Show all

அறிவோம் தமிழ்நாடு அரசியல்!

பிரித்தானிய அடிமைத்தளையை அகற்றும் வகையான, இந்திய விடுதலைக்காக போராடியபோது, ஹிந்தி மற்றும் வடஇந்தியக் கலாச்சார ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு உட்பட்டுவிடக் கூடாது என்கிற வகைக்கு சமகாலத்தில் தமிழ்நாடு அரசியல் முதன்மைத்துவம் பெற்றது. 

22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பிரித்தானிய அடிமைத்தளையை அகற்றும் வகையான, இந்திய விடுதலைக்காக போராடியபோது, பிரித்தானிய அடிமைத்தளையை- ஹிந்தி, வடஇந்திய கலாச்சாரத்திற்கு மடைமாற்றம் செய்து கொள்ளும் வகைக்கான 'வடஇந்திய அரசியல்' இந்திய அரசியலாக முன்னெடுக்கப்பட தொடங்கியது. பிரித்தானிய அடிமைத்தளையை மடைமாற்றி, ஹிந்தி மற்றும் வடஇந்தியக் கலாச்சார ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு உட்பட்டுவிடக் கூடாது என்கிற வகைக்கு சமகாலத்தில் தமிழ்நாடு அரசியல் முதன்மைத்துவம் பெற்றது.

ஆனால்- அதை பெருங்கூட்டமாக முன்னெடுக்கவும், தென் மாநிலங்கள் அனைத்திற்கும் உரிமை கோரும் வகைக்கு என்றும், திராவிட என்ற தலைப்பில் முன்னெடுக்கப்போய், அதிலும் தமிழ்நாட்டவர்களே பெரும்பான்மை வகுத்த நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் அந்த வகைக்கு எந்த விழிப்புணர்வும் துரும்பு அளவும் இல்லாத நிலையில், வட இந்திய அரசியலை இந்திய அரசியலாக்கியதை திரவிட இயக்கங்களால் முற்றாக களைய முடியவில்லை. மாறாக சிறு சிறு உரிமைகள் மட்டுமே தக்க வைக்க முடிந்தது.

கடந்த நூற்று இருபது ஆண்டுகளாகவே தமிழ்பண்பாட்;டு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டாலும், இந்திய விடுதலைக்கு ஏழாண்டுகளுக்கு முன்பு பிரித்தானிய- இந்திய இரட்டை ஆட்சி காலத்தில், சில தென் மாநிலங்கள் தங்களுடைய பகுதியாக பிரிந்து செல்வதற்கு முந்தைய சென்னை மாகாணத்தில், காங்கிரஸ் கட்சி ஹிந்தித் திணிப்பை முன்னெடுத்தபோது தமிழ்நாடு அரசியல் களம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலமாக சூடு பிடித்தது.

திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், பார்ப்பனிய எதிர்ப்பு போன்ற கூறுகளுக்குத் தமிழ்நாட்டு அரசியல், களமாக அமைந்தது. தமிழ்நாட்டில் இன்றுவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தமிழ்தேசிய, திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. முப்பத்தைந்து ஆண்டுகள் முன்பு வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பேராளர்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, நாம்தமிழர் கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, சிறுபான்மை மக்கள் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முதன்மைத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காமராசர், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., செயலலிதா, போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியல் முதன்மை ஊன்றுகோலாக இருந்துவருகிறது என்று சொல்வது மிகையாகாது.

ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகளில் தமிழ்நாட்டை வீழ்த்திட, ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- நேற்று காங்கிரசும், இன்று பாஜகவும் தமிழ்நாட்டு அரசியலுக்கு பெரும் அறைகூவலாக இருந்து வருகின்றன.  

தமிழ்நாட்டு முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 105 ஆண்டுகளுக்கு முன்னம் டாக்டர் சி. நடேசனால், டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 101 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. 

காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு கொள்கைக்கு காங்கிரஸ்கட்சி உடன்படாதது உள்ளிட்ட காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 77 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. ஹிந்தி, வடஇந்திய கலாச்சாரத்திற்கான 'வடஇந்திய அரசியலை' இந்திய அரசியலாக முன்னெடுக்கப்பட தொடங்கியது காங்கிரஸ்.     

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு முதல்வர் பதவி ஏற்ற காமராசர், தமிழ்நாட்டில் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முதன்மைக் காரணமாக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. 

தமிழ்நாட்டு அரசியலில் மிக முதன்மையாகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி காமராசர் காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் நல்ல ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் காமராசரால் முன்னெடுக்கப்பட்டது.

ஆனாலும் ஒன்றியத்தின் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு  காமராசர் மூலமாகவே ஹிந்தித் திணிப்பைத்; தமிழ்நாட்டுக் கல்வியில் முன்னெடுத்த காரணம் பற்றி, 56 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

ஒன்றிய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தலைமைஅமைச்சராக இருந்த நேரு மூலமாக தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்யும் வகைக்கு சட்டம் இயற்றியது.

தனித்திராவிட நாடு, தனித்தமிழ்நாடு போன்ற கோரிக்கைகள் நேருவின் சட்டத்தால் குற்றமாக்கப்பட்ட நிலையில், அண்ணா அந்த வகையான கோரிக்கைகளைக் கைவிட்டார். 

தமிழ்நாட்டு மக்களால், குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை, திமுகவும் ஆதரித்து முன்னெடுத்த நிலையில் 54 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன.

அண்ணா முதலமைச்சராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழிக் கொள்கையும், சுயமரியாதைக் திருமணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முதன்மைப் பங்கு ஆற்றியது. 

எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ்.எஸ்.இராசேந்திரன், கண்ணதாசன், சிவாஜி போன்ற திரைப்பேரறிமுகங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 

அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் ஒளிரமுடியவில்லை என்றாலும், எம்.ஜி.இராமச்சந்திரன் மக்களிடையே மிகப் பேரறிமுகம் ஆனார். 

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் சுப்பரணியம் மூலமாக ஒன்றிய காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த சதியால் திமுகவிலிருந்து பிரிந்தார் எம்.ஜி.இராமச்சந்திரன். எம்.ஜி.இராமச்சந்திரன் 49 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தனி கட்சியைத் தொடங்கினார்.

தனி கட்சியைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி பெற்று தமிழ்நாட்டு  முதல்வரானார் எம்.ஜி.இராமச்சந்திரன். அவர் ஆண்ட கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. எம்.ஜி.இராமச்சந்திரன் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

பின்பு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி தமிழ்நாட்டு ஆட்சியில் அமைந்தன. இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. திரைப்பட நடிகர் விஜயகாந்த் 17 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 

தமிழ்நாட்டு அரசியலை கேள்விக்குறியாக்கும் முனைப்பில்- தமிழ்நாட்டில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு முதல்வராக பெறுப்பேற்றுள்ளார். 

ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரஸ், பாஜக முன்னெடுத்து வந்த அடாவடிகளால்- திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டு அரசியலை காற்றில் பறக்கவிட்டு விட்டு- கட்சி அரசியல், தோழியர் அரசியல் மற்றும் குடும்ப அரசியலில் திளைத்திருந்த காரணம் பற்றி- ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக தமிழ்நாட்டின் கல்வி, மருத்துவம், வரி. பணம், தொலைத்தொடர்பு, என்று பல உரிமைகளைப் பிடுங்கி ஒன்றியத்தில் குவித்து விட்டது. 

இப்படி தற்போது தமிழ்நாட்டு அரசியல் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டு அரசியலை ஓரளவு அண்ணா கால நிலைக்கு முன்னெடுப்பதற்கே அவருக்கு ஒன்றிய பாஜக ஆட்சி மிகப்பெரிய அறைகூவலாக அமைந்துள்ளது. 

சில தனியாட்களாகத் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டு அரசியலை மீட்கும் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள். எடுத்துக்காட்டுக்கு கீழடி அகழ்வாய்வில் மேற்கொள்ளப்பட்ட தில்லாலங்கடிகளை சட்டப்போராட்டம் மூலம் வீழ்த்தியது. சல்லிக்கட்டுக்கு ஆதரவாக அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் பன்னீர் செல்வத்தை டெல்லிக்கும் சென்னைக்கும் ஓடவிடும் வகைக்கு சென்னைக்கடற்கரையில் மிகப்பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தது போன்றவற்றை விளக்கலாம். இப்படி நிறைய சட்டப் போராட்டங்கள் அதுவும் சென்னை உயர்அறங்கூற்று மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதொரு ஆறுதலாக சட்டப் போராட்டங்கள் விளங்கி வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.