Show all

வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா!

வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா? என்று ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கான எனது விடைதான் இந்தக் கட்டுரை.  

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தான்தோன்றியாக தோன்றினோம். நமக்கான விதிகளை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம். நம்மை யாரும் படைக்கவில்லை. தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன. என்பதே தமிழர் கோட்பாடு. பாவம், புண்ணியம் என்பதில் எல்லாம் தமிழர்க்கு உடன்பாடு இல்லை. 

உயிருக்கான அடிப்படை இல்லாத பொருள் எதுவும் இல்லை. அடிப்படை பொருட்களான நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களுக்கு இயக்கம் இருக்கிறது. ஐந்தாவது திரமான விசும்புவிற்கு தான்தோன்றி இயக்கம் இல்லை. 

நாற்திரங்களிலிருந்தே உருவான தாவரம், விலங்குகளுக்கு கூட்டியக்கம் என்கிற உயிர் இருக்கிறது. தாவரம் விலங்கு என்பது தற்கால நடைமுறை. தமிழ் முன்னோர் ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை கூட்டியக்கம் உள்ள உயிரினங்களை வகைப்படுத்துகின்றனர்.
ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே

அந்த ஆறறிவு உயிரினங்களைக் கீழ்கண்டவாறு பட்டியல் இடுகின்றனர் தமிழ் முன்னோர் என்று தொல்காப்பியம் தெரிவிக்கிறது. அந்த நூற்பா:

புல்லும்மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈர்அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
வண்டும் தும்பியும் நான்கறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவினவே
என்பதாகும். 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்று சித்தர்கள் பேசுவார்கள். 

ஆக நீங்கள் தனிமங்கள், கலவைகள், கூட்டுப்பொருட்கள் என்று பேசப்படுகிற நாற்திரங்களை உணவாகக் கொள்ளும் போது அது உங்களுக்குள் சென்றும் இயங்கும். 

தாவரங்கள் விலங்குகள் என்று ஓரறிவுயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரை உள்ளவைகளை உணவாக கொள்ளும் போது அவற்றின் கூட்டியக்கம் சிதைக்கப்பட்டு தனிமங்கள், கலவைகள், கூட்டுப்பொருட்கள் என்று பேசப்படுகிற நாற்திரங்களால் ஆன உணவாக செரிக்கப்படுகிறது. 

ஓரறிவு உள்ள புல்லின் கூட்டியக்கத்தை சிதைக்கும் போது அதுவும் வலியை வெளிப்படுத்தும். ஆனால் அது வலியை வெளிப்படுத்துவதை நாம் உணர்வதில்லை. ஐந்தறிவு கோழியின் கூட்டியக்கத்தை சிதைக்கும் போது அது  வலியை வெளிப்படுத்துவதை நாம் உணர முடிகிறது. 

வலியை உணர்ந்தும் அதன் கூட்டியக்கத்தை நாம் சிதைப்பதாக கருதுகிறவர்கள் அதை செய்யக்கூடாது. அப்படி செய்வதால் என்னென்ன நேரும் என்று நீங்கள் உங்களுக்கு விதி எழுதிக் கொள்கின்றீர்களோ அதெல்லாம் உங்களுக்கு கொஞ்சமாவது நடக்கத்தான் செய்யும். ஆனால் உங்களுக்கு வாடகைக்கு வீடு விட்டவருக்கும் துன்பம் வரவேண்டும் என்றெல்லாம் நீங்கள் விதி எழுத முடியாது.

கோழியை உண்பது வழிவழியான பழக்கமாக கருத்தேதும் இல்லாமல் நீங்கள் உண்டால், உங்களுக்கு இன்னின்ன துன்பம் நேரும் என்று யாரும் எழுத முடியாது. ஆனால் அப்படி எழுதுகின்றன மதங்கள். காரணம் மதங்கள் படைப்புக் கோட்பாட்டை நிறுவ முயல்கின்றவைகள். 

இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ள நீங்கள் விரும்பினால் மௌவல் செய்திகளின் ஆசிரியர் பக்கத்தில் அதற்கான கட்டுரைகள் நிறையவே எழுதப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.