04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் இயல்பும் இருப்பும் வேறுவேறாக இருப்பதே தமிழர் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமை இன்மைக்கும் காரணம் ஆகும். தமிழர் இயல்பை- தமிழ்மொழியிலும், தமிழ்க்குடும்பக்கட்டமைப்பு அடிப்படையிலும், தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் சிலப்பதிகாரம் ஆகிய (அயலவர் இயலை அதிகம் சார்ந்திராத) பழந்தமிழர் இலக்கியங்களிலும் பதிவுகளாக மட்டுமே காணமுடியும். உலகின் எந்த இனத்தவரின் இயல்பும் இருப்பும் ஒன்றாகவே இருக்க, தமிழர் இன்றைய இருப்போ தமிழர்இயலாக இல்லாமல், அவரவர் வாழ்மானத்திற்காக- உடல்உழைப்பு கூலியாகவோ நிருவாகக்கூலியாகவோ அவரவர் சார்ந்திருக்கும், அராபிய ஆரிய ஐரோப்பிய மார்க்சிய பல்வேறுமத அடிப்படையாக அந்த ஒவ்வொரு அமைப்புகளுக்குள்ளும் பல்வேறு குழுக்களாக பல்வேறு இருப்புகளாக அமைந்து கிடக்கிறோம். ஒவ்வொரு தமிழனும், தான்- முதலாளியாக, ஆட்சியாளனாக, வணிகனாக, கலைஞனாக, படைப்பாளியாக, அறங்கூற்று ஆளனாக நிதியாள்பவனாக, கல்வியாளனாக, மொத்தத்தில் உடைமையாளனாக தம்இயல் நிறுவு முயற்சியில் களமிறங்கியாக வேண்டும். எந்த அயல்இயல்களை உடைமை தளத்தில் நிறுத்தினாலும் நாம் உரிமைக்காக எத்தனை காலமும் போராடிக் கொண்டுதான் இருக்கவேண்டும். உடைமைத்தளத்தில் இயங்குவது கடினமானதுதான் ஆனால் நிலையானது. கூலித்தளத்தில் இயங்குவதற்கு பெரிய பொறுப்பு தேவையில்லைதான் ஆனால் அது நிலையானது இல்லையே! உடைமைக்கும் உரிமைக்குமான வேறுபாட்டை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். உடைமை என்பது சொந்த வீடு. உரிமை என்பது வாடகை வீடு. உடைமை என்பது அதிகாரம். உரிமை என்பது பயன் படுத்திக் கொள்வதற்கான அனுமதி. நாம் நமது சொந்த வீட்டிற்கு வாடகை கொடுத்து வாழ்வதற்கான அனுமதி பெற்றிருக்கிறோம்; என்பதுதான் வேடிக்கை. அராபியர், ஆரியர், ஐரோப்பியர் வரவால், தமிழர் அவர்களிடம் நம் அனைத்து அடிப்படை உடைமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக உரிமைக்காக மட்டும் போராடிக் கொண்டிருக்கிறோம். பகுத்தறிவு என்பது... ஐரோப்பிய மலைப்பில், பழந்தமிழர் அறிவை- நம் வரலாற்றை- உளவியல், மருத்துவம், கணியம், வானவியல், எண்கள், கிழமைகள், தமிழ்த் தொடர் ஆண்டுக் கணக்கு, கட்டிடவியல், வேளாண்மை, பாசனவியல் போன்ற எண்ணற்ற நம் இயல்களையெல்லாம்- குழி தோண்டி புதைக்கிற மூடத்தனம்! மார்க்சியம் என்பது... உரிமைப் போரட்டத்திற்கான உலகளாவிய கூலித்தளம். போராடுவது மட்டுமே நோக்கமாக எவன் வேண்டுமானாலும் உடைமையை எடுத்துக் கெண்டு போகட்டும் என்று, பணத்தின்-உடைமையின் மீதான தீண்டாமையைக் கட்டிக்காப்பது. இன்றைக்கு மோடியின் செயல்பாடுகள்.... மோடியின் ஒவ்வொரு சிறிய செயல்பாடும் பாஜக பரிவாரங்கள் வகுத்துக் கொடுத்த அவர்கள் கட்ட முயலும் பாரத தேசத்தில் நடுவண் அரசை உடைமை கட்டுமானமாக மாற்றும் முயற்சியே. தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களுக்கும் எந்த உடமைகளும் கிடையாதுள; உரிமைகள் மட்டுமேள; மாநிலங்கள் போராடிக் கெண்டே இருக்க வேண்டும். ஆட்சி வணிகம் கலை படைப்பு அறங்கூற்று நிதி கல்வி என்பதெல்லாம் உடைமை. அவைகளிலெல்லாம் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, நிருவாக வாய்ப்பு, என்பனவெல்லாம் நமது 58 அகவை வரைக்குமான தற்காலிக அனுமதி. நம் சந்ததிகளுக்கு உதவாது. உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது. குறைந்த பட்சம் இருபது விழுக்காடு தமிழனாவது உடைமையின் பெருமையுணர்ந்து உடைமை மீட்பு முயற்சியில் ஈடுபட்டால் தாம் தமிழன் மீள்வான். அதுவரை- தமிழ் மக்களின், எந்தத் தலைவனின், எப்படியான வேறுவகை முயற்சியும் விழலுக்கிறைத்த நீரே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.