் அதிகம் கேட்டுப் பெறுகிறவர்கள்? 
ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் நடக்கும் ஆற்றலையும் தமிழ்ப் (எண்ணமொழி) புலமையையும் இயல்பூக்கமாகக் கேட்டுப் பெறுகிறது. வெற்றியாளர்கள் தங்கள் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடி தொடர் வெற்றிகளைக் குவிக்கிறார்கள்.

14. ஏழைகளுக்கு எதுவும் கடவுள் கொடுக்காதா?
ஏழைகள் தங்கள் ஏழ்மையையே எப்போதும் கொண்டாடுவதால், அதுவே ஏழைகளின் கேட்பு என்று கடவுள் புரிந்து கொண்டு அதையே வஞ்சனையில்லாமல் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது.

15. நான் தீமை செய்யலாமா?
நல்லதைக் கூட நீங்கள் தீமை என்று கருதினால் அதற்கான விளைவை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் தீமை என்று கருதுவதைச் செய்யக்கூடாது.

16. நான் நல்லவனாக இருந்தும் எந்த நன்மையையும் எனக்கு கடவுள் தரவில்லையே?
இது நன்மையானது, இது தீமையானது என்று கடவுளுக்குத் தெரியாது. நீங்கள் கேட்டது மட்டுமே கடவுளிடமிருந்து கிடைக்கும். கடவுள் எனக்கு எதுவும் தரவில்லை என்று புலம்புவது உங்கள் மகிழ்ச்சியாக இருக்கிற போது அதையே உங்கள் கேட்பாக கடவுள் வஞ்சனையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கும். உங்கள் புலம்பலை மாற்றிக் கொள்ளாதவரை கடவுளிடம் இருந்து நன்மையான எதுவும் பெற முடியாது.

17. பாவ, புண்ணியம் பார்ப்பவரா கடவுள்? 
பாவ, புண்ணியக் கணக்கு எழுதிக் கொண்டிருப்பது கடவுளின் வேலை அல்ல. 

18. கடவுள் நல்லவரா? கெட்டவரா?
நீங்கள் கெட்டது கேட்டால் கெட்டது தருவார். நீங்கள் நல்லது கேட்டால் நல்லது தருவார். நல்லது கெட்டது கடவுளுக்கு இல்லை. கடவுள் ஒருங்கிணைப்பாளர்.

19. கடவுளை நான் பார்க்க முடியுமா?
கடவுளைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்களால் அவர்கள் நினைக்கும் வடிவத்தில் கடவுளைப் பார்க்க முடியும். ஆனால் கடவுளைப் பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. உண்மையில் கடவுள் காட்சி அளிக்கிற ஒன்றோ உங்களிடம் பேசுகிற ஒன்றோ அல்ல.

20. கடவுளை நான் நம்பி ஆக வேண்டுமா?
கடவுளை நம்ப வேண்டியதில்லை. கடவுளிடம் இருந்து எதுவேண்டுமானலும் கேட்டுப்பெற முடியும் என்று கடவுளைப் புரிந்து கொண்டால் போதும்.

21. கடவுளிடம் எந்த மாதிரியான நேரத்தில் கேட்க வேண்டும்.
எந்த நேரத்திலும் கடவுளிடம் கேட்கலாம்.

22. கடவுளிடம் கேட்பதற்கு சிறந்த கருவி செயலா? எண்ணமா? மொழியா?
கடவுளிடம் கேட்பதற்கு செயலைக்காட்டிலும் சிறந்த கருவி எண்ணம். எண்ணத்தைக் காட்டிலும் சிறந்த கருவி தமிழ் (எண்ணமொழி).

23. கடவுளிடம் தவறாகக் கேட்டுவிட்டதை மாற்றிக் கொள்ள முடியுமா?
மாற்றிக்கொள்ள முடியும். தவறாகக் கேட்டுவிட்டதாக எந்தப் பதிவும் தேவையில்லை. மாற்றமான தேவையை மீண்டும் மீண்டும் கேட்கும் போது மாற்றிக்கொண்டதே கடவுளில் பதிவாகி நிற்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.