உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின் வரலாறு மற்றும் சுவையான தகவல்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா? என்று என்னிடம் வினவப்பட்ட வினாவுக்கான விடை 11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின் வரலாறு மற்றும் சுவையான தகவல்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா? ஏனை நோக்கி வைக்கப்பட்ட இப்படியொரு வினாவிற்கு விடை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உணருகிறேன். உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த நிறுவனம் கூகுள். இந்தியா, விடுதலை பெற்று எழுபத்தி நான்காவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய ஆட்சியில் காங்கிரஸ், பாஜக என்று ஆட்சி மாறினாலும், இரண்டு கட்சிகளுமே வடநாட்டுத் தலைவர்களின் ஆதிக்கக் கட்சிகளே என்கிற நிலையில், ஹிந்தித் திணிப்பும், ஆங்கில மொழி நிருவாகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழகம் மட்டுமே போராடி, இந்திய மாநிலங்கள், மற்றும் மொழிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வண்ணமாக 1.மொழிவழி மாநிலங்கள், 2.இந்தியாவின் நிருவாக மொழிகள், ‘தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள்’ என்று அட்டவணை எட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் நிறுவியிருக்கிறது. ஆனால் இந்திய ஒன்றிய- நேற்றைய காங்கிரசு அரசும், இன்றைய பாஜக அரசும் ஒன்றிய நிருவாகத்தில் தமிழ் உள்ளிட்ட அந்த 22 மொழிகளை நிறுவ முயலவேயில்லை. மாறாக தொடர்ந்து ஹிந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தனியார் பன்னாட்டு நிறுவனமான கூகுள்- தமிழ் உள்ளிட்ட உலகின் 108 மொழிகளுக்கு சிறப்பான தேடல், பயன்பாடு, மற்றும் நிருவாக வாய்ப்பை வழங்குகிறது. கூகுள் தேடலில் தமிழ் உள்ளிட்ட உலகின் 108 மொழிகளில் தட்டச்சு செய்து தேடவும், தேடி அந்தந்த மொழிகளில் தகவல் பெறவும் முடியும். கூகுள் மொழிபெயர்ப்பில், தமிழ் உள்ளிட்ட உலகின் 108 மொழிகளிலும் தட்டச்சு செய்வதற்கும், ஒன்றிற்கு ஒன்று மொழிமாற்றம் செய்வதற்கும் அந்தந்த மொழிகளுக்கான எழுத்துப்பலகையை அமைத்துள்ளதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் எந்த இணையத் தளத்திலும் ஹிந்தி ஆங்கிலம் தவிர்த்து- இந்தியா அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, தமிழ் உள்ளிட்ட அட்டவணை எட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழியும் செல்லுபடி ஆகா நிலை தொடர்கிறது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் 22 மொழிகளுக்கு இடையில் பேணமுடியாத நிருவாக சமவாய்ப்பை ஒரு தனியார் நிறுவனமான கூகுள் 108 மொழிகளுக்கு இடையே அருமையான நிருவாக சமவாய்ப்பை வழங்குகிறது என்றால் அந்த நிறுவனம் எவ்வளவு போற்றுதற்கு உரியது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தப் பெருமை மிகுந்த நிறுவனமாக கூகுள்- ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர் நெறியைக் கொண்டாடுவதோடு அந்த நெறிக்குச் சொந்தமான மொழியின் பிள்ளையான சுந்தர்பிச்சையைத் தலைவராகக் கொண்டிருப்பது அந்த நிறுவனத்தைக் கொண்டாடக் எனக்குக் கிடைத்திட்ட மேலும் இரு சிறப்புக் காரணங்கள் ஆகும். கூகுள், அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். 22 ஆண்டுகளுக்கு முன்பு லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம் எனது பாராட்டிற்குரிய கூகுள். முழுமையாகப் பயன்படும் வகையில், உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே, கூகுளின் நோக்கமாகும். ‘தீமைத் தன்மை இல்லாதிருத்தல்’ என்பது கூகுளின் அதிகாரப்பாடற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகுள் பொறியாளரின் கூற்றாகும். உலகம் முழுதும், பத்;து இலட்சத்திற்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாகவும், ஒரு நாளில் நூறு கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்து நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கூகுளின் மிக விரைவான வளர்ச்சியினூடே, பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மின் அஞ்சல், கூகுள் ஆவணம், கூகுள் குவியம், கூகுள் வரைபடம், கூகுள் வலைப்பூ, வலையொளி, கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற கூகுள் பயன்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம், கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை, உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது. கூகுள் குரோம் என்னும் உலவியை, கூகுள் வெளியிடுகிறது. அண்மைக் காலத்தில் அண்ட்ராய்டு என்னும் செல்பேசி இயக்கு மென்பொருள், அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை, கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது.