பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவர். சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்ததென்னவோ 32 ஆண்டுகள்தான். அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை. தமிழ்மொழியை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான். 1870ல் பிறந்த இவர் கலைமுதுவர் தேர்வில் மாநில அளவில் முதலாவதாக தேறியவர். தனித்தமிழ் இயக்கத்துக்கு முன்பே தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். இவரது “தமிழ் மொழி வரலாறு” மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.