Show all

பாவம், புண்ணியம் குறித்த தேடல் பொல்லாங்கைத் தேடிப்போவதாகும்

வேறு ஒரு தளத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த பாவம் புண்ணியம் குறித்த வினாவிற்கு, விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

07,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் தலையெழுத்தை நீங்கள் தான் எழுதிக் கொள்ள முடியும் என்று தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவியுள்ளனர்.  

உங்கள் தலையெழுத்தை யாரும் மாற்றி எழுத முடியாது. நீங்கள் யாருக்கெல்லாம் ஒப்புக் கொடுக்கின்றீர்களோ அவர்கள் எல்லாம் உங்கள் தலையெழுத்தில் மாற்றம் செய்ய முடியும். நீங்கள் எந்தஅயல் மதம் மற்றும் அரசியல் கோட்பாடுகளை கொண்டாடினாலும் அவர்கள் உங்கள் தலையெழுத்தை மாற்ற ஒப்புதல் அளிக்கின்றீர்கள்.

எடுத்துக் காட்டுக்கு பாவம், புண்ணியம் குறித்த தேடலில், ஒரு குறிப்பிட்ட மதம் தெரிவிக்கிற கருத்துக்களை நீங்கள் உள்வாங்கி அங்கீகரித்தால் அந்தக் கருத்தின் அடிப்படையை நீங்கள் உங்கள் தலையெழுத்து ஆக்கிக் கொள்வீர்கள்.
அந்த அடிப்படையில் உங்களுக்கு பேரளவாக பாதிப்பும் சிற்றளவாக பயனும் கிடைக்கும். பேரளவு சிற்றளவிற்கு காரணம் நீங்கள் வரிசையில் நிறுத்தப்படுவதுதான்.

மாறாக நீங்கள் மட்டுமே உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்வீர்களேயானால் நீங்கள் எது பாவம் என்று கருதுகின்றீர்களோ அது மட்டுமே பாவமாக கருதப்பட்டு நீங்கள் பாதிப்படைவீர்கள். 

மாறாக நீங்கள் மட்டுமே உங்கள் தலையெழுத்தை எழுதிக் கொள்வீர்களேயானால் நீங்கள் எது புண்ணியம் என்று கருதுகின்றீர்களோ அது மட்டுமே புண்ணியமாகக் கருதப்பட்டு நீங்கள் பலனடைவீர்கள்.

பாவம் புண்ணியம் என்ற வரையறை கடவுளிடம் கிடையாது. நீங்கள் எதையெல்லாம் பாவம் என்று கருதுகின்றீர்களோ அதுவெல்லாம் பாவம் என்று கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை நீங்கள் முன்னெடுக்கும் வகைக்கு உங்களுக்குப் பாதிப்பு கிடைக்கும்.

புண்ணியம் பாவம் என்ற வரையறை கடவுளிடம் கிடையாது. நீங்கள் எதையெல்லாம் புண்ணியம் என்று கருதுகின்றீர்களோ அதுவெல்லாம் புண்ணியம் என்று கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை நீங்கள் முன்னெடுக்கும் வகைக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

பாவம் புண்ணியம் குறித்த உங்கள் சொந்தக் கருதுகோளை நீங்கள் நிருவகிப்பது எளிது. பாவம் புண்ணியம் குறித்த அயல் கருதுகோளில் நீங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு அலைகழிக்கப்படுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக- கெட்டவர்கள் மட்டுமே அல்லது பாவம் செய்கிறவர்கள் மட்டுமே நன்றாக இருப்பதாகவும் வசதியாக வாழ்வதாகவும் நீங்கள் பட்டியல் இடுவீர்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செய்துவருவது பாவம் என்று இம்மியளவும் கருதியிராத போது எப்படி அவர்களுக்கு பாதிப்பு வரும்? 

அவர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து வருவதாக கருதியிருப்பதால் அவர்கள் நன்றாகவும் வசதியாகவும் இருக்கிறார்கள் என்பதே உறுதியான உண்மை! அவர்கள் தங்கள் தலையெழுத்தை நன்றாகவும் வசதியாகவும் இருப்பதற்கு தெளிவாக எழுதுகிறார்கள். 

நீங்கள் உங்கள் கடமையில் ஈடுபட்டிருங்கள். உங்கள் கடமை கேட்கிற வேலையை ஐயம் கொள்ளாமல் செய்து முடியுங்கள். நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் பிள்ளைகள், மருமக்கள் பேரக்குழந்தைகள் இவைகளே உங்கள் வட்டம். இந்த வட்டத்தில் நீங்கள் உறுதியாக கடமையாற்றுங்கள். 

பாவம், புண்ணியம் குறித்த அயல்கருத்துக்களைக் காதில் வாங்காதீர்கள். ஏதாவதொன்றில் நீங்கள் செய்வது சரியானதல்ல என்று உங்களுக்கு உறுத்தல் ஏற்படுமானால் அதிலிருந்து முழுமையாக விலகுங்கள். பாவம் புண்ணியம் குறித்த சிந்தனையோ தேடலோ எப்போதும் வேண்டாம். அது பொல்லாங்குப் பாதையாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,500.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.