வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை. 16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டும் ஒன்றுதான். வடமொழியினர் தமிழ் முன்னோர்களிடமிருந்து மிக பிற்காலத்தில் கற்ற, ‘ஏதுமற்ற வெட்டவெளி’யின் வடமொழி ஆக்கம்தான் நிர்குண பரப்பிரம்மம். தமிழ்முன்னோர் நிறுவிய வழிபாட்டு மூலங்கள் கடவுள், இறை, தெய்வம் என்பன. அவற்றுள் கடவுள் என்பது ஏதுமற்ற வெட்டவெளிக்கு தமிழர் நிறுவிய பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கு 1.வெளி, 2.விண்வெளி 3.விசும்பு என்கிற மூன்று நிலைகள் உண்டு. ஏதுமற்ற வெட்டவெளி என்பது கடவுளின் 1.வெளி என்கிற ஒரு நிலை மட்டுமே. ஐந்திர ஆற்றல்களில் நிலம் நீர் தீ காற்று என்கிற நான்கு திரங்களையும் ஏதுமற்ற வெட்டவெளியில் இறைந்து கிடக்கிற நான்கு திரங்கள் என்றவகையில் இறை என்பது நிலம் நீர் தீ காற்று என்கிற நாற்திரங்களுக்கு தமிழ்முன்னோர் நிறுவிய பொருள் பொதிந்த தமிழ்ச்சொல் ஆகும். அவைகளுக்கு சுழலும் இயக்கமும் சுற்றும் இயக்கமும் (எல்லை) ஆகிய தான்தோன்றி இயக்கம் உண்டு என்கிற நிலையில் அவை எட்டு குணங்கள் என்று கொள்ளப்படுகின்றன. தமிழ்முன்னோர் தெய்வம் என்றது இந்த ஐந்திர ஆற்றல் தொய்ந்த சான்றோரை ஆகும். கடவுள் ஒன்றேயென்று. இறை நான்கு, தெய்வங்களுக்கு எல்லையே இல்லை. வீட்டுத்தெய்வம், குலதெய்வம், எல்லை தெய்வம், காவல் தெய்வம் என்று நிறைய நிறைய. இந்த தெய்வங்களை வழிபட தமிழ்முன்னோர் நாட்டியதுதான் நடுகல். இந்த நடுகல் லிங்கம் போல் இருக்கிறது என்று தொடக்கத்தில் கிண்டலடித்த பார்ப்பனியர், தங்கள்தொன்மங்களான காமசாஸ்திரம், கொக்கோகம் அடிப்படையில் லிங்கம் புனிதமானது என்று லிங்க வழிபாட்டை பேரளவாக்கினர். கடவுளின் மற்ற இருநிலைகளைப் புரந்து கொள்ள இந்த இணைப்பில் படிக்கவும். http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html
தமிழ் முன்னோர் கடவுளை ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றாகப் பட்டியல் இடுகின்றனர். கடவுளின் ஒரு நிலையான ஏதுமற்ற (இயக்கம், எல்லை) வெட்ட வெளியை ஒரு ஆற்றலாக நிறுவ முடியாது. 2.விண்வெளி 3.விசும்பு என்கிற மேலும் இரண்டு நிலைகளும் கடவுளுக்கு உண்டு என்கிற நிலையில்தான் கடவுளும் ஓர் ஆற்றலாக தமிழ்முன்னோர்களால் பட்டியல் இடப்படுகிறது. அந்த இரண்டு நிலைகளை வடமொழியினரால் அறிந்து கொள்ளவோ புரிந்;துகொள்ளவோ இயலவில்லை. அவர்கள் வெளி என்கிற ஒரு நிலையைத்தான் நிர்குண பரபிரம்மம் என்று பேசுகின்றனர். அதை பஞ்ச புதங்களில் ஒன்றாகச் சொல்லும் போது வெறுமனே ஆகாயம் என்று முடித்துக் கொள்கின்றனர்.
இந்த எட்டு குணம் இல்லாதது கடவுளின் 1.வெளி என்கிற நிலை என்று புரிந்து கொண்ட வடமொழியினர் நிர்குணம் (குணமில்லாதது) என்று தலைப்பிடுகின்றனர். மேலும் அதை பரந்த மூல முதல் என்று தாம் புரிந்துகொண்ட வகைக்கு பரப்பிரம்மம் என்று பெயரிடுகின்றனர்.